Priyanka Upendra: அஜித் பட நடிகையிடம் சைபர் மோசடி.. பறிபோன ரூ.1.5 லட்சம்.. நடந்தது என்ன?
தமிழில் அஜித் நடித்த ராஜா, விக்ரம் நடித்த காதல் சடுகுடு ஆகிய படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பிரியங்கா திரிவேதி. கன்னட நடிகர் உபேந்திராவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

பிரபல கன்னட நடிகையும், நடிகர் உபேந்திராவின் மனைவியுமான பிரியங்கா திரிவேதியிடம் சைபர் மோசடி நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பீகாரைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தொடர்ச்சியாக அரங்கேறும் மோசடி
தொழில்நுட்பங்களின் வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் கணிக்க முடியாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதனைக் கொண்டு கோடிக்கணக்கான மக்கள் பயன்பெற்று வரும் வேளையில், இத்தகைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடி நடைபெறுவதும் வாடிக்கையாக வருகிறது. அந்த வகையில் ஓடிபி கேட்பது, பிரபல நிறுவனங்களின் பெயரில் லிங்க் அனுப்பி கிளிக் செய்ய சொல்வது, டிஜிட்டர் அரெஸ்ட் என்ற பெயரில் மிரட்டுவது என தொடர்ச்சியாக குற்றங்கள் அரங்கேறி வருகிறது.
இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஆகியவை கொடுத்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் பிரபல நடிகை பிரியங்கா திரிவேதியும் இத்தகைய சைபர் மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பிரியங்கா திரிவேதியிடம் கைவரிசை
தமிழில் அஜித் நடித்த ராஜா, விக்ரம் நடித்த காதல் சடுகுடு ஆகிய படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பிரியங்கா திரிவேதி. கன்னட நடிகர் உபேந்திராவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இதனிடையே, காவல்துறையினர் தெரிவித்த கூற்றுப்படி, கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி பிரியங்கா திரிவேதி ஆன்லைனில் ஒரு பொருளை ஆர்டர் செய்ய முடிவு செய்து அதற்கான வழிமுறைகளை மேற்கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக அவரது மொபைல் போனுக்கு ஒரு இணைப்பு வந்துள்ளது. பிரியங்கா அதை தான் ஆர்டர் செய்த பொருளுக்குரிய லிங்க் என நினைத்து கிளிக் செய்துள்ளார். அவ்வளவு தான். அடுத்த நொடியே அவரது வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. அதில் பல நபர்களுக்கு அவசரமாக ரூ.55,000 தேவைப்படுகிறது. உடனே பரிமாற்றம் செய்யுமாறு மெசெஜ் அனுப்பப்பட்டுள்ளது.
பிரியங்கா திரிவேதியின் வாட்ஸ்அப் எண்ணில் இருந்து இப்படி ஒரு தகவல் வந்துள்ளதே, அது உண்மையானது தான் என்று கருதி பலர் பணம் அனுப்பியுள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால் அவரின் மகனுக்கு அந்த மெசெஜ் சென்ற நிலையில் அவர் ரூ.50 ஆயிரம் பண பரிமாற்றம் செய்துள்ளார்.
சிக்கிய பீகார் நபர்
பண பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதாக பலரும் ஸ்கிரீன்ஷான் அனுப்பியதை கண்ட பிறகே தன்னுடைய மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதை உணர்ந்த பிரியங்கா உணர்ந்துள்ளார். சுதாரிப்பதற்குள் சுமார் 1.5 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் நடந்த சம்பவம் தொடர்பாக நடிகை பிரியங்கா திரிவேதி சதாசிவநகர் போலீசில் புகார் அளித்தார். உடனடியாக களத்தில் இறங்கிய சைபர் போலீசார் மோசடியானது பீகாரில் உள்ள தஷ்ரத்பூரில் இருந்து அரங்கேற்றப்பட்டதை கண்டறிந்தனர்.
தொடர்ந்து பீகார் விரைந்த காவல்துறையினர் குமார் மற்றும் அவரது கூட்டாளிகளைப் பற்றி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அனைவரும் மிகப்பெரிய அளவில் தொடர்ச்சியாக சைபர் மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து குமார் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டார். இந்த வழக்கை மத்திய பிரிவு சைபர் காவல்துறை மற்றும் சதாசிவநகர் காவல்துறை இணைந்து விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





















