Shankar Meets Rajini: சிவாஜி தி பாஸ்-ன் 15ம் ஆண்டு: நடிகர் ரஜினியை சந்தித்த இயக்குநர் சங்கர்!
ரஜினியை சந்தித்தது எனர்ஜியாகவும், பாசிட்டிவ்வாகவும், அன்பாக உணர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்
நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் சங்கர். அது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் ரஜினியை சந்தித்தது எனர்ஜியாகவும், பாசிட்டிவ்வாகவும், அன்பானதாகவும் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். நடிகர் ரஜினி, நடிகர் ஸ்ரியா சரண் ஆகியோர் நடிப்பில் சங்கர் இயக்கி வெளியான சிவாஜி தி பாஸ் திரைப்படத்தின் 15ம் ஆண்டில் இவர்கள் சந்திப்பு நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Elated to have met our Sivaji the Boss @rajinikanth sir himself on this very memorable day marking #15yearsofSivaji Your Energy, Affection and Positive Aura made my day! pic.twitter.com/KVlwpRUKHM
— Shankar Shanmugham (@shankarshanmugh) June 15, 2022
முன்னதாக, இந்த ஜூன் 15 அன்று, திரையரங்கங்களில் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடுகிறது தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றித் திரைப்படங்களுள் ஒன்றான `சிவாஜி: தி பாஸ்’. இதனைக் கொண்டாடும் விதமாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மறைந்த நடிகர் விவேக் ஆகியோர் நடித்த முக்கியமான காட்சி ஒன்றின் படப்பிடிப்புக் காட்சியை வெளியிட்டுள்ளது படத்தைத் தயாரித்த ஏவிஎம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம்.
கடந்த 2007ஆம் ஆண்டு, ஜூன் 15 அன்று வெளியான `சிவாஜி: தி பாஸ்’ திரைப்படம் மக்களின் பெரு வரவேற்பைப் பெற்றதுடன், பெரியளவில் வெற்றியும் பெற்றது. பிரம்மாண்ட இயக்குநர் எனப் பெயர் எடுத்த சங்கர், தமிழின் டாப் நடிகராக இருந்த ரஜினிகாந்த் ஆகிய இருவரும் முதல் முறையாக இணைந்ததால் தயாரிப்பின் போதே இந்தத் திரைப்படம் பெரிதும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் இருந்து மென்பொருள் உருவாக்கத்தின் மூலமாக பணம் ஈட்டிய எஞ்சினீயர் ஒருவர் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி, இலவசமாக கல்வி, மருத்துவம் ஆகியவற்றை மக்களுக்கு வழங்க நினைக்கிறார். அவரை ஊழல்வாதிகளான அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தடுக்க நினைக்க, அதனை அவர் எப்படி எதிர்க்கிறார், அவரது கனவு நிறைவேறியதா என்பதை பிரமாண்டமாகவும், சுவாரஸ்யமாகவும் பேசியிருந்தது `சிவாஜி: தி பாஸ்’ திரைப்படம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் `சிவாஜி’ என்று தனது சொந்தப் பெயரில் முதன்மைக் கதாபாத்திரமாக நடித்துள்ளார்.
மேலும் இந்தப் படத்தில் விவேக், ஷ்ரேயா சரண், சுமன், ரகுவரன், மணிவண்ணன், வடிவுக்கரசி முதலான நடிகர்கள் நடித்திருந்தனர். மேலும், இதில் ஒரு பாடலில் நடனம் ஆடியுள்ளார் நடிகை நயன்தாரா. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலும், இதன் சண்டைக் காட்சிகளை பீட்டர் ஹெயின் உருவாக்கியிருந்தார். ஒளிப்பதிவாளராக கே.வி.ஆனந்த், கலை இயக்குநராக தோட்டா தரணி ஆகியோர் பணியாற்றியிருந்தனர். 2007ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, `பிளாக்பஸ்டர்’ என அறிவிக்கப்பட்ட திரைப்படம், `சிவாஜி: தி பாஸ்’. ஊழல், கறுப்புப் பணம் ஆகியவற்றைப் பற்றி பேசிய இந்தத் திரைப்படம், பணமதிப்புநீக்கம் மூலமாக அதனை சரிசெய்ய முடியும் எனக் கூறியிருந்தது.