வடிவேலுவுக்கு கிளிக் ஆயிடுச்சு ஆனா... விவேக் ஹீரோவாக அறிமுகமான 'மகனே என் மருமகனே' வெளியான நாள்...
14 years of Magane En Marumagane: நடிகர் விவேக் ஹீரோவாக அறிமுகமான ''மகனே என் மருமகனே'' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவு.
காமெடியன்களாக கலக்கிய பலரும் ஹீரோவாக ஆசைப்பட்டு அதில் வெற்றி கண்டவர் ஒரு சிலர்தான். அந்த பட்டியலில் வைகை புயல் வடிவேலு ஒரு தனி ட்ராக் மூலம் காமெடியில் கலக்கி வந்த வேளையில் முழு நீள நகைச்சுவை படமான 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்ததுடன் நல்ல வரவேற்பையும் பெற்று கொடுத்தது. அதை தெடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகளும் வந்தன.
சிந்தனை தூண்டும் காமெடிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் ரசிகர்களின் ஃபேவரட் காமெடியனாக இருந்தவர் சின்ன கலைவாணர் விவேக். அவருக்கும் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்தது. 'சொல்லி அடிப்பேன்' என திரைப்படத்தின் ஹீரோவாக நடித்து இருந்தார். ஆனால் அப்படம் ஒரு சில காரணங்களால் வெளிவராமல் போனது.
அடுத்ததாக காமெடி கலந்த மிடில் கிளாஸ் கதைகளை உருவாக்குவதில் கெட்டிக்காரரான டி.பி.கஜேந்திரனின் படைப்புகளில் ஒன்றான 'மகனே என் மருமகனே' திரைப்படத்தின் மூலம் ஹீரோவானார் விவேக்.
நாசர், சரண்யா பொன்வண்ணன், லிவிங்ஸ்டன், தம்பி ராமையா, பறவை முனியம்மா, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் 2010ம் ஆண்டு இதே தினத்தில் வெளியானது. இப்படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
விவேக் கதாநாயகன் என்பதால் படம் முழுக்க சிரிப்பலைகளாக இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு சற்று ஏமாற்றம் தான் மிஞ்சியது. வழக்கம் போல விவேக் தன்னுடைய டயலாக் டெலிவரி மூலம் கைதட்டல்களை அள்ளினாலும் வடிவேலு அளவுக்கு அவரால் பாடி லாங்குவேஜில் கலக்க முடியவில்லை. சில இடங்களில் டான்ஸ் கூட ஆடி ரசிகர்களை கவர முயற்சி செய்தார். காமெடியனாக அவர் சிரிக்க வைத்து பழகிய ரசிகர்களுக்கு அவர் சீரியஸாக நடித்ததை அவ்வளவாக ஏற்று கொள்ள முடியாமல் போனது.
இருப்பினும் தன்னை நிரூபித்தே ஆக வேண்டும் என அதை தொடர்ந்து செந்தூர தேவி, நான் தான் பாலா, பாலக்காடு மாதவன், எழுமீன் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்து இருந்தாலும் வடிவேலுவால் ஹீரோவாக எட்டிய இடத்தை விவேக் எட்டிப் பிடிக்க நினைத்தாலும் முடியவில்லை.
விவேக்குக்கென தனி ஸ்டைல் உள்ளது. அதை இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அவரின் அபாரமான நடிப்பு திறமையால் காமெடி மட்டுமின்றி குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கியுள்ளார் என்றாலும் ஹீரோவால் அந்த அளவுக்கு கவனம் ஈர்க்க முடியவில்லை.