Thamilaga Vettri Kazhagam : மாஸ் காட்டும் தமிழக வெற்றிக் கழகம்! களம் இறங்குவதற்கு முன்னர் நற்பணிகள்..
Thamilaga Vettri Kazhagam : நடிகர் விஜய் தன்னுடைய 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் சார்பில் முதற்கட்டமாக 7 இலவச வீடுகளை நலிவடைந்த மக்களுக்கு கட்டிக் கொடுத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் இறங்குவது குறித்த பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற தனி கட்சியை துவங்கினார். அது மட்டுமின்றி தற்போது அவர் நடித்து வரும் 'GOAT' மற்றும் அடுத்தாக அவர் ஒப்பந்தமாகியுள்ள படத்தில் நடித்து முடித்த பிறகு நடிப்பதில் இருந்து முற்றிலுமாக விலகி அரசியலில் கவனம் செலுத்த போவதாக தெரிவித்து இருந்தார். மேலும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களம் இறங்க உள்ளதாக தெரிவித்து இருந்தார். மக்கள் அவருக்கு கொடுத்த ஆதரவையும் அன்பையும் அவர்களுக்கு திருப்பி செலுத்தி தன்னுடைய நன்றி கடனை செலுத்த போவதாக தெரிவித்து இருந்தார் நடிகர் விஜய்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியதில் இருந்தே பல விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தாலும் அது எதையுமே பொருட்படுத்தாமல் தன்னுடைய மக்கள் பணியை தொடர்ந்து செய்து வருகிறார். சினிமாவில் ஒரு பக்கம் பிஸியாக இருந்த போதிலும் தன்னுடைய நிர்வாகிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நற்பணிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் கும்மிடிப்பூண்டி மாவட்டத்தை சேர்ந்த நலிவடைந்த குடும்பங்களுக்கு இலவசமாக வீடு கட்டி கொடுத்துள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி. வீட்டுடன் சேர்த்து வீட்டுக்கு தேவையான வீட்டு உபகரண பொருட்களையும் வழங்கி வருகிறார். அதன் முதற்கட்டமாக 7 ஓட்டு வீடுகள் தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. அதனை தமிழக வெற்றிக் கழகம் கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. விஜய்யின் இந்த செயல் மக்கள் மத்தியில் நல்ல ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியோடு பல கட்சிகள் கூட்டணி வைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் நடிகர் விஜய் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவே விருப்பம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு இதை செய்வேன் அதை செய்வேன் என பலரும் பல வாக்குறுதிகளை அள்ளி வீசுவது வழக்கமான ஒன்று. ஆனால் ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி தனி கட்சியை துவங்கியதுடன் உடனே மக்கள் நல பணிகளில் முழு முனைப்புடன் ஈடுபடும் விஜய்யை பார்த்து மக்கள் பூரித்து போய் உள்ளார்கள். அது மட்டுமின்றி 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சி மூலம் மேலும் பல புதிய நல திட்டங்களை மக்களுக்காக செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.