Mysskin: "உலகம் முழுவதும் 6 கதைகள்.. அத தான் திரும்ப திரும்ப எடுக்கறோம்.." - ஆதாரம் பட விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேச்சு!
தமிழ் சினிமாவில் காப்பி காப்பி என்கிற குற்றச்சாட்டு வந்து கொண்டே இருக்கிறது. உலகம் முழுக்கவே ஆறு கதைகள் தான் அது தான் திரும்ப திரும்ப எடுக்கப்படுகிறது என்று மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
![Mysskin: aadharam movie trailer launch event and press meet details director mysskin speech Mysskin:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/23/098596bb41403cf0efecee818ae3034a1684839998354574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
MATINEE FOLKS நிறுவனம் சார்பில் G. பிரதீப் குமார், ஆஷா மைதீன் தயாரிப்பில் இயக்குநர் கவிதா இயக்கத்தில், புதுமுக நடிகர்கள் அஜித் விக்னேஷ், பூஜா சங்கர் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ’ஆதாரம்’.
சமூக அக்கறை கொண்ட அருமையான படைப்பாக, நீதிமன்றப் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ள நிலையில், விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு விழா முன்னதாக நடைபெற்றது.
இதில், தயாரிப்பாளர் பிரதீப் பேசியதாவது: “நண்பர்களால் தான் வாழ்க்கை என்பதை புரிந்து கொண்டவன் நான். இந்த இடத்தில் நான் நிற்கக் காரணம் அவர்கள் தான். அப்ஷா மைதீன் இன்று வர முடியவில்லை. அவருக்கும் சேர்த்து உங்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். நண்பர்களால் தான் இந்தப்படம் செய்துள்ளேன்” என்றார்.
மிஷ்கின் பேச்சு
இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது: ”ஒரு பத்திரிகையாளர் வந்தவுடனே நல்ல கண்டண்ட் தாருங்கள் என்றார், என்ன கண்டண்ட் எனத் தெரியவில்லை. சகோதரி கவிதா என்னை வந்து அழைத்தார். நான் வந்து பேசினால், ஏதாவது திட்டி அது வைரல் ஆகிவிடுகிறது, என்பதால் என்னை எல்லா பங்ஷனுக்கும் அழைத்து விடுகிறார்கள்.
ஆனால் கவிதா முகவரி என்னை இங்கு அழைத்து வந்துவிட்டது அவரது தந்தை TN பாலுவின் படங்களான சங்கர்லால் முதல், பல படங்களுக்கு நான் ரசிகன். அந்தப் படத்தின் பாதிப்பில் தான் துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு தொப்பி வைத்தேன்.
’6 கதைகள் தான் உலகில் உள்ளன’
தமிழ் சினிமாவில் காப்பி காப்பி என்கிற குற்றச்சாட்டு வந்து கொண்டே இருக்கிறது. என் மீதே நிறைய குற்றச்சாட்டு இருக்கிறது. உலகம் முழுக்கவே ஆறு கதைகள் தான் அது தான் திரும்ப திரும்ப எடுக்கப்படுகிறது. எல்லோருமே ஒரே கதையை தான் திரும்ப திரும்ப எடுத்து வருகிறோம். கவிதாவை என் மகளாகவே பார்க்கிறேன். அவர் இது என் முதல் படம் குறைந்த நாளில் தான் எடுத்தேன், அடுத்த படம் தான் நன்றாக எடுக்க போகிறேன் என்றார்.
அந்த உண்மைக்காக அவரைப்பாராட்ட வேண்டும். என் முதல் படம் ஏழு நாள் தோல்வி தான். பின் எட்டாவது நாளில் தான் என் படம் ஓடி வெற்றியடைந்தது. தோல்வியிலிருந்து தான் படம் செய்வதை கற்றுக்கொள்ள வேண்டும். நான் லியோவில் சின்ன கேரக்டர் தான் செய்துள்ளேன். சிவகார்த்திகேயன் படத்தில் இப்போது தான் நடித்து முடித்துள்ளேன். இந்த அப்டேட் எங்கு போனாலும் கேட்கிறார்கள் அதனால் சொல்லி விட்டேன். இந்தப்படம் அனைவரும் கஷ்டப்பட்டு உண்மையாக உழைத்து உருவாக்கியுள்ளார்கள், படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்” எனப் பேசினார்.
இயக்குநர் டி என் பாலுவின் மகள்
தொடர்ந்து நடிகர் கதிரவன் பேசியதாவது: “இயக்குநர் TN பாலுவை ஞாபகம் வைத்துக் கொண்டு அவருக்காக இங்கு வந்த இயக்குநர் மிஷ்கினுக்கு நன்றி. என் அப்பா அந்தக் காலத்தில் படம் எடுக்கும்போது எங்களை விட மிகவும் தைரியமாக இருந்தார். இந்தப் படத்தின் கதை அரசியலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், அதற்காக இயக்குநர் கவிதாவிற்கு நன்றி” என்றார்.
எங்கேயும் எப்போதும் இயக்குநர் சரவணன் பேசியதாவது: “கவிதாவை நீண்ட நாட்களாக எனக்குத் தெரியும், காரணம் அவரின் தைரியம், அவர் எடுத்துக்கொண்ட கதையை எடுக்க தைரியம் வேண்டும், அவருக்கு அந்த தன்னம்பிக்கை இருக்கிறது. படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.
Y G மகேந்திரன் பேசியதாவது: “நான் நிறைய தப்பு செய்திருக்கிறேன் ஆனால் இந்தப்படத்தில் எனக்கு கொடுத்த கதாபாத்திரம் நீதிபதி, TN பாலு சார் மக்களை நன்கு புரிந்து கொண்ட இயக்குநர், அவரின் வாரிசு இப்படி ஒரு படத்தை எடுப்பதில் ஆச்சர்யம் இல்லை, அவருக்கு தவறு என தெரிந்த விஷயத்தை தைரியமாக சொல்ல நினைத்துள்ளார். கதை அருமையாக நகரும் அது படம் பார்க்கும்போது தெரியும், இந்தப் படம் கண்டிப்பாக பல சர்ச்சைக்கு உள்ளாகும் ஆனாலும் அது ஒரு முயற்சிதான் மக்கள் அதற்கு கண்டிப்பாக ஆதரவு தருவார்கள் நன்றி” என்றார்.
கதாநாயகி பூஜா பேசியதாவது: “இந்தப் படத்தில் நான் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன், இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி , இந்த நிகழ்வுக்காக பல நாட்கள் ஏங்கியுள்ளேன் இப்போது அது உண்மையாக நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது, இந்தப் படத்தில் என்னை நம்பி எனக்கு இந்த கதாபாத்திரத்தை அளித்த இயக்குநர் கவிதாவிற்கு நன்றி, தயாரிப்பாளருக்கு நன்றி, ஒவ்வொரு நாளும் எனக்கு ஆர்வமாக இருந்தது. படக்குழு அனைவருக்கும் எனது நன்றி. பத்திரிகையாளர்கள் இந்தப் படத்தை அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும், இது அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்” எனப் பேசினார்.
இயக்குநர் கவிதா பேச்சு
படத்தொகுப்பாளர் டாய்ஸ் பேசியதாவது: “இந்தப் படத்தில் இயக்குநர் கவிதாவின் பங்களிப்பு மிகவும் பெரியது, இங்கு வாழ்த்த வந்துள்ள அனைவருக்கும் நன்றி, இந்தப் படம் மிகப்பெரும் பொதுநலத்தை பற்றி பேசும் படம், மக்கள் இதற்கு ஆதரவு தர வேண்டும்” என்றார்.
தொடர்ந்து இயக்குநர் கவிதா பேசியதாவது: “இந்த விழாவிற்கு வருகை தந்த மிஷ்கின், ஒய் ஜி மகேந்திரன், சரவணன் ஆகியோருக்கு நன்றி. இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள். எல்லோர் வீட்டிலும் ஒரு வாலு இருப்பார்கள், என் வீட்டில் வாலாக இருந்தது நான் தான். இது என் முதல் படம்.
என் தந்தை TN பாலு. இதை உரக்க இங்கு சொல்கிறேன். என்னுடைய தந்தை இவ்வளவு பெரிய ஆளாக இருக்கிறார் யாரும் நம்மை கண்டுகொள்ளவில்லையே எனத் தோன்றியது, ஆனால் இந்த விழாவிற்கு மிஷ்கின் சார் வந்த காரணம் என் தந்தை, ஒய் ஜி மகேந்திரன் சார் நடிக்க காரணம் என் தந்தை. இந்தப் பெருமை போதும், எப்போதும் பழையதை மறக்காதீர்கள், புதுப்பித்துக்கொண்டே இருங்கள்.
என் தயாரிப்பாளர் ஒரு பிச்சைக்காரன். பிச்சைக்காரன் படத்திற்கும் அவருக்கும் ஒரு சம்பந்தமுண்டு, அதனால் அவரை அப்படிக் கூப்பிட்டு பழகிவிட்டோம். என்னுடைய படம் சிசிடிவி பற்றியதல்ல, பதிந்த விசயத்தை மறைக்கப்பட்டது பற்றித்தான் என் படம். ஒரு உண்மை சம்பவத்தை வைத்து கஷ்டப்பட்டு உருவாக்கியுள்ளோம். என் படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை” எனப் பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)