Cinema Headlines : விஜயுடன் கடைசியாக இணையும் சமந்தா...பெருமை சேர்க்கும் சூர்யாவின் கங்குவா..சினிமா செய்திகள் இன்று
இன்று (ஜூலை 1 ஆம் தேதி) இன்று திரையுலகில் வெளியான குறிப்பிடத் தகுந்த செய்திகளைப் பார்க்கலாம்
கங்குவா படத்தை பாராட்டிய பாடலாசிரியர் விவேகா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்தில் பாபி தியோல் , திஷா பதானி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். வீரம் , விவேகம் ,விஸ்வாசம் , அண்ணாத்தே உள்ளிட்ட படங்களுக்கு முன்னதாக ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் கங்குவா படத்தைப் பார்த்த பாடலாசிரியர் படத்தை பாராட்டியுள்ளார். ” 'கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்! இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்! இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம்... ” என்று விவேகா குறிப்பிட்டுள்ளார்.
தளபதி 69 படத்தில் சமந்தா
விஜயின் கடைசி படமாக உருவாக இருக்கும் தளபதி 69 படத்தை இயக்குநர் எச் வினோத் இயக்கவிருக்கிறார். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மாஸ்டர் , லியோ படத்தைத் தொடர்ந்து விஜய் படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.
சுனைனா திருமணம்
பிரபல நடிகை சுனைனா துபாயைச் சேர்ந்த பிரபல யூவியுபரான கலித் அல் அமேரி என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கல் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்கள் முன்பாக இந்த ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப் பட்டதாகவும் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப் படுகிறது. இது குறித்த அதிகாரப் பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
500 கோடியை எட்டிய கல்கி வசூல்
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள கல்கி படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. வைஜயந்தி மூவீஸ் தயாரித்துள்ள இப்படம் உலகளவில் முதல் நாளில் 191 கோடி வசூலித்தது. தற்போது படம் வெளியாகி மூன்று நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம். இதன்படி கல்கி படம் முதல் மூன்று நாட்களில் உலகளவில் 415 கோடி வசூலித்துள்ளது. மொத்தம் 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் மூன்றே நாட்களில் படத்தின் பெரும்பாலான செலவை திருப்பி எடுத்துள்ளது. தற்போது மொத்தம் நான்கு நாட்களில் கல்கி படம் உலகளவில் 555 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான வைஜயந்தி மூவிஸ் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.