TN Urban Election Results: 40 ஆண்டுகளுக்கு பிறகு வாய்ப்பு...! முதல் அட்டெம்ப்டில் கவுன்சிலரான மலையகத் தமிழர்
விருதுநகர் மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு பிரதான கட்சிகளின் சார்பில் போட்டியிட அளிக்கப்பட்ட வாய்ப்பில் மலையகத் தமிழரான தி.மு.க. வேட்பாளர் வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் காலை முதல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது மல்லாங்கிணர் பேரூராட்சி. இந்த பேரூராட்சிக்குட்பட்டு அமைந்துள்ளது இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்கள் வசித்து வரும் அண்ணாநகர் கிராமம். 7வது வார்டாகிய இந்த அண்ணாநகர் கிராமத்தில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்திரன் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியாவில் இருந்து இலங்கை சென்று தேயிலைத் தோட்ட தொழிலாளிகளாக பணிபுரிந்தவர்கள் மீண்டும் இந்தியா திரும்பியபோது அவர்களால் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அண்ணாநகர் கிராமம் கட்டமைக்கப்பட்டது.
பேரூராட்சி மறுவரையறை செய்வதற்கு முன்பாக வரையிலும், இந்த வார்டும், இந்த கிராமத்திற்கு அருகில் இருந்த கிராமமும் இணைந்து இருந்தது. இதன்காரணமாக, அண்ணாநகர் கிராமத்தினருக்கு பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் சார்பில் இதுவரை போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவ்வப்போது, சுயேட்சை வேட்பாளர்களாக மட்டுமே போட்டியிட்டு வந்தனர்.
வார்டு மறுவரையறைக்கு பிறகு அண்ணாநகர் கிராமம் புதிய வார்டாக உருவாகியது. இந்த நிலையில், 40 ஆண்டுகளில் முதன்முறையாக இதே கிராமத்தைச் சேர்ந்த மலையகத் தமிழர்களின் வாரிசுகளான புகழேந்திரன் தி.மு.க. சார்பிலும், விக்னேஸ்வரன் அ.தி.மு.க. சார்பிலும் போட்டியிட்டனர். மேலும், கம்யூனிஸ்டு, பா.ஜ.க. மற்றும் சுயேட்சை வேட்பாளர் உள்பட மொத்தம் 5 பேர் போட்டியிட்டனர். இந்த நிலையில், இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் காலை முதல் தி.மு.க. வேட்பாளர் புகழேந்திரன் முன்னிலை பெற்று வந்தார். வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் மொத்தம் பதிவான 533 வாக்குகளில் 392 வாக்குகள் பெற்று அவர் அபார வெற்றி பெற்றார்.
40 ஆண்டுகளில் முதன்முறையாக தங்கள் ஊரைச் சார்ந்தவர் வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றிருப்பதை, அந்த கிராம மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் படிக்க : TN Urban Election Results 2022 LIVE: ஜெயிக்கப்போவது யாரு? மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியை கைப்பற்றுவது யார்? அடுத்தடுத்து அப்டேட் இதோ!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்