(Source: ECI/ABP News/ABP Majha)
Achani Ravi Passes Away : 20 தேசிய விருதுகள்.. கேரள சினிமாவை உலகிற்கு கொண்டு சேர்த்தவர்.. தயாரிப்பாளர் அச்சானி ரவி 90 வயதில் மரணம்
முன்னணி மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர் அச்சானி ரவி தனது 90 வயதில் மறைந்தார்.
மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான அச்சானி ரவி தனது 90 வயதில் இன்று காலமானார். திரையுலக பிரபலங்கள் அவருக்கு தங்களது அஞ்சலிகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
தயாரிப்பாளர் வாழ்க்கை
கேரளத்தில் புது அலை சினிமாக்கள் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் ரவி. 1970 மற்றும் 1980 களில் ஜெனரல் பிக்சர்ஸ் என்கிற பெயரில் திரைப்படங்களை தயாரித்து வந்தவர் அச்சானி ரவி என்கிற ரவிந்திரநாத் நாயர். மலையாள சினிமாவில் பல முக்கியமானத் திரைப்படங்களை தயாரித்து வந்தார். அவர் தயாரிப்பில் வெளிவந்த அச்சானி என்கிறப் படம் கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் ரவிந்திரநாத் நாயர் என்கிற அவரது பெயர் அச்சானி ரவி என்று மாறியது.
அச்சானி ரவியின் வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த மற்றொரு நிகழ்வு என்றால் அவர் தயாரித்து ஜி. ஐ. அரவிந்தன் இயக்கிய தம்பு என்கிற படம் அண்மையில் டிஜிட்டல் வடிவிற்கு மாற்றப்பட்டு சர்வதேச கான் திரைப்படம் விழாவில் திரையிடப் பட்டது. காஞ்சனா சீதா, கும்மட்டி, தம்பு, எஸ்தப்பன், பொக்குவெயில், எலிப்பத்தையம் , மஞ்சு, அந்தரம் , விதேயன் ஆகிய முக்கியமானப் படங்களைத் தயாரித்துள்ளார் ரவி. தனது மொத்த தயாரிப்பு வாழ்க்கையில் 20 தேசி விருதுகளை வென்றுள்ளார். தனது வாழ்நாள் சாதனைக்காக கேரள மாநிலத்தின் கெளரவ விருதையும் வென்றுள்ளார்.
தொழிலதிபர்
தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த தொழிலதிபராகவும் இருந்தவர் அச்சானி ரவி. ஒரு நல்ல தொழிலதிபரின் மகனாக பிறந்தவர் ரவி. தனது தந்தையில் முந்திரி வணிகத்தை எடுத்து நடத்தி வந்தார். விஜயலக்ஷ்மி கேஷ்யூஸ் என்கிற அவரது நிறுவனம் கேரள மாநிலத்தில் சிறந்த தரமான முந்திரிகளை தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று. மேலும் ஒரு சமூக சேவகராகவும் அறியப்பட்டவர் ரவி. கொல்லத்தில் தனது சொந்த செலவில் நூலகம் ஒன்றை கட்டி அமைத்துக் கொடுத்தார் ரவி.
90 வயதில் மறைவு
ஜூலை 8 ஆம் தேதி கொல்லத்தில் தனது வீட்டில் தனது 90 வயதில் காலமானார் அச்சானி ரவி. அவரது இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரில் நடைபெறும் . அவரது மனைவியான உஷா ராணி ஒரு பிரபல பாடகரும் கூட. கடந்த 2013 ஆம் ஆண்டு காலமானார். தற்போது அவரது இறப்பைத் தொடர்ந்து அவரது மகன்கள் பிரதாப் நாயர், பிரகாஷ் நாயுர் மற்றும் மகள் ப்ரீதா நாயர் ஆகியவர்கள் அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்வார்கள்.