TN Local Body Election: மயிலாடுதுறையில் ஒரே ஒரு ஊராட்சிக்கு மட்டும் நடந்த தேர்தல் - 47 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி
’’கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரே ஒரு ஊராட்சிக்கு, நடைபெற்ற ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் 47 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி’’
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த வேட்டங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதை தொடர்ந்து வேட்டங்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி காலியாக இருந்து வந்தது. இந்நிலையில் தற்பொழுது உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து தமிழ்நாட்டில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்திலேயே கொள்ளிடம் ஒன்றியத்தை சேர்ந்த ஒரே ஒரு ஊராட்சியான வேட்டங்குடியில் மட்டும் ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தல் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. இந்த வேட்டங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் மூன்று பேர் வாபஸ் பெற்றுக்கொண்டனர். மீதமுள்ள 5 வேட்பாளர்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இரண்டு வேட்பாளர்கள் அதிமுக மற்றும் திமுக ஆதரவிலும் மற்றவர்கள் 3 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் நின்றனர்.
இந்த ஊராட்சியை பொறுத்த வரை மொத்தம் ஒன்பது வார்டுகளில் 4,243 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு வேம்படி, வேட்டங்குடி கூழையார் உள்ளிட்ட மூன்று இடங்களில் மூன்று வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
இதில் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த வேட்டங்குடி ஊராட்சிக்கு, ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது இன்று வாக்கு எண்ணும் பணி ஒரே சுற்றாக நடைபெற்று முடிந்தது. அதில் அதிமுக ஆதரவில் போட்டியிட்ட எழிலரசி தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சண்முகத்தை விட 47 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.அதிமுக ஆதரவு வேட்பாளர் எழிலரசி 1101 வாக்குகளும், திமுக ஆதரவில் போட்டியிட்ட சண்முகம் பெற்ற வாக்குகள் 1054 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
இதேபோன்று மாவட்டத்தில் காலியாக உள்ள குத்தாலம் 15 வார்டு மற்றும் செம்பனார்கோவில் 30 வார்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், கிராம ஊராட்சியில் காலியாக உள்ள 15 வார்டு உறுப்பினர் பதவிகளில் தர்மதானபுரம், திருமுல்லைவாசல், வடிகால், திருவாலி உள்ளிட்ட 5 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் போட்டியின்றி தேர்வான நிலையில், மீதமுள்ள பட்டமங்கலம், பட்டவர்த்தி, திருமங்கலம், பெருஞ்சேரி,பெரம்பூர், கோடிமங்கலம் பெருஞ்சேரி, விளத்திடசமுத்திரம், கொத்தங்குடி, செம்பனார்கோவில் உள்ளிட்ட 10 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.