ஆஹா என்ன வரிகள் 18: அவளுக்காக ஏங்கும் அவன் விடும் தூது "ராப்பொழுது ஆனா உன் ராகங்கள் தானா"!
ஆஹா என்ன வரிகள் தொடரில் நாம் காலத்தை கடந்து நிற்கும் பாடல் வரிகள் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று வாலி எழுதிய மலையோரம் வீசும் காத்து பாடல் வரிகள் பற்றி காணலாம்.
இளையராஜாவின் இசை எப்போதுமே இரவு நேரத்தில் நம்மை உறங்க வைக்கும் தாலாட்டாகவே இருந்து வருகிறது. அவரது இசைக்கு பல மேதைகளின் வரிகளும், குரலும் உயிர் தந்து நம் உணர்வோடு கலந்துவிட வைக்கிறது.
மலையோரம் வீசும் காத்து:
அந்த வகையில், ஒரு ஆணின் ஆழ்மனதில் தேங்கி நிற்கும் ஆழமான சோகத்தை, அவனது நிராகரிக்கப்பட்ட காதல் வலியை மிக உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் பாடல்களில் மலையோரம் வீசும் காத்து பாடல் முதன்மையானது ஆகும். பாடு நிலவே படத்தில் இளையராஜா இசையில் வாலி எழுதிய இந்த பாடலின் வரிகளுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது குரலால் உயிர் தந்திருப்பார்.
பாடலின் தொடக்கமே..
"மலையோரம் வீசும் காத்து..
மனசோடு பாடும் பாட்டு..
கேட்குதா.. கேட்குதா.."
என்று தொடங்கியிருப்பார். இதன்மூலம், மலையோரம் வீசும் அந்த காற்றைப் போல, என் மனசுக்குள் பாடும் பாட்டு உனக்கு கேட்கிறதா? என்று வாலி எழுதியிருப்பார்.
ஆரோரா ஆகாதம்மா:
அதற்கு அடுத்த வரிகளில்,
"ஆராரோ பாடினாலும்
ஆராரோ ஆகாதம்மா..
சொந்தங்கள் தேடினாலும்..
தந்தை தாய் ஆகாதம்மா.
என்னோட தாய் தந்த
பாட்டு தானம்மா.."
என்று எழுதியிருப்பார்.
என்னதான் நான் ஆராரோ என்ற தாலாட்டை எனக்கு நானே பாடிக்கொண்டாலும் அது தாய் பாடும் ஆராரோ தாலாட்டு போல ஆகிவிடாது. சொந்தங்கள் எத்தனை பேர் இருந்தாலும் அது தாய், தந்தைக்கு நிகராகிவிடாது என்று தாய் தான் அனைத்தையும் விட உன்னதமானவள் என்று வாலிகளில் எழுதியிருப்பார். அதுபோல எத்தனை பேர் இருந்தாலும் உன்னைப் போல வந்துவிடாது என்று மறைமுகமாக வாலி கூறியிருப்பார்.
அதற்கு அடுத்த வரிகளில்,
"வான் பறந்த தேன்சிட்டு..
நான் புடிக்க வாராதா..?
கள்ளிருக்கும் ரோசாப்பூ..
கைகலக்க கூடாதா..?"
என்று எழுதியிருப்பார்.
வானில் பறந்து உலா வரும் அந்த சிட்டுக்குருவி நான் பிடித்தால் என்னிடம் வந்து சேராதா? மென்மையான இதழ்களை கொண்ட ரோஜா பூவை நான் கைகளில் ஏந்தக் கூடாதா? என்று ஒரு இளைஞனின் ஏக்கத்தை அழகாக வரிகளாக்கியிருப்பார்.
ராப்பொழுது ஞாபகங்கள்:
அடுத்த வரிகளில், இரவு பொழுது வந்துவிட்டாலே தூக்கத்தை முழுவதும் தின்று விடும் அளவிற்கு முழு இரவும் உன் நினைவுகள் மட்டுமே இருக்கிறது. ஆனால், நீ இதை புரிந்து கொள்ளவில்லை. என் அன்பே உன் அருகில் வந்து உன்னைத் தீண்டுவதற்கு தகுதியற்ற ஆணாகி விட்டேனா நான்? என்று சோகம் கலந்த ஆதங்கத்துடன் காதலன் காதலியை பார்த்து பாடுவது போல வாலி வரிகளை எழுதியிருப்பார். அந்த அற்புதமான வரிகளே,
"ராப்பொழுது ஆனா..
உன் ராகங்கள் தானா..!
அன்பே சொல் நானா..
தொட ஆகாதா ஆணா..?"
என்று ஏக்கத்துடன் வாலி எழுதியிருப்பார்.
முள் மீது தூங்கினேன்:
அடுத்த வரிகளில் ஒரு ஆண் தனிமையிலும், அவளைப் பிரிந்த ஏக்கத்திலும், பல இன்னல்களிலும் தவிக்கும் தவிப்பை மிக அழகாக வரிகளாக்கியிருப்பார். அவளையும், தன் இன்னல்களையும் நினைத்து தினமும் உள்மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறேன். படுக்கை கூட முள் மீது தூங்குவது போல ரணமாக மாறிவிட்டது. மனம் முழுவதும் பாரங்கள் மட்டுமே இருக்கிறது. அத்தனை கவலைகளுக்கும் தீர்வான உன்னை, முழு தேய்பிறையில் நிலாவைத் தேடும் வானம் போல தினமும் தேடித் திரிகிறேன் என்று மிக அற்புதமாக வாலி எழுதியிருப்பார்.
அந்த வரிகளே,
"உள் மூச்சு வாங்கினேனே..
முள்மீது தூங்கினேனே..
இல்லாத பாரம் எல்லாம்..
நெஞ்சோடு தாங்கினேனே..
நிலாவை நாளும் தேடும்..
வானம் நான்.."
என்று கவிதையாகவே இந்த வரிகளை வாலி வடித்திருப்பார்.
என் பார்வை பூத்திருக்க:
அடுத்தடுத்த வரிகளில் பேச்சு வழக்கிலே தனது தவிப்பை காதலன் வெளிப்படுத்துவது போல வர்ணித்திருக்கும் வாலி, அடுத்த வரிகளில் ஆற்றோரம் நாணல் வளைந்து நெளிந்து ஆடுகிறது. அந்த நாணல் புல் ஆற்றங்கரையில் உள்ள ஆவாரம்பூவைத் தொட்டு ஆடுகிறது. ஆனால், இங்கே நான் உனக்காக காத்திருக்கிறேன். நீ எப்போது வருவாய்? வருவாய்? என்று பார்த்திருந்தே என் விழிகளிலே பூத்துவிட்டது.
ஆனால், நீயோ தொலை தூரத்தில் இருந்தே என்னுள் நுழைந்த உன் நினைவுகள் மூலமாகவே என் மீது போர் நடத்திக் கொண்டிருக்கிறார். இப்படி போர் செய்து என்னை கொலை செய்து விடாதே பெண்ணே. நான் மிகவும் பாவம் என்று மன்றாடுவது போல வரிகளை எழுதியிருப்பார் வாலி.
அந்த வரிகளே,
"ஆத்தோரம் நாண..
பூங்காத்தோடு ஆட..
ஆவாரம் பூவில் அது..
தேவாரம் பாட..
இங்கே நான் காத்திருக்க..
என் பார்வை பூத்திருக்க..
எங்கேயோ நீ இருந்து..
என் மீது போர் தொடுக்க..
கொல்லாதே பாவம் இந்த ஜீவன்தான்.."
என்று எழுதியிருப்பார்.
எந்த ஆசைகளும் நிறைவேறாத நிராசைகளை மட்டுமே எதிர்கொண்ட இளைஞனின் ஏக்கமாக, அவன் காதலிக்காக அவன் வலிகளைச் சொல்லும் தூதாக வெளிப்பட்டிருக்கும் இந்த பாடல் வரிகள் படத்தின் திரைக்கதைக்கு மிக நன்றாக பொருந்தியிருக்கும். மோகனும் இந்த பாடலுக்கு தனது முக பாவனைகளால் ஏக்கத்தை அழகாக வெளிப்படுத்தியிருப்பார். இந்த பாடலை வாலி சாமானியர்களுக்கும் புரியும் வகையில் பேச்சு வழக்கிலும், கவிதை நடையிலும் அழகாக எழுதியிருப்பார்.
மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 17: "மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்" சொல்லும் அவளின் ஏக்கம், அவனின் பரிதவிப்பு!
மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 16: "ஞாபகங்கள் தீ மூட்டும்.. ஞாபகங்கள் நீரூற்றும்" நினைவுகளை தாலாட்டும் ஏதோ ஒரு பாட்