Lok Sabha Election 2024: சிதம்பரத்தில் களமிறங்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்.. வேட்புமனுவை தாக்கல் செய்தார் திருமா!
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்களவை தேர்தல் 2024:
வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஒவ்வொரு கட்சியும் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர். எப்போதும் திமுக - அதிமுக என்ற கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும் நிலையில், வருகின்ற மக்களவை தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் பாஜக என்ற மும்முனை போட்டி நிலவுகிறது. அதேபோல், நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.
இன்றுடன் முடிவடையும் வேட்புமனு தாக்கல்:
மக்களவை தேர்தலுக்கான வேட்பமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் முடிவடைகிறது. பங்குனி உத்திரம் என்ற காரணத்தினால் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பெரும்பாலான கட்சி வேட்பாளர்கள் நேற்று முன் தினம் வேட்பமனு தாக்கல் செய்தனர். இதனால் நேற்று முன் தினம் மட்டும் 405 வேட்பாளர்கள் வேட்ப மனு தாக்கல் செய்ததாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது. இந்தநிலையில், இன்றே வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் இன்று திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வேட்பமனு தாக்கல் செய்ய உள்ளார். மேலும், இன்று திருமாளவனுக்கு முன்னதாக, பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக கூட்டணி கட்சியான தமாகா சார்பில் மக்களவைத் தேர்தலுக்கு போட்டியிடும் எஸ்.டி.ஆர் விஜயசீலன், தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாமக கட்சியின் வேட்பாளருமான அண்ணாதுரை, கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் என பலரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பானைச் சின்னம் கோரி விசிக வழக்கு..
பானைச் சின்னம் கோரி விசிக தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் செய்திருந்தது. அதற்கான பதில் ஏதும் வராத நிலையில், தற்போது பானைச் சின்னம் ஒதுக்க வேண்டி வழக்கு தொடர்ந்துள்ளது.