![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kizhakke Pogum Rail: பூவரசம் பூ பூத்து 45 வருஷமாச்சு.. பாஞ்சாலி - பரஞ்சோதியின் காதல்.. இன்றும் தொடரும் கிழக்கே போகும் ரயிலின் பயணம்!
பாசத்துக்குரிய பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' பயணம் இன்றுடன் 45 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
![Kizhakke Pogum Rail: பூவரசம் பூ பூத்து 45 வருஷமாச்சு.. பாஞ்சாலி - பரஞ்சோதியின் காதல்.. இன்றும் தொடரும் கிழக்கே போகும் ரயிலின் பயணம்! 45 years of Kizhakke pogum rail bharathiraja sukumar radhika evergreen classic movie Kizhakke Pogum Rail: பூவரசம் பூ பூத்து 45 வருஷமாச்சு.. பாஞ்சாலி - பரஞ்சோதியின் காதல்.. இன்றும் தொடரும் கிழக்கே போகும் ரயிலின் பயணம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/09/1fb6995d57c7aa6f64a63305b48673181691597987232224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கிராமம் என்றாலே அழகும் அமைதியும் நிறைந்த ஒரு சொர்க்கமாக காட்சியளிக்கும் அதே நேரத்தில், சடங்கும் சம்பிரதாயங்களும் தான் பக்கபலம் என வாழ்ந்தே பழகிய மனிதர்கள் வசிக்கும் இடமும் அதுவே. அந்த அழகிய சுற்றுச்சூழலையும், வெள்ளந்தியான காதலர்களையும் ஒன்றுசேர்த்து அவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டி ரயிலில் ஏற்றிய பாசத்துக்குரிய பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' பயணம் 45 ஆண்டுகளை கடந்தும் பயணித்து கொண்டு இருக்கிறது. அந்த ரயிலில் பயணம் செய்த திரை ரசிகர்கள் இன்று மட்டுமல்ல இன்னும் பல ஆண்டுகள் கடந்தாலும் அதன் நினைவுகளை மறக்க முடியாது!
முதலில் மயில் பிறகு ரயில் :
16 வயதினிலே மூலம் மயிலுடன் அறிமுகமான பாரதிராஜா, அடுத்த ஹிட் கொடுக்க ரயிலில் வந்திறங்கினார். அம்மன் கிரியேஷன்ஸ் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரிப்பில் உருவான இப்படத்தில் பாஞ்சாலியாக அறிமுகமானார் ராதிகா. அவருக்கு ஜோடியாக பரஞ்சோதியாக சுகுமார், இருவரும் வெள்ளந்தியான காதல் ஜோடிகள். இவர்களின் காதலை எப்படி கிழக்கே போகும் ரயில் ஒன்று சேர்த்தது தான் கதையின் கரு!
பிற்படுத்தப்பட்டவனுக்கு காதல் கூடாதா:
தாயை இழந்த பாஞ்சாலி, தன் அக்காவிடம் தஞ்சமடைய, அக்கா கணவரோ மச்சினிச்சி மீது ஒரு கண்ணாக இருக்கிறான். பிற்படுத்தப்பட்ட நாவிதர் குடும்பத்தைச் சேர்ந்த பரஞ்சோதி வேலை எதிலும் ஈடுபாடு இல்லாமல் கற்பனையும் கவிதையும் கையுமாக அலைகிறான்.
பாஞ்சாலிக்கும் பரஞ்சோதிக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பு ஏற்பட, வாய்க்கால் வரப்பிலும், ஆத்தங்கரை ஓரத்திலும் சந்திக்கிறார்கள். அந்த சந்திப்பு ஒரு முறை பஞ்சாயத்தில் கொண்டு நிறுத்த, பிற்படுத்தப்பட்டவன் என்ற காரணத்துக்காக கரும்புள்ளி செம்புள்ளி குத்தப்பட்டு, மொட்டையடித்து கழுதையில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறான் பரஞ்சோதி.
மூடநம்பிக்கையில் சிக்கிய பாஞ்சாலி :
ஒன்றாக சேர்ந்து செத்துவிடலாம் என காதலி சொல்லம் இல்லை வாழ்ந்து காட்ட வேண்டும் என வீரப்பாக சென்னை செல்கிறான் காதலன். இவர்களுக்கு தூதாக கிழக்கே போகும் ரயில் கடிதங்களை பரிமாற்றம் செய்கிறது. நம்பிக்கை கொடுத்த காதலன் நிச்சயம் வந்து தன்னை அழைத்துச் செல்வான் என ஆவலுடன் காத்திருந்த பாஞ்சாலியை களவாட பார்க்கும் கணவனிடம் இருந்து காப்பாற்றத் துடிக்கும் அக்காவாக காந்திமதி. ஊரே ஒரே வெள்ளக்காடாக மாற, உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் கன்னிப்பெண் கையில் தீப்பந்தம் வைத்து கொண்டு ஊரை சுற்றி வந்தால் மழை நின்றுவிடும் என மூடநம்பிக்கையில் சிக்குகிறார் பாஞ்சாலி.
ஒன்று சேர்ந்த காதல் :
பாஞ்சாலியும் தெருவில் ஒட்டுத் துணியின்றி இறங்கி நடக்க, எதுவும் தெரியாத பரஞ்சோதி வந்து பாஞ்சாலியை அழைத்து கொண்டு ஓட, ஊரே அவர்களை துரத்துகிறது. உயிரை கையில் பிடித்து கொண்டு கிழக்கே போகும் ரயிலில் ஏறி தப்பிக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து பார்வையாளர்களும் நிம்மதி பெருமூச்சை விட்டு இருக்கையில் இருந்து எழுகிறார்கள்.
ராதிகாவின் அடையாளம் :
ராதிகாவுக்கு அறிமுகம் கொடுத்த படமே இன்று வரை அவரின் அடையாளமாக உள்ளது. பாரதிராஜா அவரின் சிரிப்பை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்துகொண்டார். இளையராஜாவின் இசை படத்திற்கு புத்துயிர் கொடுத்தது. கவுண்டமணியின் 'இங்கே இருக்கறது பச்சைக்கிளி. அங்கே இருக்கறது பாஞ்சாலிக்கிளி' என்ற பஞ்ச் வசனங்கள் கைதட்டல் அள்ளின.
இசை ராஜாங்கம் செய்த ராஜா :
’மாஞ்சோலைக் கிளிதானோ’, ’கோயில்மணி ஓசை தன்னை கேட்டதாரோ’, ‘பூவரசம் பூ பூத்தாச்சு’ என ஒவ்வொரு பாடலும் ரசிகர்களையும் ரயிலில் பயணம் அழைத்து சென்றது. ராஜாங்கம் செய்ய ராஜாவின் இசை பாடல்கள் அனைத்துமே இன்று வரை பிரபலமான சூப்பர் ஹிட் பாடல்கள். படம் விட்டு வரும் ஒவ்வொருவரின் காதுகளிலும் "பாஞ்சாலி, பாஞ்சாலி, பரஞ்சோதி பரஞ்சோதி" என்ற கிளியின் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)