Parasite Actor: காருக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நடிகர்.. ஆஸ்கர் புகழ் பாரசைட் படத்தில் நடித்தவர் தற்கொலை!
Lee Sun Kyun: பாரசைட் திரைப்படத்தில் பணக்கார வில்லனாக நடித்து அப்ளாஸ் அள்ளிய லீ சுன் க்யூன், ஏற்கெனவே காஃபி ப்ரின்ஸ், பாஸ்தா ஆகிய கொரிய டிராமாக்களில் நடித்தும் பல ரசிகர்களைப் பெற்றுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற திரைப்படமான பாரசைட் படத்தின் நடிகர் லீ சுன் க்யூன் காருக்குள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2019ஆம் ஆண்டு 6 ஆஸ்கர் விருதுகளை வென்று ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த தென் கொரிய திரைப்படம் ‘பாரசைட்’. பிரபல இயக்குநர் போங் ஜூன் ஹோ இயக்கிய இத்திரைப்படத்தில் நடித்து கவனமீர்த்தவர் 48 வயதான பிரபல தென் கொரிய நடிகர் லீ சுன் க்யூன்.
பாரசைட் திரைப்படத்தில் புரிதலற்ற பணக்காரராக நடித்து அப்ளாஸ் அள்ளிய லீ சுன் க்யூன், ஏற்கெனவே காஃபி ப்ரின்ஸ், பாஸ்தா ஆகிய கொரிய டிராமாக்களில் நடித்தும் பல ரசிகர்களைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இவர் தன் காருக்குள் இன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தென் கொரிய தலைநகர் சியோலில் பார்க்கிங் ஒன்றில் தன் காருக்குள் உயிரிழந்த நிலையில் லீ யின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், இவரது உடலைக் கைப்பற்றி அந்நாட்டு காவல் துறையினர் உடற்கூராய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
ஏற்கெனவே இவர் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் உபயோகித்த வழக்கில் கடந்த சில மாதங்களாக போலீஸ் விசாரணையில் இருந்து வருகிறார். இந்நிலையில் லீயின் இறப்புக்கு சில நிமிடங்கள் முன்னதாக அவரது மனைவியும் நடிகையுமான ஜியோன் ஹே ஜின் காவல் துறையினரை தொடர்பு கொண்டு தன் கணவரைக் காணவில்லை எனப் புகார் அளித்துள்ளார்.
மேலும், தன் கணவர் கடிதம் ஒன்றை விட்டுச் சென்றதாகவும் அவர் புகார் அளித்திருந்த நிலையில், லீ சில நிமிடங்களிலேயே இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சென்ற ஆண்டு இவர் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்த ‘ஸ்லீப்’ திரைப்படம் கான்ஸ் உள்ளிட்ட உலக திரைப்பட விழாக்களில் நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து லீ உயிரிழந்துள்ளது தென் கொரிய சினிமா உலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.