Actor Suriya: 'ஜெய்பீம்' படத்தின் நோக்கம் நிறைவேறியது.. முதலமைச்சருக்கு நன்றி.. சூர்யா உணர்ச்சிகர ட்வீட்!
தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு, கிடைத்திருக்கும் நன்மைகள், படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்” - சூர்யா
ஜெய் பீம் திரைப்படம் வெளியாகி நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா பதிவிட்டுள்ளார்.
ஜெய் பீம்
கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கின் மத்தியில் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் T.J.ஞானவேல் இயக்கத்தில், சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’.
2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்த நிலையில், ராஜாக்கண்ணு - செங்கேணி என்ற இருளர் சமூகத்து தம்பதியின் மீது நிகழ்த்தப்பட்ட போலீஸ் வன்முறை, ஒடுக்கப்பட்ட அம்மக்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் துன்பங்கள், சாதிய பாகுபாடு, லாக் அப் மரணம், மனித உரிமை மீறல்கள், இவர்களின் சட்டப் போராட்டம் ஆகியவற்றை ஒளிவுமறைவின்றி பேசி காண்போரைக் கண்கலங்க வைத்தது.
பாராட்டும் சர்ச்சையும்
கொரோனா ஊரடங்கின் மத்தியில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான இப்படம், பேசுபொருளாக மாறியது. மற்றொருபுறம் குறிப்பிட்ட சாதியினரை தவறாக சித்தரித்ததாக இப்படம் பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்தது.
ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் கதாபாத்திரத்தைத் தழுவி சூர்யாவின் கதாபாத்திரம் இப்படத்தில் வடிவமைக்கப்பட்ட நிலையில், உண்மைக் கதைகளை மையப்படுத்தி இப்படம் அமைந்திருந்தது. ராஜாக்கண்ணுவாக நடித்த மணிகண்டனின் யதார்த்த நடிப்பு, அவரது மனைவியாக நடித்த அனுமோல் ஜோஸ், இவர்களுக்காக சட்டப்போராட்டத்தை மேற்கொண்ட நீதிபதியாக சூர்யா என அனைவரது நடிப்பும் பெரும் பாராட்டுகளைக் குவித்தது.
பல சர்சைகளை இப்படம் சந்தித்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்பிய ஜெய் பீம் கடந்த 2 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜெய் பீம் படம் வெளியாகி நேற்றுடன் 2 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், இணையதளங்களில் ரசிகர்கள் படத்தை நினைவுகூர்ந்து பாராட்டி வருகின்றனர். இவற்றுக்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் சூர்யா பதிவிட்டிருந்ததாவது:
சூர்யா ட்வீட்
“ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும் வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம்.
நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு, கிடைத்திருக்கும் நன்மைகள், எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு முதல்வருக்கும் அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்” என தன் எக்ஸ் (ட்விட்டர்) தள கணக்கில் சூர்யா பதிவிட்டுள்ளார்.
மேலும் தனது பதிவுடன் இருளர் சமூகத்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டது குறித்த தகவல்களையும் சூர்யா இணைத்துள்ளார்.
அதில் இருளர் சமூகத்து மக்களுக்கு 11,379 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன, 59ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சாதிச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன என்பன உள்ளிட்ட தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
— Suriya Sivakumar (@Suriya_offl) November 2, 2023
திரைப்படம்… pic.twitter.com/kW25rvVgGM
புறக்கணிக்கப்பட்ட தேசிய விருது
கடந்த ஆகஸ்ட் மாதம் 2021ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த விழாவில் ஜெய் பீம் புறக்கணிக்கப்பட்டது பெரும் எதிர்ப்பலைகளைப் பெற்றது. மேலும், தமிழ் சினிமா தாண்டி, தெலுங்கு உள்ளிட்ட பிற தென்னிந்திய மொழி நடிகர்களும் ஜெய் பீம் படத்துக்கு ஆதரவாக குரல்களை உயர்த்திய நிலையில், சமூக வலைதளங்களிலும் கடும் அதிருப்தி அலை தென்பட்டது.
குறிப்பாக நடிகர் மணிகண்டன், நடிகை அனுமோல் இருவரும் தேசிய விருதுகளில் அங்கீகரிக்கப்படாதது தமிழ் சினிமா ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.