Thalapathy Vijay: “நடிகர் விஜய்க்கு விழுந்த அடி” - நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பரபரப்பு ..அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதற்கான சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்றார்.
தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க சென்ற இடத்தில் நடிகர் விஜய்க்கு அடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குமரிக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்தது. இதன் காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதில் ஏராளமான மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இயல்பு நிலை திரும்பவே இரண்டு மாவட்டங்களில் கிட்டதட்ட ஒரு வாரத்திற்கும் மேலானது. இன்னும் முழுமையாக நிலைமை சீரடையாத நிலையில், தமிழ்நாடு அரசு இரண்டு மாவட்டங்களிலும் ரூ.6000 நிவாரணம் வழங்குவதாக அறிவித்தது.
இதனிடையே நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதற்கான சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்ற அவர் பின் அங்கிருந்து கார் மூலம் நெல்லை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் கேடிசி நகர் பகுதியில் உள்ள மாதா மாளிகை எனப்படும் திருமண மண்டபத்துக்கு வருகை தந்தார். கிட்டதட்ட ஆயிரம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை விஜய் வழங்கினார்.
இதற்கிடையில் விஜய்யை காண ஏராளமான ரசிகர்களும், பொதுமக்களும் மாதா மாளிகை அருகே கூடியதால் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் டோக்கன் இருந்தால் மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்திற்கு அனுமதி என்ற நிலையில் பலரும் திருமண மண்டபத்தை சூழந்தனர். இதனால் வாசலில் இருந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு விஜய்யை அழைத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
அவர் உள்ளே செல்லும் வகையில் மட்டுமே வாயில் கதவு சிறிய அளவு திறந்து வைக்கப்பட்டது. விஜய் உள்ளே நுழைந்தவுடன் கதவை மூட மக்கள் இயக்கத்தினர் முயன்றனர். ஆனால் அந்த கதவை வேகமாக தள்ளியதில் அது விஜய் மேல் பலமாக தாக்கியது. இதில் அவர் கீழே விழ போனார். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் இயக்க நிர்வாகிகள் விஜய்யை கீழே விழாமல் தாங்கி கொண்டனர். இந்த சம்பவம் அந்த விழாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.