Actor Karthi: 'குடும்பத்துடன் வேளாண் வர்த்தக திருவிழாவுக்கு வாங்க..' விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் கார்த்தி..!
ஜூலை 8, 9 ஆம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வேளாண் வர்த்தக திருவிழா ஒன்றை நடத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
தன் தந்தை சிவகுமார் தொடங்கி அண்ணன் சூர்யா முதல் விவசாயத்தில் அக்கறை கொண்ட குடும்பத்தினரைக் கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. ஆர்வம் தாண்டி, உழவர்களின் மேம்பாட்டுக்காக ‘உழவன் பவுண்டேஷன்’ என்கிற அறக்கட்டளை மூலம் நலிவுற்ற விவசாயிகளுக்கு நடிகர் கார்த்தி தேவையான உதவிகளை செய்து வருகிறார்.
வேளாண் வர்த்தக திருவிழா:
அதன்படி, வரும் ஜூலை 8, 9 ஆம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வேளாண் வர்த்தக திருவிழா ஒன்றை நடத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ள நிலையில், இது குறித்த தகவலை நடிகர் கார்த்தி பொதுமக்களுடன் பகிர்ந்துள்ளார்.
“நூற்றுக்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர்கள், தங்களது பொருட்களை இந்த வேளாண் வர்த்தக திருவிழாவில் நேரடியாக விற்பனை செய்ய இருக்கின்றனர். அனைவரும் குடும்பத்துடன் இந்தத் திருவிழாவுக்கு வந்து வேளாண் மக்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
இதே போல் முன்னதாக தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றபோது இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கார்த்தி கலந்துகொண்டார்.
விளையாட்டில் கவனம் செலுத்துங்கள்:
அப்போது “போதைப்பொருட்களில் ஆர்வம் காட்டுவதற்கு பதிலாக, இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் செலுத்த வேண்டும், பெற்றோர் இளைஞர்களின் நண்பர்களாக இருக்க வேண்டும்” என அவர் கார்த்தி பேசிய பேச்சு கவனம் ஈர்த்தது.
ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து முடித்துள்ள ஜப்பான் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்த ‘சர்தார்’ படம் வெளியான நிலையில், இந்த ஆண்டு ஜப்பான் படம் வெளியாக உள்ளது. அனு இம்மானுவேல், தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நிலையில் , இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
ரவிவர்மன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் . தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகும் நிலையில், இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன