26 Years Of Suryavamsam: குடும்பங்கள் கொண்டாடிய சூரியவம்சம்.. ரிலீசாகி 26 வருடங்கள் ஆகிறது.. சுவாரஸ்ய தகவல்கள் இதோ..
சரத்குமார் நடிப்பில் சூரியவம்சம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 26 வருடங்கள் ஆகிறது.
இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த ஆடியன்ஸிடம் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை என்றால், ”குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி” என விளம்பரம் செய்துவிடுகிறார்கள். ஆனால் 80 மற்றும் 90-களில் குடும்பங்கள் கொண்டாடினால் தான் வெற்றியே. ஆமாம், 80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்கள் பெரும்பாலும் குடும்பங்களை மையமாகக் கொண்டதாகத்தான் இருந்தது.
அப்படி வெளியான திரைப்படங்களில் வெள்ளி விழா கண்ட திரைப்படங்கள் ஏராளம். அதில் வெள்ளி விழா திரைப்படங்களுக்கென பெயர் பெற்ற இயக்குநர் விக்ரமனின் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் சரத்குமார், ராதிகா, தேவயானி, மணிவன்ணன், சுந்தர் ராஜன், நிழல்கள் ரவி உள்ளிட்ட திரைப்பட்டாளமே நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த படம் தான் சூரியவம்சம்.
90’ஸ் கிட்ஸ்களின் எவர் க்ரீன் படம்
இன்றைக்கும் இயல்பு வாழ்க்கையில் ஒரே பாட்டில் கோடீஸ்வரன் ஆவதற்கு இது என்ன சூரியவம்சம் படமா என கேள்வி கேட்காத 90’ஸ் கிட்ஸ்களே கிடையாது. அந்த அளவிற்கு 90களில் பிறந்தவர்களுக்கு இந்த படம் எவர் கிரீன். இப்போது கே டிவியில் இந்த படம் ஒளிபரப்பப்பட்டால் கூட க்ளைமேக்ஸ் வரை படத்தை பார்க்கும் ரசிகர்கள் ஏராளம். அதிலும் இன்றைய சோசியல் மீடியா உலகில், “சின்ராச கையிலயே புடிக்க முடியாது” என்ற வசனம், “நல்லா இருந்துச்சா ஃப்ரெண்ட்” என்ற வசனமும் மீம் டெம்ளேட்டாக மாறிவிட்டது.
ஜனரஞ்சக திரைப்படம்
ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தில் குடும்ப செண்டிமெண்ட், 90களுக்கே ஏற்ற காதல், கோவையை மையமாக கொண்ட கதைக்களம் என்பதாலே மணிவண்னனின் குசும்பு காமெடி, எஸ்.ஏ. ராஜ்குமாரின் ஆல்பம் கிட் பாடல்கள், ரசிகர்களுக்கு பாசிட்டிவ் எண்டிங் கொடுக்கும் வகையில் க்ளைமேக்ஸ் என ஒரு ஜனரஞ்சக திரைப்படமாகவே இந்த திரைப்படம் இருந்தது.
தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்த படம் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 90களில் பெற்றோர்களை எதிர்த்து காதல் திருமணம் செய்ய இந்த படத்தின திரைக்கதை காதலர்களுக்கு தனி நம்பிக்கை கொடுத்தது. இன்றுவரை காதலித்து வரும் 90’ஸ் கிட்ஸ்களுக்கும் இந்த திரைப்படம் நம்பிக்கை கொடுத்து வருகிறது என்று கூட கூறலாம்.
26 வருடங்களை எட்டிய சூர்யவம்சம்
இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 26 வருடங்கள் ஆகிறது ஆனால் இன்று வரை இந்த படத்தை வெறுப்பவர்களே இல்லை. ஆல்பம் ஹிட் கொடுக்கும் எஸ்.ஏ. ராஜ் குமார் இசையில், ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ, சலக்கு சலக்கு சரிகை சேல சலக்கு சலக்கு, காதலா காதலா, நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப்பாக்குது என அனைத்து பாடல்களும் அன்றைக்கு பட்டிதொட்டி எங்கும் கொடிகட்டிப் பறந்தது. அன்றைக்கு இருந்த ஒருமுறை என்பது, படத்தின் ”ஒலிச்சித்திரம்”. இந்த படம் வெளியான பின்னர் அதிகம் விற்பனையான ஒலிச்சித்திர கேசட்களில் இந்த படமும் ஒன்று.
இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து, ஒருமுறை இயக்குநர் விக்ரமன், கூறியிருந்தார். அதாவது, திருமணம் முடிந்து சரத்குமாருக்கு தேவயானி சாப்பாடு பரிமாறும் காட்சி படமாக்கப்பட்டபோது, சரத்குமார் சாப்பாட்டை சாப்பிடுவார், கட் சொன்னதும் ஓடிப்போய் சாப்பாட்டை துப்பியவர், இயக்குநரிடம் சாப்பாடு கெட்டுவிட்டது என கூறினாராம்.
கோபப்பட்ட சரத்குமார்
அதேபோல், படப்பிடிப்பு தளத்திற்கு குறித்த நேரத்திற்கு வரும் சரத்குமார், ஒருமுறை அனைவருக்கும் முன்னதாகவே வந்து மேக்-அப் போட்டுக்கொண்டு, ”என்னுடைய காட்சி வரும்போது சொல்லுங்கள்.. நான் வருகிறேன்” என கூறிவிட்டு தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தாராம். இயக்குநர் அழைத்தபோது அவருக்கு பின்னால் சரத்குமார் இருந்துள்ளார். ஆனால் அது தெரியாமல், இயக்குநர் விக்ரமன், ”எங்க போனாரு இன்னும் போனுலயே கொஞ்சிட்டு இருக்காரா”? எனக் கூற, இதைக் கேட்ட சரத்குமாருக்கு கோபம் வரவே வேட்டியை கழற்றி வீசிவிட்டு சென்றுவிட்டதாக, நடிகர் சரத்குமாரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.