Thanjavur Election Result: தஞ்சை தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி உறுதியாகிறது: நானும் சளைத்தவன் இல்லை என நோட்டாவும் முன்னேறுது
Thanjavur Lok Sabha Election Result 2024: ஒவ்வொரு சுற்று முடிவிலும் சுயேச்சை வேட்பாளர்களை விட நோட்டா பெற்று வரும் வாக்குகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் முரசொலி முதல் 3 சுற்றுகள் முடிவில் முன்னிலையில் இருப்பதால் அவரது வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு இடையில் 3 சுற்றுகள் எண்ணிக்கையில் ஒவ்வொரு சுற்றிலும் நோட்டா வாக்குகள் அதிகரித்து வருகிறது.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள், 30வது தொகுதி ஆகும். இத்தொகுதியில் 1952 ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடந்து வருகிறது.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் முன்பு ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், வலங்கைமான் (தனி) ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகள் ஆனது, தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் புதிதாக இடம் பெற்றன.
அதே போன்று நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த மன்னார்குடி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் புதிதாக இடம் பெற்றது. முன்பு தஞ்சாவூர் தொகுதியில் இருந்த திருவோணம், பாபநாசம், வலங்கைமான் ஆகிய தொகுதிகள் நீக்கப்பட்டன. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளும், பொது தொகுதிகளாகும்.
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. மன்னார்குடி, திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகும்
இத்தொகுதியில் இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்:
1952 -இரா. வெங்கட்ராமன் இந்திய தேசிய காங்கிரஸ், 1957 -இரா. வெங்கட்ராமன் இந்திய தேசிய காங்கிரஸ், 1962 -வைரவத்தேவர் இந்திய தேசிய காங்கிரஸ், 1971- எஸ்.டி.சோமசுந்தரம் திராவிட முன்னேற்றக் கழகம்,1977 எஸ்.டி.சோமசுந்தரம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 1979 (இடைத்தேர்தல்) எஸ். சிங்காரவடிவேல் இந்திய தேசிய காங்கிரஸ், 1980 எஸ். சிங்காரவடிவேல் இந்திய தேசிய காங்கிரஸ், 1984 எஸ். சிங்காரவடிவேல் இந்திய தேசிய காங்கிரஸ், 1989 -எஸ். சிங்காரவடிவேல் இந்திய தேசிய காங்கிரஸ், 1991 கே. துளசிய்யா வாண்டையார் இந்திய தேசிய காங்கிரஸ், 1996 -எஸ். எஸ். பழனிமாணிக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்
1998 -எஸ். எஸ். பழனிமாணிக்கம் திராவிட முன்னேற்றக் கழகம், 1999 -எஸ். எஸ். பழனிமாணிக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்,
2004 -எஸ். எஸ். பழனிமாணிக்கம் திராவிட முன்னேற்றக் கழகம், 2009 - எஸ். எஸ். பழனிமாணிக்கம் திராவிட முன்னேற்றக் ,
2014 - கு. பரசுராமன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 2019 -எஸ். எஸ். பழனிமாணிக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியோர் எம்பிகளாக இருந்துள்ளனர்.
தஞ்சாவூர் லோக்சபா தொகுதி பலதரப்பட்ட மக்களை பிரதிபலிக்கும் தமிழ்நாடு-ன் முக்கியமான தொகுதியாக உள்ளது. இந்தத் தொகுதியில் கடந்த 2019 ஆண்டில் 72.48 % வாக்குகள் பதிவாகியுள்ளன.
6 முறை எம்.பியாக இருந்த, தஞ்சை மாவட்டத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்ற எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவருக்கு பதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் புதிய முகமான முரசொலி என்பவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் இதே மாதிரி யாருமே எதிர்பாரத வகையில் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பரசுராமன் என்பவரை அதிமுக வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா. அவர் பலம் வாய்ந்த திமுக வேட்பாளரான டி.ஆர்.பாலுவையே தோற்கடித்து எம்.பியானார் என்பது வரலாறு.
அதே மாதிரி இப்போது முரசொலி என்பவருக்கு வாய்ப்பை வழங்கியது திமுக. தஞ்சாவூரில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் போட்டியிடவில்லையென்றால், தஞ்சை மாநகராட்சி துணை மேயராக இருக்கும் அஞ்சுகம் பூபதிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால், அவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு முரசொலிக்கு வாய்பை கொடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இளைஞரான புது முகத்திற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் பழனிமாணிக்கத்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இளம் வேட்பாளர் முரசொலி பின்னணி
தஞ்சை தொகுதியில் புதிய முகமாக களம் இறங்கிய முரசொலிக்கு மட்டும்தான் வேட்பாளர் அறிவிப்பின்போது முதல்வர் இரண்டு முறை இண்ட்ரோ கொடுத்தார். தஞ்சை முரசொலி என்று சொல்லிவிட்டு, முரசொலியே அங்கே நிற்கிறது என்றார். அப்படி முதல்வர் இரண்டு முரை இண்ட்ரோ கொடுத்துள்ள தஞ்சையின் திமுக வேட்பாளர் முரசொலி திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்னங்குடி கிராமத்தை சேர்ந்தவர். அந்த பகுதியில் செல்வாக்காக விளங்கிய எஸ்.கந்தசாமி நாட்டார் என்பவரது பேரன் தான் இந்த முரசொலி. கந்தசாமி நாட்டார் தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குநராக இருந்தவர்.
பி.எஸ்.சி. பி.எல். படித்துள்ள முரசொலியின் தந்தை ஊராட்சி மன்ற தலைவராகவும், தென்னங்குடி தொடக்க வேளாண்மை சங்க தலைவராகவும் பணியாற்றியவர், முரசொலி 2004 முதல் தென்னங்குடி ஊராட்சி பிரதிநிதியாகவும், 2006 – 2011 ஆண்டுகளில் தஞ்சாவூர் ஒன்றியக்குழு உறுப்பினராகவும், 2014 - 2020 வரை தி.மு.க பொதுக்குழு உறுப்பினராகவும், 2020 தஞ்சை வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு. 2022 ல் நடைபெற்ற தி.மு.க வின் 15 வது அமைப்பு தேர்தலில் தஞ்சை வடக்கு ஒன்றிய கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தஞ்சையை பொறுத்தவரை செல்வாக்கான, மக்கள் மத்தியில் மிகுந்த அறிமுகமான மனிதர்களுக்கே இதுவரை வாய்ப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தென்னங்குடி கிராமத்தை சேர்ந்த ஒன்றிய செயலாளருக்கு தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியது திமுக தலைமை. இந்நிலையில் திமுக வேட்பாளர் முரசொலி, தன் மீது தலைமை வைத்து நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் மூன்று சுக்கு வாக்குகள் முடிவில் 46 ஆயிரத்து 774 வாக்குகள் முன்னிலை பெற்று தனது வெற்றி வாய்ப்பை வலுவாக பதிவு செய்துள்ளார்.
நானும் இருக்கேன் இல்ல...
இந்நிலையில் ஒவ்வொரு சுற்று முடிவிலும் சுயேச்சை வேட்பாளர்களை விட நோட்டா பெற்று வரும் வாக்குகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. முதல் சுற்றில் நோட்டாவுக்கு 663, இரண்டாவது சுற்றில் 1308, மூன்றாவது சுற்றில் 1953 என்று நோட்டாவும் வலுவாக தனக்கு கிடைத்துவரும் வாக்குகளை உயர்த்திக் கொண்டே உள்ளது. நோட்டாவை விட ஏழு சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் வாக்குகளில் பின்தங்கி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.