A R Rahman Birthday: இசையையும் அன்பையும் தேர்ந்தெடுத்த கலைஞன்.. பிறந்த நாள் வாழ்த்துகள் ஏ.ஆர்.ரஹ்மான்!
ஒரு கலைஞன் தன் வேர்களை நினைத்துப் பார்ப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அழுத்தமாக உலகுக்கு பறைசாற்றும் வகையில், அதே ஆஸ்கார் மேடையில் தன் தாயையும் தமிழையும் பெருமைப்படுத்திவிட்டுதான் கீழிறங்கினார் ரஹ்மான்
“எனது வாழ்நாள் முழுவதும் என் முன்னே அன்பு, வெறுப்பு என இரண்டு விருப்பங்கள் இருந்தன, நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன். அதனால் இங்கு நிற்கிறேன்”
2009ஆம் ஆண்டு மார்ச் மாதம், ரஹ்மான் ஆஸ்கர் வெல்ல வேண்டும் என்ற ஒட்டுமொத்த இந்தியர்களின் ஏக்கம் நிறைவேறிய சில நிமிடங்களுக்குப் பின், விருது பெற்ற கையுடன், தன் வெற்றிக்கான தத்துவத்தையும் இவ்வாறு எளிய மொழியால் விவரித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
தடுக்கி விழுந்தால் போட்டிகளும் பொறாமையும் தட்டுப்படும் திரைத்துறையில் ‘அன்பால் ஆஸ்கார் வென்றேன்’ எனக்கூறி நாட்டுக்கு பெருமை சேர்த்த ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த தினம் இன்று!
ஒரு கலைஞன் தன் வேர்களை நினைத்துப் பார்ப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அழுத்தமாக உலகுக்கு பறைசாற்றும் வகையில், அதே ஆஸ்கார் மேடையில் தன் தாயையும் தமிழையும் பெருமைப்படுத்திவிட்டுதான் கீழிறங்கினார் ரஹ்மான்.
தமிழ் மீதான ரஹ்மானின் பற்று சந்தர்ப்பவாதத்துக்காகவோ, இன்றோ, நேற்றோ முளைத்தது அல்ல. தனது இசையின் வழியாகவும்கூட தன் தாய் மொழியையும் சேர்த்தே பெருமைப்படுத்த விரும்பியுள்ளார் ரஹ்மான். ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன?’ எனும் மரியான் படப்பாடல் பஞ்சாப் பாடகர்களால் கொஞ்சும் தமிழில் பாடப்பட்டபோது, தன் இசையை இரண்டாம்பட்சமாக வைத்து ‘என் மொழி பரவுகிறது’ என்றே பரவசப்பட்டார் ரஹ்மான்!
Tamizh is spreading in Punjab 😀 https://t.co/VU9q17c9e5
— A.R.Rahman (@arrahman) June 2, 2019
தன் வெற்றிப்பாதையில் ஒரு உணர்வுள்ள கலைஞனுக்கு இருக்க வேண்டிய எந்த குணாதிசயங்களிலும் ரஹ்மான் தன்னை சமரசம் செய்து கொண்டதே இல்லை. தமிழ் மொழி, இஸ்லாமிய மதம் உள்ளிட்ட தன் வேர்களை ஒருபுறம் இறுகப் பற்றும் கையுடன், புதிய தொழில்நுட்பங்களை சுடச்சுட கற்று தன்னை மேம்படுத்திக்கொள்ள தவறியதே இல்லை.
‘சின்ன சின்ன ஆசையில் 90களின் குழந்தைகள் தொடங்கி ‘பொன்னி நதி பார்க்கணுமே’ என ஓங்கி ஒலித்து gen z கிட்ஸ் எனப்படும் இன்றைய இளைஞர்கள் வரை ஈர்ப்பதற்கு இந்தப் பண்பே முழு முதல் காரணம்.
ஒரு கடமை தவறாத இஸ்லாமியராக வலம் வரும் ரஹ்மான்,முழுமையாக ஹிஜாப் உடுத்திய தன் மகள் கதீஜா, ஹிஜாப் தரிக்காத மற்றொரு மகள் ரஜிமா ஆகிய இருவரின் தேர்வுகளையும் சரிசமமாக ஆதரித்தபடி முன்மாதிரியான தந்தையாகவும் வலம் வருகிறார்.
சூஃபிக்களின் இசை வடிவமான கவ்வாலி வழியே திரை இசையில் ரஹ்மான் நிகழ்த்தியது புதிய உச்சம். ‘ராக் ஸ்டார்’ படத்தில் இடம்பெற்ற ‘குன் ஃபயா குன்’ இந்த நூற்றாண்டுக்கான பாடல்களுள் ஒன்று!
Thank you for Kun Faya Kun @arrahman 🙏❤#HBDARRahman #HBDARR54 #HappyBirthdayARRahman pic.twitter.com/YPYsKyzdpa
— 𝕾𝖆𝖒𝑽𝑱♠ (@Itz_Sam10) January 5, 2021
காதலன் படத்தில் ‘மர்ஹாபா...’ என ஒரு தேர்ந்த பாங்கு ஒலியைப் போல் ஒலித்து சிலிர்ப்பை ஏற்படுத்திய ரஹ்மானின் குரல், ‘அடங்காத ராட்டினத்தில் ஏறிக்கிட்டு...’ என 2022இல் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ பட பாடலிலும் சிலிரிப்பை ஏற்படுத்த தவறவில்லை.
தங்கள் அரசியல் நிலைபாட்டை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு பல கலைஞர்களும் தள்ளப்பட்டுள்ள இன்றைய சூழலில்,மொழி, தேசம், அடையாளம் என அனைத்தையும் தெளிவாக பற்றிக்கொண்டு, ஒவ்வொரு ரசிகருக்கும் சிறந்த இசை அனுபவத்தை வழங்கி வரும் ரஹ்மானுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளுடன் பூச்செண்டுகள்!