Pawan Kalyan: 'தமிழ் சினிமாவுல தமிழர்கள் மட்டும்தான் வேலை பார்க்கணுமா?’ : கொந்தளித்த பவன் கல்யாண்..
ப்ரோ படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் பேசிய பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தமிழ் திரையுலகிற்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
ப்ரோ படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் பேசிய பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தமிழ் திரையுலகிற்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற படம் “விநோதய சித்தம்”. சமுத்திரகனி இயக்கிய இப்படம் விமர்சன ரீதியாக நல்ல பாராட்டைப் பெற்றது. இந்த படம் தற்போது தெலுங்கில் ’ப்ரோ’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அங்கு சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும், தம்பி ராமையா நடித்த கேரக்டரில் சாய் தேஜூம் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு ரசிகர்களுக்காக பலவித மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (ஜூலை 28) வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படியான நிலையில் ப்ரோ படத்தின் முன்னோட்ட மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பவன் கல்யாண், “தமிழ் சினிமா”வுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவர் பேசிய போது, “தமிழ் திரையுலகம் நான் சொல்லும் வேண்டுகோளை கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒரு வேலையை நம் ஆட்களால் மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்க வேண்டாம் .இன்று தெலுங்கு சினிமாக்கள் முன்னேறி இருக்கிறது என்றால் இங்குள்ளவர்கள் எல்லா மொழிகளிலும் உள்ள அனைவரையும் ஏற்றுக்கொள்வதால் தான்.
#PawanKalyan speech about Tamil Cinema fefsi rules.#BroPreReleaseEvent pic.twitter.com/hwXxgIXQnw
— Manobala Vijayabalan (@ManobalaV) July 25, 2023
அனைத்து மொழி மக்களும் ஒன்று சேர்ந்தால் தான் அது சினிமாவாக மாறுகிறது. தமிழக தொழிலாளர்களை மட்டும் வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று நினைக்கக்கூடாது. எனவே தமிழ் சினிமா அனைத்து மொழி மக்களுடனும் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அவரின் இந்த பேச்சு இணையத்தில் ரசிகர்களிடையே ஆதரவையும், எதிர்ப்பையும் பெற்று வருகிறது.
முன்னதாக சில தினங்களுக்கு முன், தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சி புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்தது. அப்போது, தமிழ் படங்களின் படப்பிடிப்பை தமிழ்நாட்டிலேயே நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழ் படங்களில் தமிழக தொழிலாளர்களையே பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விட்டுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.