Delhi Ganesh: கடைசி வரை நிறைவேறாமல் போன டெல்லி கணேஷின் ஆசை! என்ன தெரியுமா?
Delhi Ganesh Passed Away: தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு காலமானார். அவரது மறைவு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகை ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் அந்த தலைமுறை முதல் இந்த தலைமுறை வரை கட்டிக் கொண்டு வந்தது போல அவர்களுடன் வில்லன், நண்பன், தந்தை போன்ற பல்வேறு கதாபாத்திரங்களுடன் நடித்து அந்த காலம் முதல் இந்த காலம் வரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் டெல்லி கணேஷ்.
காலமானார் டெல்லி கணேஷ்:
1977ம் ஆண்டு முதல் ரஜினி, கமல், விஜயகாந்த் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்த பெருமையை கொண்டவர். சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ் தனது 80வது வயதில் நேற்று இரவு காலமானார்.
தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை பிரபலங்கள் தங்களது வாரிசுகளும் தங்களைப் போல திரையுலகில் கோலாச்ச வேண்டும் என்று ஆசைப்படுவது உண்டு. டெல்லி கணேஷூம் அந்த ஆசைக்கு விதிவிலக்கு அல்ல. தான் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்திருந்தாலும் தனது மகனை மிகப்பெரிய கதாநாயகனாக மாற்ற வேண்டும் என்ற ஆசை டெல்லி கணேஷிற்கு இருந்தது.
மகனை நாயகனாக்கிய டெல்லி கணேஷ்:
டெல்லி கணேஷின் மகன் மகாதேவன் கணேஷ் மகா என்ற பெயரில் நாயகனாக அறிமுகமானார். இவர் அதற்கு முன்பாகவே ஷாம், ஆர்யா, அசின ஆகியோர் அறிமுகமான உள்ளம் கேட்குமே படத்தில் ஒருவராக அறிமுகமாகியுள்ளார். பின்னர், 2006ம் ஆண்டு திருடி என்ற படத்தில் நடித்துள்ளார். 2007ம் ஆண்டு உற்சாகம் என்ற படத்திலும் நடித்துள்ளார்.
தொடர்ந்து படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவரை நாயகனாக மாற்ற வேண்டும் என்ற டெல்லி கணேஷின் ஆசை 2016ம் ஆண்டு நிறைவேறியது. 2016ம் ஆண்டு என்னுள் ஆயிரம் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார். கிருஷ்ணகுமார் இயக்கிய அந்த படத்தில் மெரினா மைக்கேல், ஸ்ருதி, வின்சென்ட் அசோகன் என பலர் நடித்திருந்தனர்.
கடைசி வரை நிறைவேறாத ஆசை:
மகனை நாயகனாக மாற்றுவதற்காக டெல்லி கணேஷே அவரது நாடக நிறுவனத்தை ஓம் கணேஷ் கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமாக மாற்றியிருந்தார். ஆனால், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரியளவு வரவேற்பை பெறவில்லை. அதன்பின்பு பெரியளவு பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த மகாவிற்கு கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் உறவினர்களில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பை லோகேஷ் கனகராஜ் வழங்கினார். அந்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரம் இல்லாத கதாபாத்திரம் என்றாலும் மகாவிற்கு அந்த படம் முக்கியமானதாக அமைந்தது.
ஆனாலும், தன்னுடைய மகனை மிகப்பெரிய நடிகனாக, ரசிகர்கள் கொண்டாடும் கதாநாயகனாக அழகு பார்க்க வேண்டும் என்ற டெல்லி கணேஷூன் ஆசை கடைசி வரை நிறைவேறாமலே போனது. அவர் மறைந்தாலும் அவரது ஆசையை அவரது மகன் மகா நிறைவேற்றுவாரா? என்பதற்கு காலமே பதில் சொல்லும்.
ALSO READ | Delhi Ganesh: "முனியாண்டி முதல் சிதம்பரம் வரை" காலத்தால் அழியாத டெல்லி கணேஷ் கதாபாத்திரங்கள்!