விசிக கொடியுடன் பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஊருக்குள்ளே வரக்கூடாது - விழுப்புரத்தில் பரபரப்பு
திமுகவினர் பிரச்சார வாகனத்தை தடுத்தவர்களை தூக்கிச் சென்று சில இளைஞர்களை இழுத்துச் சென்று அப்புறப்படுத்தினர்.
விழுப்புரம் (Villupuram) : திருவெண்ணைநல்லூர் அருகே திமுக கூட்டணியில் உள்ள விசிக வேட்பாளர் ரவிகுமாரை ஆதரித்து பானை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க சென்ற உளுந்தூர்பேட்டை திமுக எம்.எல்.ஏவின் பிரச்சார வாகனத்தை ஊருக்குள் விடாமல் தடுத்து நிறுத்திய இளைஞர்கள், பிரச்சார வாகனத்தில் இருந்த விடுதலை சிறுத்தை கட்சி கொடியை அகற்ற சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியா கூட்டணியின் திமுக தலைமையிலான விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் துரை ரவிக்குமார் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அவருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விசிக வேட்பாளர் துரை. ரவிக்குமாரை ஆதரித்து உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உட்பட்ட திருவெண்ணைநல்லூர் ஒன்றிய பகுதியில் உளுந்தூர்பேட்டை திமுக எம்எல்ஏ மணிக்கண்ணன் மற்றும் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது பெரியசவலை கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க சென்றபோது பிரச்சார வாகனத்தை அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஊருக்குள் விடாமல் தடுத்து நிறுத்தி விடுதலை சிறுத்தை கட்சி கொடி பொருத்தப்பட்ட வாகனமும் பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டும் ஊருக்குள்ளே வரக்கூடாது என ரகளையில் ஈடுபட்டனர். அப்பொழுது உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ தலையிட்டு தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் உரிமை உண்டு யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் என்றும் வாகனத்தை தடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்ட போதும் அவர்கள் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கொடி அகற்றி சொல்லி எம்எல்ஏவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில்,
அதே கிராமத்தை சேர்ந்த திமுகவினர் பிரச்சார வாகனத்தை தடுத்தவர்களை தூக்கிச் சென்று சில இளைஞர்களை இழுத்துச் சென்று அப்புறப்படுத்தினர். இதனை எடுத்து பிரச்சார வாகனத்துடன் ஊருக்குள் சென்ற திமுக எம்எல்ஏ தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பானை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க சென்ற பிரச்சார வாகனத்தை தடுத்து விடுதலை சிறுத்தை கட்சி கொடியை அகற்றச் சொல்லி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது