BJP in Tamil Nadu: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!
BJP in Tamil Nadu: தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும், பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பது முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, இந்த முறை தமிழகத்தில் பா.ஜ.க.வின் குரல் ஓங்கி ஒலித்தது. அதுவும், பொதுவாக ஆண்டிற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகைத் தரும் நாட்டின் பிரதம அமைச்சர், தேர்தலுக்கு முன்பு கடந்த 4 மாதங்களில் மட்டும், 8 முறை தமிழகத்திற்கு வந்தார். கடைசியாக தியானம் செய்வதற்கு வந்ததையும் சேர்த்தால், சாதனை அளவாக 9 முறை தமிழகம் வந்திருக்கிறார் மோடி. அப்படியொரு திடீர் பாசம் தமிழகத்தின் மீது பாஜக-விற்கு வந்தது, தேர்தல் காரணமாக என்றால் தவறில்லை.
ஒரு கை பார்ப்போம் என களமிறங்கிய பா.ஜ.க:
இந்த முறை தேர்தலில், தமிழகத்தில் சாதித்துக் காட்ட வேண்டும் என்பதற்காக, மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஒரு படையே களமிறங்கியது. தி.மு.க., அ.தி.மு.க.விற்குச் சவால்விடும் வகையில், வீடு, வீடாக ஆதரவு கோருவது முதல் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி விடயங்களைப் பெரிதாக்குவது வரை, அனைத்திலும், திராவிட கட்சிகளுடன் நீயா? நானா/ போட்டிதான். அதுமட்டுமல்ல, போட்டியிட மாட்டேன் என கூறி வந்த மாநிலத் தலைவர் அண்ணாமலையே தலைமை சொன்னதால், கோவையில் களமிறங்கி போட்டியிட்டார்.
அதேபோன்று, பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிகளில், பெரும்பாலும் அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் அல்லது பெரும் நட்சத்திர வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். உதாரணத்திற்கு, பாரிவேந்தர், ஏசி சண்முகம், ஜான் பாண்டியன், தேவநாதன், செளமியா அன்புமணி, ராதிகா சரத்குமார் என பட்டியல் நீளும். எனவேதான், இந்தமுறை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, எட்டுத்திசைகளில் அனைத்து வகை வியூகங்களையும் அமைத்து ஒரு கை பார்த்துவிடுவோம் என களமிறங்கியது பாஜக.
மோடி முதல் நிர்மலா வரை:
குறிப்பிடத்தக்க வாக்குச்சதவீதம் பெற்று வந்த பாமக மற்றும் பல சிறு குறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தீவிர தேர்தல் பரப்புரை கண்டது பா.ஜ.க.. மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல முக்கிய பா.ஜ.க. புள்ளிகள் வாக்கு சேகரித்தனர். எனவே, இதுவரை தமிழகம் காணாத அளவிற்கு, பா.ஜ.க.வின் பரப்புரை வீச்சும் வேகமும் அதிகம் காணப்பட்டது. ஆனால், விளைவு, அதாவது மக்கள் தந்த பரிசு என்னவென்றால், வெற்றிகரமான தோல்வி.
இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கிய பிறகு, 19 இடங்களில் பா.ஜ.க. நேரடியாகப் போட்டியிட்டது. அதுமட்டுமின்றி, பாரிவேந்தர், ஏசி சண்முகம், தேவநாதன், ஜான் பாண்டியன் ஆகிய கட்சித் தலைவர்களும் பா.ஜ.க.வின் சின்னத்தில் என தாமரை சின்னத்தில் மொத்தம் 23 பேர் போட்டியிட்டனர்.
டெபாசிட் இழந்த தாமரை சின்ன வேட்பாளர்கள்:
தாமரை சின்னத்தில் போட்டியிட்டவர்களில், தமிழகத்தில் மட்டும் இந்த முறை 11 பேர் டெபாசிட் இழந்தனர். வட சென்னை, சிதம்பரம், கரூர், நாகை, பெரம்பலூர், நாமக்கல், தஞ்சாவூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டோர் டெபாசிட் தொகை இழக்கும் அளவிற்கு படுதோல்வியைச் சந்தித்தனர்.
பாஜக-விற்கு உற்சாகம் தரும் 2-ம் இடம்:
ஆனால், பாஜக-விற்கு தெம்பு அளித்த விடயம் என்னவென்றால், தாமரை சின்னத்தில் போட்டியிட்ட 23 இடங்களில், 9 இடங்களில் 2-ம் இடத்திற்கு வந்தனர். அதாவது, அ.தி.மு.க.வை பின்னுக்குத் தள்ளிவிட்டு, 2-ம் இடம் பிடித்தனர். இது அவர்களுக்கு உண்மையிலேயே வெற்றிகரமான தோல்வி. முன்னாள் மத்திய அமைச்சர் முருகன் போட்டியிட்ட நீலகிரி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட கோவை, ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு களமிறங்கிய தமிழிசை போட்டியிட்ட தென் சென்னை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மத்திய சென்னை, திருவள்ளூர், மதுரை, வேலூர் ஆகிய தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்து, தமிழக தேர்தல் வரலாற்றில் முக்கியத்துவம் பெற ஆரம்பித்துள்ளது பாஜக.
இம்முறை, அக்கட்சி இதுவரை இல்லாத அளவிற்கு, முதன்முறையாக இரட்டை இலக்கம், அதாவது 11.24 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, இனி பா.ஜ.க.வை எளிதாக கருதிவிட முடியாது என்ற தகவலும் மறைமுகமாக இதில் தெளிவாகிறது என்றால் மிகையில்லை.
“சிகிச்சை வெற்றி, ஆனால், நோயாளி மரணம்”:
ஒரு இடமாவது வென்றுவிட என்ற பா.ஜ.க.வின் கனவு மெய்ப்படவில்லை. ஆனால், தமிழகத்தில் தங்களை எளிதாக ஒதுக்கிவிட முடியாது, தாங்களும் ஒரு குறிப்பிடத்தகுந்த சக்தி என்பதை நிரூபிப்பதில் ஓரளவு வெற்றிப் பெற்றுவிட்டனர். இதை, “ஆபரேஷன் சக்சஸ் , ஆனால் பேஷன்ட் டெட்” என்று கூட சொல்லலாம். வெற்றிக் கிடைக்கவில்லை. ஆனால், காலூன்றிவிட்டது பாஜக என சொல்லுமளவுக்கு வாக்குச் சதவீதமும் இருக்கிறது. அதுபோல், இனிமேல் நோட்டாவை விட குறைவாக வாக்கு வாங்கும் கட்சி எனச் சொல்லமாட்டார்கள் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை சொன்னது மட்டுமல்ல, இந்தத் தோல்வியின் காரணமாக இரு மடங்கு வேகத்துடன் செயல்படுவோம் எனக் கூறியுள்ளார்.
பா.ஜ.க. பொய் சொல்வதாக விமர்சனம்:
தமிழகத்தின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாமக-வின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு, தாம் பெற்ற வாக்குகள் போல், வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்திவிட்டோம் என பாஜக சொல்வதாக ஒரு விமர்சனம் பரவலாக வைக்கப்படுகிறது. இது உண்மையாகவே இருந்தாலும், தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் தனித்துப் போட்டியிட்டால்தான், ஒவ்வொரு கட்சியின் செல்வாக்கும் தெரியவரும். அதற்கு வாய்ப்பு இல்லாத தேர்தல் சூழலில் (நாம் தமிழர் தவிர்த்து), கூட்டணியில் இருந்து போட்டியிட்டாலும், அவரவர் சின்னத்திற்கு கிடைக்கும் வாக்குகள், அந்தந்த கட்சிகளுக்கு உரியது என்ற பாஜக-வினர் வாதத்தில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை.
பா.ஜ.க.விற்கு எச்சரிக்கை மணி:
வாக்கு சதவீதம் மட்டும் உயர்த்தி வந்தால், தமிழகத்தில் பாஜக-வும் ஒரு கட்சியாக தேர்தல் களத்தில் நிற்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், வெற்றிகள் மட்டுமே வரலாற்றில் பதிவாகும். அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இல்லையென்றால், வாக்கு சதவீதம் மட்டும் வைத்துக் கொண்டு, வெற்றிப் பெறாமல் இருப்பது தேர்தல் அரசியலில் பெரிய பலனில்லை என்பது, தமிழகத்தில் பாஜக-விற்கான எச்சரிக்கை மணி.
பா.ஜ.க.வின் அடுத்த இலக்கு:
தமிழகம் முழுவதும் இருந்து வரும் தகவல்கள், பாஜக வெற்றிப் பெறும் சக்தியாக இன்னும் வளர வில்லை என்பதை உணர்த்துகின்றன. ஆனால், பாஜகவும், மோடியும், தாமரையும், அண்ணாமலையும் கடைக் கோடி வரை சென்று இருக்கிறார்கள் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன.
தற்போதைக்கு, என்னால் நான் கெட்டேன், உன்னால் நான் கெட்டேன் என்ற ரீதியில் அதிமுகவும் பாஜகவும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் தாக்கும் வார்த்தைப் போர் தொடங்கிவிட்டது. எது எப்படி இருப்பினும், தற்போதைய பாஜக-வின் வளர்ச்சி, 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக-விற்கு மட்டுமல்ல, திராவிட கட்சிகளுக்கும் பெரும் சவாலாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.