Karthi : பருத்திவீரன் முதல் கைதி வரை...இயக்குநர்களின் மாஸ்டர் பீஸ் படங்களில் ஹிட் கொடுத்த கார்த்தி
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களாக அறியப்படும் பலரது மிகப்பெரிய வெற்றிப்படங்களில் கார்த்தி நடித்திருக்கிறார். இன்று வரை இயக்குநர்களின் மாஸ்டர் பீஸாக இருக்கும் கார்த்தி நடித்த படங்கள் இவை
தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தியைப் போன்ற ஒரு ஓப்பனிங் யாருக்கும் அமைந்திருக்க வாய்ப்பு இல்லை. பருத்தி வீரன், நான் மகான் அல்ல , ஆயிரத்தில் ஒருவன், பையா என வரிசையாக தொடர் வெற்றிப்படங்கள் அவருக்கு அமைந்தன. அவருக்கு மட்டுமில்லை இன்று வரை கார்த்தி நடித்த படங்கள்தான் பல இயக்குநர்களுக்கு அவர்களது மாஸ்டர்பீஸாகவும் இருக்கின்றன. யார் தெரியுமா அந்த இயக்குநர்களும் அந்தப் படங்களும்.
அமீர் – பருத்திவீரன்
மெளனம் பேசியதே , ராம் ஆகியப் படங்களை இயக்கிய அமீர் 2007 ஆம் ஆண்டு கார்த்தியை கதாநாயகனாக வைத்து பருத்திவீரன் திரைப்படத்தை இயக்கினார். கதாநாயகனாக கார்த்தி நடிக்கும் முதல் படமும் இதுவே. ஆனால் கார்த்தியின் நடிப்பு ஏதோ முன்னதாக பல படங்களில் நடித்த அனுபவசாலியைப்போல் இருந்தது. பருத்திவீரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து யோகி, ஆதிபகவன் ஆகிய படங்களை அமீர் இயக்கினார் என்றாலும் இன்றுவரை அவரது கரீயர் பெஸ்ட் திரைப்படமாக நிலைத்து நிற்கிறது பருத்திவீரன்.
செல்வராகவன் – ஆயிரத்தில் ஒருவன்
தனது இரண்டாவது படமாக செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தின் நடித்தார் கார்த்தி. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படத்திற்கு அடுத்ததாக ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் அவரது படைப்புகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
லிங்குசாமி – பையா
2010-ஆம் ஆண்டு கார்த்திக்கு சிறப்பாக அமைந்தது. முதலில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் ஒருபக்கம்... அதே ஆண்டு வெளியானது இயக்குநர் லிங்குசாமி இயக்கிய பையா திரைப்படம். ஒரு நல்ல கமர்ஷியல் வெற்றிபெற்றது இந்தப் படம். இன்றுவரை லிங்குசாமி பையா மாதிரியான ஒரு படத்தை மீண்டும் எடுத்துவிட மாட்டாரா என்று அனைவரும் எதிர்பார்த்துதான் வருகிறோம். யாராவது லிங்குசாமிக்கு நியாபகப்படுத்துங்கள் அவர் ரேஞ்சு என்னவென்று.
சுசீந்திரன் - நான் மகான் அல்ல
அதே 2010-ஆம் ஆண்டு வெளியான கார்த்தியின் மூன்றாவது படம் நான் மகான் அல்ல . தனது முதல் படமாக வெண்ணிலா கபடிக்குழு படத்தை இயக்கிய சுசீந்திரன் இரண்டாவது படத்தை கார்த்தியை வைத்து இயக்கினார். வெண்ணிலா கபடிக்குழு அவரது சிறந்தப் படங்களில் ஒன்று என்றாலும் வசூல் ரீதியாக சுசீந்திரனுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தத் திரைப்படம் ”நான் மகான் அல்ல”.
சிறுத்தை – சிவா
சிவா அஜித்துடன் ஐந்து படங்களை இயக்கியிருக்கலாம். ஆனால் இன்றும் அவரை சிறுத்தை சிவா என்று தான் அழைக்கிறோம். கார்த்தியுடன் தனது முதல் படத்தை இயக்கிய சிவா இன்றுவரை அதே அடையாளத்துடன் தான் அறியப்படுகிறார். அந்த அளவிற்கு பட்டாசான ஒரு படமாக அமைந்தது இந்தப் படம்.
தீரன் – எச் வினோத்
சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய எச் வினோத் தனது இரண்டாம் படமாக தீரன் படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் அவரது திறமையைப் பார்த்த பின்தான் அஜித்தை இயக்குவதற்கு அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது.
கைதி – லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ், மாஸ்டர், விக்ரம், தற்போது லியோ என அடுத்தடுத்த மிகப்பெரியப் படங்களை இயக்கி வருகிறார். ஆனால் இது எல்லாவற்றுக்கும் புள்ளி வைக்கப்பட்டது கைதி திரைப்படத்தில்தான்.