Urban Local body Election ; வெவ்வேறு இடங்களில் பறந்த தேர்தல் பறக்கும் படை: கிலோ கணக்கில் சிக்கிய வெள்ளிப்பொருட்கள்
திருவண்ணாமலை மாவட்த்தில் வெவ்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ஆவணம் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட 4.25 கிலோ வெள்ளி மற்றும் 2 லட்சம் பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல், அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை 22ஆம் தேதி நடைபெறுகிறது. நகர்புற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைப்பெற்று முடிந்துள்ளது. எனவே, தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. அரசியல் கட்சியினரும் தேர்தல் களத்தில் வாக்கு சேகரிக்க தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கவும், விதிமீறல்களை தடுக்கவும் 42 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், காவல்துறையினர் என பறக்கும் படை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நகராட்சிக்கும், பேரூராட்சிக்கும் தலா 3 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 8 மணி நேரம் சுழற்சி முறையில் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி சுற்றி வேலூர் சாலை , ஆற்காடு சாலை , தேவிகாபுரம் சாலை , போளூர் சாலை ஆகிய வழித்தடங்களில் 3 தேர்தல் பறக்கும் படை குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று ஆரணி தேவிகாபுரம் சாலையில் ரோஸ்முத்து வட்டார வளர்ச்சி துணை அலுவலர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது அந்த வழியாக ஆரணியில் இருந்து தேவிகாபுரத்துக்கு சொகுசுகாரில் வந்த ராஜேந்திரகுமார் என்பவரின் வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் வெள்ளி கொலுசு , வெள்ளி குங்குமச்சிமிழ் வெள்ளிகாப்பு ஆகிய என மொத்தம் 4.25 கிலோ வெள்ளியை அவர்கள் ஆவணம் இல்லாமல் எடுத்து சென்றார். அதனை அறிந்த தேர்தல் பறக்கும் படையினர் 4.25 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து ஆரணி நகராட்சி தேர்தல் அதிகாரி தமிழ்ச்செல்விடம் ஒப்படைத்தனர். இதையடுத்து ஆரணி நகராட்சி தேர்தல் அதிகாரி தமிழ்ச்செல்வி 4.25 கிலோ வெள்ளி ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்டது உறுதியான பின்னர் வெள்ளி நகைகளை சீல் வைத்து கருவலத்தில் ஒப்படைத்தனர்.
அதே போன்று போளூர் துணை தாசில்தார் சிவலிங்கம் தலைமையில் ஏட்டு நிர்மல்குமார், பெண் காவலர் சங்கீதா உள்ளிட்ட பறக்கும் படையினர் இரவு 11 மணியளவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இலுப்பகுணம் கூட்ரோட்டில் அதிவேகமாக சென்ற ஒரு மோட்டார்சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த மோட்டார்சைக்கிளில் வந்த படவேடு மங்களாபுரம் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் எனபவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 2 லட்சத்தை வைத்திருந்தார். குடும்ப தேவைக்காக பிறரிடம் கடன் வாங்கி பணத்தை எடுத்துச் செல்வதாக அவர் கூறினார். ஆனால், அவரின் கருத்தை பறக்கும்படையினர் ஏற்கவில்லை. இதையடுத்து ரூபாய் 2 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து களம்பூர் தேர்தல் நடத்தும் அதிகாரி லோகநாதனிடம் ஒப்படைத்தனர். அவர், அந்தப் பணத்தை போளூர் சார் நிலை கருவூலத்தில் செலுத்தினார்.