Actor Vimal: ‘எனக்கு நானே போட்டி..’ ஒரே நாளில் இரண்டு படங்கள்.. மீண்டும் விமல் கம்பேக் தருவாரா?
Actor Vimal: பல வெற்றி படங்களில் நடித்து, கேலக்சி ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் விமலின் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது.
தமிழ் திரையுலகில் துணை நடிகர்களாக இருந்து ஹீரோக்களாக வளர்ந்தவர்களுள் முக்கியமான ஒருவர், விமல். நடிகர் விஜய் நடித்திருந்த ‘கில்லி’ மற்றும் ‘குருவி’ ஆகிய படங்களில் அவரின் நண்பர்களில் ஒருவராக நடித்திருந்த இவர், வருடங்கள் வளர வளர திரைத்துறையிலும் வளர்ந்து கொண்டேயிருந்தார். இப்போது, அவரது இரண்டு படங்களான குலசாமி மற்றும் தெய்வ மச்சான் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன.
ஒரே நாளில் இரண்டு படங்கள்!
திரைப்பட நடிகரும் இயக்குநருமான நடிகர் சரவண சக்தி, இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் குலசாமி. இப்படத்தில், விமலுக்கு ஜோடியாக தடம் படத்தில் நடித்திருந்த தான்யா ஹோப் நடித்துள்ளார். இவர்கள் மட்டுமன்றி, நடிகை வினோதினி, நடிகர் மகாநதி சங்கர் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இப்படத்திற்கு, நடிகர் விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார்.
விலங்கு வெப் தொடருக்கு பிறகு, விமலிற்கு இப்படம் மாஸ் என்ட்ரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அதில், விமலின் கிராமத்து லுக் மிகவும் கச்சிதகமாக உள்ளதாக பலர் கருத்து தெரிவித்தனர்.
குலசாமி படத்துடன் சேர்ந்து, விமலின் தெய்வ மச்சான் என்ற படமும் வெளியாகிறது. இப்படத்தில் விமலுடன் இணைந்து அனிதா சம்பத், ஆடுகளம் நரேன், தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிராமத்தில் வாழும் அண்ணன் தங்கையின் பாசத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்தான் தெய்வ மச்சான். விமல் நடித்துள்ள குலசாமி-தெய்வ மச்சான் ஆகிய இரண்டு படங்களுமே வரும் 21ஆம் தேதியன்று வெளியாகிறது.
கம்-பேக் கொடுப்பாரா விமல்?
பசங்க படத்தில் நடித்து பலருக்கும் பரிச்சியமான முகமான நடிகர் விமல், களவாணி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதில், இவரது கேஷுவலான நடிப்பு பலருக்கும் பிடித்துப்போனது. நேர்த்தியான கதைகளை தேர்ந்தெடுப்பதற்கு பெயர் போனவர், நடிகர் விமல். அதிலும் கிராமத்து பின்னணிகளை கொண்ட படங்களில், அந்த கதாப்பாத்திரமாகவே ஒன்றி விடுவார். அதற்கு சான்றாக தூங்கா நகரம், களவாணி ஆகிய படங்களை கூறலாம்.
அது மட்டுமன்றி, தேசிங்கு ராஜா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு போன்ற காமெடி படங்களிலும் கலக்கியவர் விமல். கடந்த ஆண்டு வெளியான விலங்கு எனும் வெப் தொடரில் தனது முழு உழைப்பைப் போட்டு நல்ல நடிகர் என பெயர் எடுத்தவர் விமல். இருப்பினும், சமீபத்தில் வெளியான அவரது படங்கள் பெரிதாக வெற்றிபெறவில்லை. இப்போது ஒரே நாளில் வெளியாகவுள்ள அவரது படம் மூலம் கண்டிப்பாக கம்-பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.