(Source: ECI/ABP News/ABP Majha)
33 years of Ooru vittu ooru vanthu: சொர்க்கமே என்றாலும்.. இளையராஜா இசை...அசத்தல் காமெடி.. 33 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஊரு விட்டு ஊரு வந்து' !
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கேட்டகரியில் இடம்பெற்றிருக்கும் ‘ஊரு விட்டு ஊரு வந்து' திரைப்படம் இன்றுடன் 33 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
கங்கை அமரன் - ராமராஜன் காம்போவில் வெளியாகி, இன்றும் தொலைக்காட்சிகளில் பார்க்கும்போது நம்மை சலிப்படையச் செய்யாமல், ஜாலியாக பார்க்க வைக்கும் திரைப்படம் 'ஊரு விட்டு ஊரு வந்து'. இப்படம் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
தமிழ் சினிமாவில் அழகு எனும் வரையறைக்குள் அடங்காமல், அரை ட்ரவுசர், கலர் காலரா சட்டை என டிரேட் மார்க் உடையுடன் வலம் வந்து ரசிகர்களை ஈர்த்தவர் ராமராஜன். லிப்ஸ்டிக் போட்டு நடித்த நடிகர் என்பன போன்ற கேலிகளுக்கு ஆனாலும், எந்த நடிகருக்கும் கிடைக்காத அளவுக்கு அவரின் அடையாளம் இன்று வரை ஒரு ப்ரண்டாகவே முத்திரை பதிக்கப்பட்டுள்ளது.
மற்றொருபுறம், இசைஞானி சகோதரர் என்ற பின்புலம் இருந்தாலும் தனக்கான ஒரு பாதையை வகுத்துக்கொண்டு அதில் திறம்பட முத்திரையை பதித்தவர் கங்கை அமரன். திரைத்துறையில் ஒளிப்பதிவை தவிர மற்ற அனைத்து துறைகளிலும் ஸ்கோர் செய்தவர். பல வெற்றிப் படங்களை இயக்கிய கங்கை அமரன் படங்களில் திரைக்கதைக்கு இணையாக நகைச்சுவையை வைப்பது அவரின் ஸ்பெஷலிட்டி.
இவர்களது காம்போவில் வெளியாகி பலரையும் சிரிக்க வைத்து ஜாலியாகப் பார்க்க வைத்த திரைப்படம் ‘ஊரு விட்டு ஊரு வந்து’. நகைச்சுவை கலந்த த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படத்தின் காமெடி காட்சிகள் இன்றும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. அதிலும் கவுண்டமணி - செந்தில் சிங்கப்பூரில் செய்யும் அட்ராசிட்டி கொஞ்சம் நஞ்சமல்ல. ராமராஜன் பக்காவான ஜோடியாக கௌதமி.
கிராமத்து படங்களுக்கு இளையராஜாவை விட யார் பொருத்தமானவராக இசையமைக்க முடியும்? ராமராஜன் படங்களில் இசைக்கு எப்பவுமே ஒரு பெரிய பங்களிப்பு இருக்கும். அந்த வரிசையில் இப்படத்தில் இடம்பெற்ற 'சொர்க்கமே என்றாலும் அது நம் ஊர போல வருமா...' பாடல் அடடா! கேட்க கேட்க தெவிட்டாத தமிழ்நாட்டு கீதம் எனலாம். நம் நாட்டில் ஒரு தமிழனுக்கு கிடைக்கும் அத்தனை சுதந்திரத்தையும் ஒரு பாடலில் அடக்கிவிட்டனர்.
இளையராஜாவின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு பிரபலமான வானொலி நிறுவனம் சார்பில் 91 நாட்களுக்கு 'ராஜா ராஜாதான்' என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் இளையராஜாவின் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன. ரசிகர்களால் அதிகம் விரும்பி கேட்கப்பட்ட பாடல்களில் ஒன்றாக 'சொர்க்கமே என்றாலும்' பாடல் அமைந்தது குறிப்பிடத்தக்கது.