Sathyaraj: நீண்ட காலத்துக்குப் பிறகு வில்லன் அவதாரம்... கார்த்தியை எதிர்க்கப் போகும் சத்யராஜ்.. எந்த படத்தில் தெரியுமா?
கார்த்தியின் புதிய படத்தில் நடிகர் சத்யராஜ் வில்லனாக நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் கார்த்தி தற்போது ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது, சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு வில்லனாக சத்யராஜ் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சத்யராஜ் ஹீரோவாக நடித்திருந்தாலும் அவரின் வில்லன் கதாப்பாத்திரங்கள் இன்னும் அதிக வரவேற்பை பெற்றது. சட்டம் என் கையில் தொடங்கி இசை படம் வரை நடிப்பில் பின்னி பெடல் எடுத்திருப்பார். 1978-ல் வெளியான சட்டம் என் கையில் படம்தான் சத்யராஜூக்கு கிரெடிட் பெற்றுத் தந்த முதல் திரைப்படம். சின்ன சின்ன ரோல்களில் நடித்துக் கொண்டிருந்த சத்யராஜூக்கு மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது மணிவண்ணன் இயக்கிய படங்கள்தான்.
நூறாவது நாள், 24 மணி நேரம் போன்ற படங்கள் மூலம் வில்லனாக அறிமுகமானார் சத்யராஜ். குறிப்பாக நூறாவது நாள் திரைப்படத்தில் மொட்டைத் தலையுடன் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு வரும் சத்யராஜ் கெட்டப் மிரட்டலாக இருக்கும். 1978 – 1985 இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 75 படங்களுக்கு மேல் சத்யராஜ் நடித்து முடித்திருந்தார். பெரும்பாலான படங்களில் இவர் வில்லன் கேரக்டர்களில் தான் நடித்திருந்தார்.
நடிகர் ரஜினிகாந்தின் மிஸ்டர் பாரத், நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களிலும் சத்யராஜ் வில்லனாக நடித்து அசத்தி இருப்பார். உலக நாயகன் கமல்ஹாசனின் காக்கிச்சட்டை, சட்டம் என் கையில் உள்ளிட்ட திரைப்படங்களிலும் சத்தியராஜ் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். அமைதிப்படை திரைப்படத்தை இன்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தாலும் பார்ப்பதற்கு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.
சத்யராஜ் – மணிவண்ணன் காம்போவில் உருவான தரமான சம்பவம் அமைதிப்படை திரைப்படம். தமிழ் சினிமாவில் அமைதிப்படையைப் போல் அரசியலைப் பகடி செய்து படங்கள் வரவில்லை என்பதுதான் நிதர்சனம்.
2015-ஆம் ஆண்டு வெளியான பாகுபலி திரைப்படத்திலும் கட்டப்பா என்ற முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்த சத்யராஜ் முதல் பாகத்தில் பாகுபலியை கொன்று விடுவார். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பது தான் இரண்டாவது படத்திற்கு லீட் ஆக இருந்தது. இப்படி தமிழ் சினிமாவில் பல முக்கிய திரைப்படங்களில் சத்யராஜ் வில்லனாகவும், ஹீரோவாகவும், கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆகவும் சத்யராஜ் நடித்து அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Amethi: மீண்டும் அமேதி தொகுதியில் களமிறங்கும் ராகுல் காந்தி ..பக்காவாக ஸ்கெட்ச் போடும் காங்கிரஸ்