SK 23: சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சார்பட்டா வில்லன், பிரபல நடிகர்.. வெளியான மாஸ் அப்டேட்!
SK 23 Update: முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே 23 படத்தில் நடிகர் வித்யுத் ஜம்வாலைத் தொடர்ந்து தற்போது மற்றொரு பிரபல நடிகர் இணைந்துள்ளார்

சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து இரு ஆக்ஷன் படங்கள் ரெடியாகி வருகின்றன. லீட் ரோலில் நடித்தாலும் சிவகார்த்திகேயன் ஆக்ஷன் ஹீரோவாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு கணிசமான காலம் தேவைப்பட்டிருக்கிறது. எதிர்நீச்சல், வருத்தப் படாத வாலிபர் சங்கம் போன்ற படங்கள் மக்களால் கொண்டாடப்பட்ட நிலையில், மான் கராத்தே, காக்கிச் சட்டை போன்ற படங்கள் அரை மனதுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்தப் படங்களில் இருந்த ஆக்ஷன் காட்சிகளில் சிவகார்த்திகேயனை ரசிகர்களால் பெரியளவில் ரசிக்க முடியவில்லை.
இதனால் முடிந்த அளவிற்கு தனது படங்களில் ஆக்ஷனுக்கு பதிலாக மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து வந்தார் சிவகார்த்திகேயன். வேலைக்காரன், நம்ம வீட்டு பிள்ளை மாதிரியான படங்களில் நடித்து வந்தாலும் கடந்த ஆண்டு வெளியான மாவீரன் படம் தான் சிவகார்த்திகேயனை முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக மக்கள் மத்தியில் காட்டியது. தற்போது முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக இரண்டு படங்களில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்தப் படங்கள் சிவகார்த்திகேயன் ஒரு மாஸ் ஹீரோவாக உருவாவதற்கு மிக முக்கியமான படங்களாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். அதில் ஒன்றுதான் முருகதாஸ் இயக்கும் எஸ்.கே 23
எஸ்.கே 23
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் எஸ் கே 23. ருக்மினி வசந்த் இப்படத்தில் நாயகியாக நடிக்கும் நிலையில் மலையாள நடிகர் பிஜூ மேனன், இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சுதீப் எளமன் இப்படத்திற்கு ஒளிப்பதிவும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்கள். ஸ்ரீ லக்ஷ்மி மூவீஸ் இப்படத்தை தயாரிக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் இப்படத்தின் பூஜை தொடங்கி அறிவிப்பு வெளியானது. எஸ்.கே 23 படத்தின் வில்லனாக வித்யுத் ஜம்வால் நடிக்க இருப்பதாக படக்குழு சமீபத்தில் தகவல் வெளியிட்டது. துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வால் விஜய்யின் மாஸூக்கு ஈடுகொடுக்கும் வில்லனாக நடித்தார். வித்யுத் ஜம்வால் வில்லனாக நடிக்கிறார் என்றால் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் இந்தப் படத்தில் எந்த அளவுக்கு மாஸாக இருக்க வேண்டும் என்று நாம் கற்பனை செய்துபார்த்துக் கொள்ளலாம்.
எஸ்.கே 23யில் இணைந்த டான்சிங் ரோஸ் ஷபீர்
Excited to reveal that the talented Dancing Rose @actorshabeer is now part of #SKxARM. A solid talent, looking forward to shooting some terrific action scenes with him 🔥 https://t.co/KQ6rK3Pojt
— A.R.Murugadoss (@ARMurugadoss) June 16, 2024
இந்நிலையில், வித்யுத் ஜம்வாலைத் தொடர்ந்து தற்போது எஸ்.கே 23 படத்தில் இன்னொரு நடிகர் இணைந்துள்ளார். பா ரஞ்சித் இயக்கிய சார்பட்ட பரம்பரையில் டான்சிங் ரோஸாக நடித்து ரசிகர்களை மிரள வைத்த ஷபீர் இப்படத்தில் இணைந்துள்ளதாக படத்தின் இயக்குநர் முருகதாஸ் தகவல் வெளியிட்டுள்ளார். இரண்டு வெவ்வேறு வில்லன் நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இவர்கள் தவிர்த்து இப்படத்தில் நடிகர் விக்ராந்த் முக்கியக் கதாபாத்திராத்தில் நடிக்க இருக்கிறார்.





















