HBD Shamili: 3 வயதில் தேசிய விருது.. ஆனால் நடிகையாக ஜொலிக்க முடியாத காரணம்.. ஷாமிலி பிறந்தநாள் ஸ்பெஷல்
HBD Shamili : குழந்தை நட்சத்திரமாக கலக்கிய ஷாமிலி பிறந்தநாள் இன்று.
கொள்ளை அழகும், குறும்புத்தனமும், சுட்டித்தனமும் கொண்ட குழந்தைகளை கண்டு ரசிக்காமல் இருக்க முடியுமா என்ன? அப்படி துறுதுறு குழந்தையாக வியக்கவைக்கும் நடிப்பால் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் நடிகை ஷாமிலி. நடிகர் ரிச்சர்ட் மற்றும் நடிகை ஷாலினியின் சகோதரியுமான ஷாமிலியின் பிறந்தநாள் இன்று.
1989ம் ஆண்டு எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'ராஜநடை' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இரண்டு வயதே தான் என்றாலும் சொன்னதை கேட்குமாம் கிளிப்பிள்ளை என்ற பழமொழிக்கு ஏற்ப சிரிப்பது, அழுவது, மழலை மொழியில் வசனம் பேசுவது என அனைவரையும் கவர்ந்து இழுத்தார். எனவே எஸ்.ஏ. சந்திரசேகரால் அறிமுகப்படுத்தப்பட்ட பெருமையை பெற்றவர் ஷாமிலி.
அடுத்த படமே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'அஞ்சலி' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. படம் முழுக்க வெள்ளை ஃப்ராக், வெள்ளை ஷூ, விரித்து போட்ட சுருட்டை முடி கொண்ட மனவளர்ச்சி குறைந்த குழந்தையாக வெகு சிறப்பாக நடித்திருந்தார். 3 வயது குழந்தையால் எப்படி இப்படி வியக்க வைக்கும் அளவுக்கு நடிக்க முடியும் என அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். உலகமே அஞ்சலி அஞ்சலி அஞ்சலி... என கொண்டாடிய ஷாமிலிக்கு இரண்டாவது படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அணைத்து மொழி படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக பல வெற்றி படங்களில் அசாத்தியமான அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். ராம நாராயணன் இயக்கத்தில் வெளியான 'துர்கா' படத்தில் நாய், குரங்கு என செல்ல பிராணிகள் உடன் மிகவும் தைரியமான புத்திசாலித்தனமான குழந்தையாக நடித்திருந்தார். 'பாப்பா பாடும் பாட்டு..' பாடல் இன்று 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் நாஸ்டால்ஜியா நினைவுகளை அள்ளி தெளிக்கும் பாடல்.
அதே சமயத்தில் கொஞ்சம் வளர்ந்த குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த ஷாமிலின் சகோதரியான ஷாலினிக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு பின்னி பெடலெடுத்தார் ஷாமிலி. பின்னர் வளர்ந்த பிறகு 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' திரைப்படத்தில் தபு மற்றும் ஐஸ்வர்யா ராய் தங்கையாக நடித்திருந்தார்.
2009ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'ஓய்' படத்தில் சித்தார்த் ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் விக்ரம் பிரபு ஜோடியாக 'வீர சிவாஜி' படத்தில் நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஷாமிலியால் ஹீரோயினாக ஜெயிக்க முடியவில்லை.
விஷூவல் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பு மற்றும் சிங்கப்பூர் லசால் கலைக்கல்லூரியில் டிப்ளமோ இன் விஷுவல் ஆர்ட்ஸ் படித்து முடித்த ஷாமிலி பல கலைத்தொழில் சார்ந்த பட்டபடிப்புகளை மேற்கொண்டுள்ளார். அவர் இதுவரையில் வரைந்த ஓவியங்களை காட்சிப்படுத்தி 'ஷி' என்ற தலைப்பில் எக்ஸிபிஷன் ஒன்று நடத்தப்பட்டது. அதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு ஷாமிலியின் கலைத்திறனை பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.