S V Shekhar: சித்தார்த்துக்கு தைரியம் இல்ல... நான் பாஜகனு என்கூட நடிக்கல... விழா மேடையில் சட்டென கோபப்பட்ட எஸ்.வி.சேகர்!
வராஹ சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமார் தயாரிப்பில், எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் பிரபல நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘லோக்கல் சரக்கு’.
வராஹ சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமார் தயாரிப்பில், எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் பிரபல நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘லோக்கல் சரக்கு’.
இதில் நாயகியாக உபாசனா நடித்திருக்கிறார். யோகி பாபு மிக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் செண்ட்ராயன், சாம்ஸ், இமான் அண்ணாச்சி, சிங்கம் புலி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் முன்னதாக வெளியாகியுள்ளன. மிக விரைவில் திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ள இப்படத்தின், படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஜூலை 12 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இதில் நடிகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் ராஜன், இசைக்கலைஞர்கள் சங்க தலைவர் தீனா, நடிகை வனிதா விஜயகுமார், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் விஜய முரளி, இணைச் செயலாளர் செளந்தரராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில், நடிகர் எஸ்.வி.சேகர் பேசுகையில், “இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷ் நிகழ்ச்சிக்கு அழைப்பதற்காக என்னை சந்தித்தார். அப்போது ‘கடைசி தோட்டா’ படத்தை பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா என்று தான் நினைத்தேன். ஆனால், உள்ளே வந்த பிறகு தான் ‘லோக்கல் சரக்கு’ என்ற தலைப்பை பார்த்தேன். சரக்குக்கும் நமக்கும் சம்மந்தம் இல்லை.
இதுவரை என் வாழ்வில் ஒரு துளி கூட மதுவை அருந்தியதில்லை, அதேபோல் சிகரெட் புகைத்தது இல்லை. இரண்டு படங்களில் மட்டும் மது குடிப்பது போல் நடித்தேன், பிறகு அது கூட தேவையில்லை என்று விட்டுவிட்டேன்.
உங்கள் அனைவருக்கும் பணம் கொடுக்கும் தயாரிப்பாளர் பாக்கெட்டில் பணம் வருவதற்கு நீங்கள் ஒன்று சேர்ந்து உழைத்திருக்கிறீர்களா?, அப்படி உழைத்தால் சினிமா நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் எனக்கு நடந்த ஒரு சம்பவத்தை சொல்ல விரும்புகிறேன்.
நடிகர் சித்தார்த் படத்தில் அவருக்கு தந்தையாக நடிக்க ஒப்பந்தமானேன், அதற்காக அட்வான்ஸை தயாரிப்பாளர் கொடுத்து விட்டார், தேதியும் ஒதுக்கி கொடுத்து விட்டேன். சில நாட்களுக்கு பிறகு மீண்டும் என்னை தொடர்பு கொண்ட தயாரிப்பாளர், அந்த படத்தில் நான் இல்லை என்று சொல்லிவிட்டார்.
காரணம் கேட்டதற்கு, அந்த படத்தின் நாயகன் சித்தார்த் தான் என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக சொன்னார். ஏன் என்று கேட்டதற்கு, நான் பா.ஜ.க-வை சேர்ந்தவன் என்றும், அவர் மோடி எதிர்ப்பாளர் என்றும் நாங்கள் ஒன்றாக நடித்தால் மக்கள் அவரை ட்ரால் செய்வார்கள் என்று சொன்னாராம். சோசியல் மீடியாவில் வீரமாக பதிவுகளை போடும் சித்தார்த்துக்கு தைரியம் இல்லை.
சினிமா என்பது வேறு, அரசியல் என்பது வேறு அதை புரிந்து கொள்ளாத சித்தார்த் வெறும் பேப்பர் சிங்கம், பேப்பர் புலி. இதற்கு நேர் எதிரான மற்றொரு சம்பவமும் நடந்தது. உதயநிதி ஹீரோவாக நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் என்னை நடிக்க இயக்குநர் அணுகினார். அப்போது அவரிடம், நான் பா.ஜ.க, அவர் திமுக, நான் நடிப்பது அவருக்கு சம்மதமா? என்று அவரிடம் கேளுங்க என்றேன்.
அதற்கு அவர், ”உங்களோடு இணைந்து நடிப்பதில் உதயநிதி சாருக்கு சம்மதம், நீங்க என்ன சொல்வீங்க என்று தான் அவர் கேட்க சொன்னார்” என்று சொன்னார். இது தான் நெறிமுறை. அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை அவர் எவ்வளவு நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்.
ஆனாலும் அந்தப் படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை, அதற்கு இயக்குநர் தான் காரணம். நான், இது தொடர்பாக நடிகர் சித்தார் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறேன். அவர்கள் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார் எஸ்.வி.சேகர்.