அரசியல் மாண்பை சிதைத்த அண்ணாமலை, விஜய்.. நடிகை வினோதினி கடும் விமர்சனம்!
சீமான் அவர்களை எழவிடாமல் அடித்துக் காலிபண்ணியதன் விளைவுதான் இன்று விஜய் போன்றோரின் வருகைக்குக்காரணம். இதற்கு திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும் என வினோதினி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டு அரசியல் மாண்பை அண்ணாமலை மற்றும் விஜய் ஆகிய இருவரும் சிதைத்து விட்டதாக நடிகை வினோதினி வைத்தியநாதன் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
2026ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இந்த முறை தமிழக அரசியல் களத்தில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சசிகலா ராமதாஸ் கூட்டணி ஆகியவை களம் காண்பதால் யாருக்கு எந்த தொகுதியில் வெற்றி கிடைக்கும் என்பதை கணிக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது.
அதேசமயம் தேர்தலுக்கு முந்தைய பல்வேறு கருத்துக்கணிப்பில் 2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகளை காட்டிலும் மிகப்பெரிய வித்தியாசத்தில் மக்கள் மாற்றத்தை கொடுக்க தயாராகி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் சேரன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களிக்க வேண்டும் என பகிரங்கமாக சமூக வலைதளத்தில் ஓட்டு கேட்டு வருகிறார். இதேபோல் பல்வேறு சினிமா பிரபலங்களும் தங்கள் அபிமான அரசியல் தலைவர்களுக்கு வாக்கு கேட்டு வருகின்றனர்.
விஜய், அண்ணாமலை மீது தாக்கு
இந்த நிலையில் நடிகை வினோதினி வைத்தியநாதன் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “இந்த எக்ஸ் வலைத்தளத்தில் இரண்டாவது முறை சொல்கிறேன். அண்ணன் சீமான் அவர்களை எழவிடாமல் அடித்துக் காலிபண்ணியதன் விளைவுதான் இன்று விஜய் போன்றோரின் வருகைக்குக்காரணம். இதற்கு திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும். சீமான் அவர்களை நல்ல அரசியல் செய்யவிடாமல் குடைச்சல் கொடுத்து அவரது திராவிட எதிர்ப்பைத் தீவிர படுத்தியதும் இவ்விருவருமே.
இன்று நடக்கும் தவெக நாடகங்களைப் பார்க்கும் பொழுது, தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா என்று அச்சமாக உள்ளது. பத்து வருடம், ஏன், ஐந்து வருடம் முன்புகூட இத்தனைக் கேவலமான அரசியல் செயல்பாடுகள் இல்லை. தமிழ்நாட்டு அரசியல் மாண்பைக்குறைத்து சிதைத்த இரு முக்கியமானவர் ஒன்று அண்ணாமலை, மற்றொன்று விஜய்” என பதிவிட்டுள்ளார். வினோதினியின் இந்த பேச்சுக்கு இணையவாசிகள் கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்தத்தளத்தில் இரண்டாவது முறை சொல்கிறேன். அண்ணன் சீமான் அவர்களை எழவிடாமல் அடித்துக் காலிபண்ணியதன் விளைவுதான் இன்று விஜய் போன்றோரின் வருகைக்குக்காரணம். இதற்கு திமுக அதிமுக இருகட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும். சீமான் அவர்களை நல்ல அரசியல் செய்யவிடாமல் குடைச்சல் கொடுத்து அவரது திராவிட…
— Vinodhini Vaidynathan (@VinodhiniUnoffl) April 8, 2026
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் தவெக தலைவர் விஜய்க்கு கிடைத்த வரவேற்பை பொறுக்க முடியாமல் நீங்கள் இப்படி பேச வேண்டாம் என நேரடியாகவே விமர்சித்து வருகின்றனர். விஜய்க்கு அரசியலுக்கு வரவும், அதிகாரத்தில் இருக்கவும் முழு உரிமை இருக்கிறது, நீங்கள் நடிகை என்பதால் பார்ப்பதெல்லாம் டிராமாவாக தான் தெரியும் என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்



















