1 Year of Sita Ramam: மதம் கடந்து கடிதத்தில் இணைந்த மனங்கள்.. காஷ்மீரில் க்யூட் காதல்... ‘சீதா ராமம்’ வெளியாகி ஒரு வருஷம் ஆச்சு!
Sita Ramam :துல்கர் சல்மான் - மிருணாள் தாகூர் கெமிஸ்ட்ரி மிகவும் அழகாக படம் முழுக்க ட்ராவல் செய்தது. இருவருக்கும் இடையில் இருந்த அந்த கடிதப் போக்குவரத்து காதல் கோட்டை படத்தை நினைவூட்டியது எனலாம்.

மொழி, மதம் என அனைத்துக்கும் அப்பாற்பட்டது காதல் என்பதை மிக அழகான உணர்வுகளோடு பகிரப்பட்ட படம் தான் கடந்த ஆண்டு ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் - மிருணாள் தாகூர் நடித்த சீதா ராமம் திரைப்படம். இப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டை நிறைவடைகிறது. 'சீதா ராமம்' (Sita Ramam) படம் ஏற்படுத்திய தாக்கமே இன்று வரை ரசிகர்களின் மனங்களில் இருந்தது விலகவில்லை. அதற்குள் படம் வெளியாகி ஒரு ஆண்டை நிறைவு செய்துவிட்டதா என்ற கேள்வி அனைவர் மனத்திலும் எழுவது கேட்கிறது.
க்யூட்டான காதல் கதை
கடந்த ஆண்டு வெளியான காதல் படங்களின் வரிசையில் மிகவும் அலாதியான ஒரு உணர்வை பார்வையாளர்களிடையே கடத்திய ஒரு படம் சீதாராமம் என்றால் அது மிகையல்ல. காதல் காட்சிகள் ஒவ்வொன்றையும் மிகவும் ஆழமாக காட்சிப்படுத்திய அதே நேரத்தில் ஒரு ராணுவ வீரனின் நாட்டுப்பற்றையும் அழுத்தமாக காட்சிப்படுத்தியது படத்திற்கு பலமாக அமைந்தது.
ஒர்க் அவுட்டான கெமிஸ்ட்ரி
தெலுங்கில் முதலில் வெளியான இப்படம் பின்னர் தமிழ், மலையாளம் மற்றும் இந்தியில் வெளியாகி அங்கும் மாபெரும் வரவேற்பை பெற்றது. பாலிவுட் நடிகை மிருனாள் தாகூர், தெலுங்கில் அறிமுகமான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் சீதா மஹாலக்ஷ்மி எனக் கொண்டாடும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார்.
துல்கர் சல்மான் - மிருணாள் தாகூர் கெமிஸ்ட்ரி மிகவும் அழகாக படம் முழுக்க ட்ராவல் செய்தது. இருவருக்கும் இடையில் இருந்த அந்த கடிதப் போக்குவரத்து காதல் கோட்டை படத்தை நினைவூட்டியது எனலாம்.
இதயங்களை வென்ற மிருணாள்
ஹீரோயின் என்ட்ரி சீன், இடையே ஏற்பட்ட ட்விஸ்ட், ஹீரோவும் ஹீரோயினும் பிரியும் காட்சிகள் என படம் முழுக்க பல ரசிக்கும் படியான காட்சிகள் பார்வையாளர்களை கட்டி போட்டன.
க்ளீன் ஷேவ் சாக்லேட் பாயாக துல்கர் சல்மான் காதல் காட்சிகளிலும் சரி, நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் சரி கவனம் ஈர்த்தார். மிருணாள் தாகூரின் நடிப்பு படத்திற்கு உயிரோட்டத்தை கொடுத்தது.
காஷ்மீர் குளிரை கடத்திய கேமரா
காஷ்மீரின் குளிரை அப்படியே நமக்குள் கடத்தியது பி.எஸ்.வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு. தெலுங்கில் வெளியான இப்படம் 42 கோடிகளையும், தமிழில் 13 கோடிகளையும் உலகளவில் 97 கோடிகளையும் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படமாக அமைந்தது.
பான் இந்தியா நடிகராக வலம் வரும் துல்கர் சல்மானின் திரைப்பயணத்திலும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது சீதா ராமம் (Sita Ramam) திரைப்படம். இந்த அழகான காதல் கதை இன்றுடன் ஒரு ஆண்டை நிறைவு செய்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

