Amman Movies: ஆடி ஸ்பெஷல்! கோலிவுட் கொண்டாடிய அம்மன் திரைப்படங்கள் என்னென்ன?
தமிழ் சினிமாவில் அம்மன் புகழைப் போற்றும் விதமாக வெளியான திரைப்படங்களின் பட்டியலை கீழே காணலாம்.
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு நாளும் ஆன்மீக மனம் வீசும் மாதங்களில் ஒன்றாக ஆடி மாதம் உள்ளது. காதல், காமெடி, ஆக்ஷன், பாசம் என பல வகையான உணர்வுகளை வெளிப்படுத்தும் படங்களை எடுத்த தமிழ் சினிமா, பக்திப்படங்களை ஏராளமாக எடுத்துள்ளது. அந்த வகையில், தமிழில் ஏராளமான அம்மன் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மனதில் இன்றும் எவர்கிரீனாக உள்ளது.
ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த மாதம் ஆகும். ஆடி மாத பிறப்பை முன்னிட்டு தமிழ் சினிமாவில் வெளியான அம்மன் திரைப்படங்கள் பற்றி கீழே காணலாம்.
அம்மன்:
அம்மன் திரைப்படம் என்றாலே தமிழ் ரசிகர்கள் மனதிற்கு நினைவுக்கு முதலில் நினைவுக்கு வருவது அம்மன் திரைப்படம். சவுந்தர்யா, சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்த இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த படமாகும். 1995ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஜண்டா கதாபாத்திரம் 90ஸ் கிட்ஸ்களை மிரட்டிய வில்லன் ஆவார். இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் அம்மன் படத்திற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.
பாளையத்தம்மன்:
அம்மன் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற அம்மன் திரைப்படம் பாளையத்தம்மன் ஆகும். 2000ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் மீனா, ராம்கி, திவ்யா உன்னி, சரண்ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். விவேக்கின் நகைச்சுவை ரசிகர்களை சிரிக்க வைத்ததுடன் சிந்திக்கவும் வைத்தது. மீனா அம்மனாக நடித்த இந்த படத்திற்கு எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைத்தார். படத்தில் இடம்பெற்ற வேப்பிலை வேப்பிலை, ஆடி வந்தேன், பாளையத்தம்மா நீ பாச விளக்கு பாடல்கள் இன்றும் கோயில்களில் ஒலிக்கிறது. இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியாலே தமிழில் அடுத்தடுத்து ஏராளமான அம்மன் திரைப்படங்கள் வெளியானது.
ராஜகாளியம்மன்:
தமிழ் சினிமாவின் ஏராளமான ஆன்மீக படங்களை இயக்கியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ராம நாராயணன். அவரது இயக்கத்தில் 2000ம் ஆண்டு வெளியான திரைப்படம் ராஜகாளியம்மன். அம்மன் வேடத்தில் ரம்யாகிருஷ்ணன் நடித்த இந்த படத்தில் வடிவேலு, கௌசல்யா, சரண், கரண் ஆகியோர் நடித்திருந்தனர். எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட். இந்த படம் திரையரங்கில் பக்திப் பரவசமாக ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.
கோட்டை மாரியம்மன்:
ராமநாராயணன் இயக்கத்தில் வெளியான மற்றொரு அம்மன் திரைப்படம் கோட்டை மாரியம்மன் ஆகும். கரண், தேவயானி, ரோஜா, விவேக் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். 2002ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ரோஜா அம்மனாக நடித்திருப்பார். இந்த படத்தில் இடம்பெற்ற ஸ்ரீரங்கநாதருக்கு, மொரண்டு புடிக்காதே பாடல் ப்ளாக்பஸ்டர் வெற்றியாகும். மிகச்சிறந்த பக்திபடங்களில் கோட்டை மாரியம்மனுக்கு தனி இடம் உண்டு.
பண்ணாரி அம்மன்:
நயன்தாராவுக்கு முன்பு லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட விஜயசாந்தி அம்மனாக நடித்த படம் பண்ணாரி அம்மன். அவரது 175வது படமாக இது அமைந்தது. இந்த படத்தில் அம்மனாக அசத்தலாக விஜயசாந்தி நடித்திருப்பார். 2002ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கரண் நடித்திருப்பார். பாரதி கண்ணன் இயக்கிய இந்த படத்திற்கு டி.ராஜேந்தர் இசையமைத்திருப்பார்.
மூக்குத்தி அம்மன்:
தமிழில் பேய் படங்கள் அடிக்கடி வெளியாகி வந்த சூழலில், நீண்ட காலமாக அம்மன் திரைப்படம் எதுவுமே வெளியாகாமல் இருந்தது. அந்த குறையை ஆர்.ஜே.பாலாஜி 2020ம் ஆண்டு நீக்கினார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய இந்த படம் ஒரு மாறுபட்ட அம்மன் திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தில் மூக்குத்தி அம்மனாக லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா நடித்திருப்பார். ஆர்.ஜே.பாலாஜி. ஸ்மிருதி வெங்கட், அபி நட்சத்திரா, மது, அஜய் கோஷ் ஆகியோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு இந்த படங்கள் உள்பட மற்ற அம்மன் திரைப்படங்களை தொலைக்காட்சியில் தொடர்ந்து பார்க்கலாம்.