37 years of Punnagai Mannan : காலகாலமாக வாழும் காதலுக்கு ஓர் அர்ப்பணம்.. புன்னகை மன்னன் இப்போவும் அதே மெருகுடன்..
37 years of Punnagai Mannan : கமல்ஹாசன் - கே. பாலச்சந்தர்- இளையராஜா கூட்டணியில் உருவான அழகான காதல் காவியமான புன்னகை மன்னன் படம் வெளியாகி இன்றுடன் 37 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
காதல் திரைப்படங்கள் என்றும் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. பெரும்பாலும் காதல் ஜோடிகள் கிளைமாக்ஸ் காட்சியில் ஒன்று சேர்வது போலத்தான் திரைக்கதை அமைக்கப்படும். ஆனால் 80ஸ் காலகட்டத்தில் காதல் ஜோடிகள் கிளைமாக்ஸில் தற்கொலை செய்துகொள்வது போல வித்தியாசமான ஒரு கதையை இயக்கி இருந்தார் இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர்.
கமல்ஹாசன் சரிதா நடிப்பில் தெலுங்கில் வெளியான 'மரோசரித்ரா' படத்தை தொடர்ந்து இந்தியில் கமல்ஹாசன் ரதியை வைத்து ‘ஏக் துஜே கேலியே’ என்ற படத்தை இயக்கினார். இந்த இரு படங்களிலுமே கிளைமாக்ஸில் காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொள்வது போல அமைந்து இருந்த இரு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன.
இயக்குநர் சிகரத்தின் ட்விஸ்ட்:
அப்போது நமது இயக்குநர் சிகரத்திற்கு ஒரு ஐடியா வந்ததாம். காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொள்வதும் அதில் காதலி மட்டும் இறந்து போனால் காதலனின் நிலை எப்படி இருக்கும் என்ற அவரின் கற்பனையில் உருவான படம்தான் 'புன்னகை மன்னன்'. இந்த காதல் காவியம் வெளியாகி இன்றுடன் 37 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
பரிதாபமான முடிவு :
ஏழை குடும்பத்தை சேர்ந்த காதலன் கமல் பணக்கார குடும்பத்தை சேர்ந்த காதலி ரேகா. இவர்களின் காதலுக்கு வில்லனாகும் காதலியின் அப்பா. சேர்ந்து வாழ தான் விடவில்லை அதனால் சேர்ந்து இறந்தாவது போவோம் என அருவியின் உச்சியில் இருந்து காதலர்கள் தற்கொலை செய்து கொள்ள அதில் காதலி மட்டுமே உயிர் இழக்கிறாள். காதலன் பலத்த காயங்களுடன் உயிர் பிழைக்க, கொலை பழியோடு சிறை வாசம் செல்ல நேரிடுகிறது.
காதல் கைகூடியதா?
சிறிது காலத்திற்கு பின் விடுதலையான பிறகு காதலி இறந்த இடத்தை சென்று பார்க்கும் போது அங்கே பரீட்சையில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொள்ள வரும் ரேவதியை காப்பாற்றுகிறார் கமல். ரேவதிக்கு மெல்ல மெல்ல காதல் மலர, கமல் பிளாஷ் பேக் ஸ்டோரி பற்றி தெரிந்து கொண்டதும் காதல் தீவிரமடைகிறது. ஒரு கட்டத்தில் கமல் மனதிலும் இரண்டாவது காதல் முளைக்கிறது. அவர்களின் இந்த காதல் கைகூடியதா? தான் படத்தின் திரைக்கதை.
மூன்று காதல் ஜோடிகள்:
இரட்டை கதாபாத்திரத்தில் சாப்ளின் செல்லப்பாவாக மற்றொரு வித்தியாசமான கெட்டப்பில் கமல் நடிக்கவில்லை உயிர் கொடுத்து இருந்தார். கமல்- ரேகா காதல் ஒரு ஆழமான காதல் என்றால் கமல் - ரேவதி காதல் ஒரு அழகான காதல். ஆனால் அவர்களையும் மிஞ்சியது வயதை கடந்த பின்பும் துணை இல்லாமல் பரஸ்பர அன்பை வெளிப்படுத்திய கமல் - ஸ்ரீவித்யா ஜோடி.
உயிர் கொடுத்த இளையராஜா:
கவிஞர் வைரமுத்துவின் வரிகளுக்கு இசைஞானி இளையராஜா உயிர் கொடுத்து படம் முழுக்க பின்னணி இசையால் டிராவல் செய்தார். வான் மேகம், ஏதேதோ எண்ணம், என்ன சத்தம், கால காலமாய், மாமாவுக்கு குடும்மா, சிங்களத்து சின்னக் குயிலே என அனைத்துமே இன்று வரை கேட்கப்படும் இனிமையான ராகங்கள். முதல் முறையாக கம்ப்யூட்டர் இசையை இப்படத்திற்காக பயன்படுத்தி இருந்தார் இளையராஜா.
தீபாவளி ரிலீஸ் :
தீபாவளி ரிலீஸாக நவம்பர் 1ம் தேதி 1986ம் ஆண்டு வெளியான இப்படம் 100 நாட்களையும் கடந்து திரையரங்குகளில் ஓடி கல்லா கட்டியது. கமலின் நடிப்பு, பாலச்சந்தரின் மேஜிக்கல் திரைக்கதை, இளையராஜாவின் இசை இவை மூன்றும் சேர்ந்து ரிப்பீட் ஆடியன்ஸை திரையரங்கிற்குள் வரவைத்தது. 37 ஆண்டுகளை கடந்தாலும் இன்றும் நினைத்தாலே இனிக்கும் வகையை சேர்ந்த ஒரு படமாக இருக்கிறது 'புன்னகை மன்னன்'.