ஆஹா என்ன வரிகள் 18: மறைத்து வைத்த காதலைச் சொல்லும் "மழை நின்ற பின்பும் தூரல் போல!"
ஆஹா என்ன வரிகள் தொடரில் காலத்தைக் கடந்த வரிகள் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், உள்ளத்தில் மறைத்து வைக்கப்பட்ட காதலைச் சொன்ன மழை நின்ற பின்பும் தூரல் பாடல் குறித்து காணலாம்.
காதல் எப்போது வேண்டுமானாலும் ஒருவரது மனதில் துளிர்க்கலாம். அதுவும் சில நேரங்களில் நம்மை வேண்டாம் என்று ஒதுக்குபவர்களே ஒரு கட்டத்தில் நம் மீது தீராக்காதல் கொள்வார்கள். சந்தர்ப்ப சூழலில் வேண்டாம் என்று கூறியவரே, மீண்டும் நம்மை காதலிக்கும் தருணம் என்பது மிக அழகானது.
மழை நின்ற பின்பும் தூரல் போல:
அந்தக் காதலை வெளிப்படுத்தவும் முடியாமல் அந்தக் காதல் துணையுடன் பயணிக்கும் அழகான அவதியை மிக அழகாக பாடலாக சொல்லிய பாடல் “மழை நின்ற பின்பும் தூரல் போல”. தன்னை பெண் பார்க்க வந்த ஒருவனை வேண்டாம் என்று கூறிய நாயகி, மீண்டும் அவன் மீதே காதல் கொள்வதை மிக அழகாக வரிகளாக தந்திருப்பார் கபிலன். வித்யாசாகர் இசையில் “ராமன் தேடிய சீதை” படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் எப்போதும் மயிலிறகால் வருடுவது போலவே நம் மனதை வருடிச்செல்லும்.
"மழை நின்ற பின்பும் தூரல் போல..
உனை மறந்த பின்பும் காதல்..
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்.."
என்று பாடலின் தொடக்க வரிகளே அமைந்திருக்கும். அதாவது, கனமழை அடித்து ஓய்ந்த பிறகும் தூரல் மட்டும் மென்மையாகத் தூறும். ஒவ்வொரு முறையும் கரையைத் தொட்டு மீண்டும் கடலுக்கே அலைகள் சென்றாலும், அந்தக் கரையில் அதன் ஈரம் இருக்கும். இதைப்போலவே உன்னை மறந்த பிறகுதான், உன்னை பிரிந்த பின்புதான் அன்பே நான் உன் மீது காதல் கொண்டேன் என்று அந்தக் காதல் பிறந்த தருணத்தை வரிகளாக கபிலன் எழுதியிருப்பார்.
அதற்கு அடுத்த வரிகளில் என்னுள் காதலை பிறக்க வைத்துவிட்டுச் சென்றுவிட்டாய், அந்தக் காதலுக்கு நீயே சொந்தம் என்பதால் உன் பெயரைச் சொல்லி அந்தக் காதலை அழைத்துக் கொள்ளவா? இத்தனை நாட்கள் தனித்து இருக்கும் எந்தன் இதயத்தை உன் இதயத்துடன் சேர்த்துக் கொள்ளவா? என்று மழலையாக மாறி நாயகி நாயகனிடம் கேட்பது போல வரிகளை கபிலன் எழுதியிருப்பார்.
மௌனம் கூட இசையமைக்கும்:
அடுத்த வரிகளில்,
"நீர் துளிகள் நிலம் விழுந்தால்..
பூக்கள் மெல்ல தலை அசைக்கும்..
என் மனதில் நீ நுழைந்தால்..
மௌனம் கூட இசை அமைக்கும்.."
என்று எழுதியிருப்பார்.
அதாவது, நீர்த்துளிகள் இந்த மண்ணில் விழுந்தால் பூக்கள் எல்லாம் புத்துயிர் பெற்றது போல புத்துணர்ச்சி அடையும். அதுபோல, நீ என் மனதின் உள்ளே வந்துவிட்டால் ஒரு மௌனம் கூட என்னுள் மெல்லிசையாய் மாறும் என்று எழுதியிருப்பார்.
தாமரையாய் இருந்தும் தாகம் தீரவில்லை:
அடுத்த வரிகளில், முகம் காட்டாமல் குயில்கள் கூவினாலும், அதன் இனிமையான குரலோசை நம் மனதில் ஆழமாக பதிந்து மறைவது இல்லை. தண்ணீரிலே வாழும் தாமரையாய் நான் இருந்தும், உன்னை காணாமல் உன்னைச் சேராமல் என்னுடைய தாகமே அடங்கவில்லை என்று காதல் துணையின் பிரிவால் ஏற்பட்ட தவிப்பை அழகாக வர்ணித்திருப்பார் கபிலன். அந்த வரிகளே,
"பூங்குயில்கள் மறைந்திருந்தால்..
கூவும் ஓசை மறைவதில்லை..
தாமரையாய் நான் இருந்தும்..
தாகம் இன்னும் அடங்கவில்லை.."
என்று எழுதியிருப்பார்.
அடுத்த வரிகளில் நாயகியை வானவில்லாக ஒப்பிட்டு அது வானத்திலே இருப்பது போல, வானவில்லுடன் ஒப்பிடப்பட்ட நாயகி வானத்தைப் போல முடிவில்லாமல், தான் இருக்கும் வரை நாயகனுடனே இருப்பதாக எழுதியிருப்பார் கவிஞர். அதற்கு அடுத்த வரிகளில் மண்ணில் விழுந்த பிறகு மழைத்துளி, பனித்துளி என்று இரண்டாக எவ்வாறு பிரிக்க முடியாதோ? அதேபோல உன்னையும் என்னையும் யாராலும் பிரிக்க முடியாது என்றும் வர்ணித்திருப்பார்.
உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே:
அடுத்த வரிகளில்,
"கண்ணிமைகள் கை தட்டியே…
உன்னை மெல்ல அழைக்கிறதே..
உன் செவியில் விழவில்லையா..?
உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே..
உன்னருகே நான் இருந்தும்
உண்மை சொல்ல துணிவு இல்லை…
கைகளிலே விரல் இருந்தும்..
கைகள் கோர்க்க முடியவில்லை.."
என்று எழுதியிருப்பார்.
அதாவது, உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்க ஏங்கும் எந்தன் கண்களின் இமைகள், என்னிடம் வந்துவிடு என்று உன்னை அழைக்கிறது. அது ஏன் உன் காதில் விழவில்லையா? இதனால் நீ வசிக்கும் எந்தன் இதயமும் வலிக்கிறது.
நீ எந்தன் அருகிலேதான் இருக்கிறாய். ஆனால், உன்னை எந்தளவு நேசிக்கிறேன், உன்னுடன் எப்படியெல்லாம் வாழ ஆசைப்படுகிறேன் என்று சொல்வதற்கு எனக்கு துணிவு இல்லை. கைகளில் விரல்கள் இருந்தும் உந்தன் விரல்களை கோர்த்து நடக்க முடியவில்லை என்று காதல் துணைக்காக ஏங்குவதை அந்த வலியுடன் எழுதியிருப்பார்.
உன்னை எனக்குப் பிடிக்கும்:
அதற்கு அடுத்த வரிகள்தான் இந்த பாடலிலே மிகவும் அபாரமான வரிகள் என்று கூறலாம். மிக எளிமையான வார்த்தையால் ஒரு தலை காதலின் தவிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதாவது,
"உன்னை எனக்குப் பிடிக்கும்..
அதை சொல்வதில்தானே தயக்கம்..
நீயே சொல்லும் வரைக்கும்..
என் காதலும் காத்து கிடக்கும்..
தினம் தினம் கனவினில் வந்துவிடு..
நம் திருமண அழைப்பிதழ் தந்துவிடு.."
என்று எழுதியிருப்பார்.
உன்னை ஆசை தீர காதலித்து, ஊர் அறிய திருமணம் செய்து வாழ வேண்டும் என்பதில் எனக்கு ஆசை. ஆனால், அதை உன்னிடம் சொல்வதில்தான் எனக்கு தயக்கம். இதை எல்லாம் என்னை ஆழமாக காதலிக்கும் நீயே சொல்லும் வரை நான் காத்திருப்பேன். அதுவரை தினந்தோறும் உன் நினைவுகளுடனே தூங்கும் என் கனவினில் வந்துவிடு.
திருமண அழைப்பிதழ் தந்துவிடு:
நிஜத்தில் நம் இருவரின் பெயர்களும் மணமக்களாக சேரும் திருமண பத்திரிகை வரும் வரை, என் கனவினில் நம் திருமண அழைப்பிதழை என்னிடம் கொடுத்துவிடு என்று காதல் துணையை திருமணம் செய்ய துடிக்கும் நாயகியின் தவிப்பை மிக அழகாக எழுதியிருப்பார்.
கபிலன் எழுதிய இந்த பாடல் வரிகள் காதலி காதலனுக்கு பாடுவது போல மட்டுமின்றி, காதலன் காதலிக்கு பாடுவது போலவும் பொருந்தும். அடுத்த தொடரில் வேறு ஒரு பாடல் வரிகளுடன் சந்திக்கலாம்.