Local Body Election | தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் சிக்கிய 9 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள்
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது, அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்களை வழங்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனை தடுக்க தேர்தல் ஆணையத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 8 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன, இந்த நிலையில் விழுப்புரம் அருகே உள்ள கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலத்தில் தாசில்தார் சங்கரலிங்கம் தலைமையிலான பறக்கும் படையினர் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கீழ்பெரும்பாக்கத்தை சார்ந்த குமரன் என்பவர் உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் பெண்கள் அணியும் ஜிமிக்கி கம்மல் 80 ஜோடி மற்றுக் தாலியில் அணியக்கூடிய மாங்காய் ஆகியவை கொண்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து பறக்கும் படையினர் குமரனிடமிருந்து 8 லட்சத்து 93 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பிலான 196 கிராம் (25 சவரன்) 80 ஜோடி கம்மல், தாலியில் கட்ட கூடிய மாங்காய் உள்ளிட்ட தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் உரிய ஆவணங்களின்றி தங்க நகைகள் கொண்டுவரப்பட்டதால் தேர்தலில் வாக்காளர்களுக்கு அளிக்க கொண்டு வரப்பட்டதா என்பது குறித்தும் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போன்று விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் மாதவன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுருந்த போது ராமலிங்கம் என்பவர் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு வந்த 97 ஆயிரம் ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்