Trichy Constituency Lok Sabha Election Results 2024: “தேர்தலில் நிற்பதற்கு எனக்கு தனிப்பட்ட விருப்பம் இல்லை” - முன்னிலையில் இருக்கும் துரை வைகோ பேட்டி
திருச்சி தொகுதி மக்கள் என் மீதும், ஸ்டாலின் தலைமையிலான அரசின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையை வாக்குகளாக கொடுத்துள்ளனர் - மதிமுக துரை வைகோ
திருச்சி மக்களவை தொகுதிக்குள்பட்ட திருச்சி மேற்கு, கிழக்கு, திருவெறும்பூா், ஸ்ரீரங்கம், புதுக்கோட்டை, கந்தா்வக்கோட்டை ஆகிய 6 பேரவைத் தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து வாக்குபதிவு இயந்திரங்களை போலீஸ் பாதுக்காப்புடன் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜமால் முகமது கல்லூரியில் 3 அடுக்குப் பாதுகாப்பில் வைக்கப்பட்டு இருந்தது.
நாடு முழுவது நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. குறிப்பாக திருச்சியில் இன்று காலை 8 மணி அளவில் தபால் வாக்கு எண்ணிக்கை பணியும், 8.30 மணி அளவில் மின்னனு வாக்குபதிவு எண்ணிக்கையும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த வாக்கு எண்ணும் பணியில் 117 நுண் பாா்வையாளா்கள், 116 மேற்பாா்வையாளா்கள், 130 உதவியாளா்கள், 1,251 முகவா்கள் ஈடுபடுகின்றனா். இவா்கள் தவிர அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணிக்காக 13 கூடுதல் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
திருச்சி தொகுதியில் 7,57,130 ஆண் வாக்காளர்களும், 7,96,616 பெண் வாக்காளர்களும் 239 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 15,53,985 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 5,12,264 ஆண் வாக்காளர்களும், 5,36,844 பெண் வாக்காளர்களும் , 102 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 10,49,210 பேர் வாக்களித்தனர். ஆண் வாக்காளர்கள் 67.66 சதவீதமும், பெண் வாக்காளர்கள் 67.39 சதவீதமும், மூன்றாம் பாலினத்தவர்கள் 42.68 சதவீதமும் என மொத்தம் 67.52 சதவீதம் வாக்குகள் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் பதிவாகியுள்ளது. குறிப்பாக தபால் வாக்குகள் 8,658 சோ்த்து மொத்தம் 10,57,751 வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளது.
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு 25 சுற்று, திருச்சி மேற்கு 20, திருச்சி கிழக்கு 19, திருவெறும்பூா் 22, கந்தா்வக்கோட்டை 18, புதுக்கோட்டை 19, தபால் வாக்குகளுக்கு ஒரு சுற்று என மொத்தம் 124 சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
மேலும், வாக்கு எண்ணும் மையத்துக்கு 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது. அவசர ஊா்தியுடன், மருத்துவக் குழுவினரும் தயாராக உள்ளனா்.
தேர்தலில் நிற்பதற்கு எனக்கு தனிப்பட்ட விருப்பம் இல்லை - துரை வைகோ
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே திமுக கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இந்நிலையில் அவர் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜமால் முகமது கல்லூரி வளாகத்திற்கு வருகை தந்த போது செய்தியாளர்களை சந்தித்து பேசியது..
தற்போது வரை முன்னிலையில் இருப்பது மக்கள் என் மீதும், ஸ்டாலின் தலைமையிலான அரசின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையாகவே பார்க்கின்றேன்.
என் தந்தையிடம் தற்போது வரை பேசவில்லை, தேர்தலில் நிற்பதற்கு தனிப்பட்ட விருப்பம் எனக்கு இல்லை, எனினும் தொண்டர்களுக்காகவே தேர்தலில் நின்றேன். நான் முன்னிலையில் இருப்பது அவர்களுக்கும், கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெற்றி பெற்று திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு தேவையானவற்றை செய்து தருவேன் என்றார்.