Nainar Nagendran: தர்மத்திற்கும், அதர்மத்திற்குமான போட்டி மகாபாரத போரை போல நன்மையிலேயே முடியும் - நயினார் நாகேந்திரன்
எல்லோரும் தாமரைக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறேன். இறைவனின் அருளால் வெற்றி வாய்ப்பு நிச்சயமாக இருக்கும் என நம்புகிறேன் - நயினார் நாகேந்திரன்
பாளையங்கோட்டை மகாராஜா நகர் ஜெயேந்திர பள்ளியில் பாரதிய ஜனதா கட்சி நெல்லை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "திருநெல்வேலி பாராளுமன்றத்தில் என்னுடைய வாக்கை பதிவு செய்து வந்துள்ளேன். எல்லோரும் தாமரைக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறேன். இறைவனின் அருளால் வெற்றி வாய்ப்பு நிச்சயமாக இருக்கும் என நம்புகிறேன் என்றார். தொடர்ந்து பணம் பட்டுவாடா குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆளுங்கட்சியினர் பல இடங்களில் 500 ரூபாய் 300 ரூபாய் என வாக்களிக்க கொடுத்து வருகின்றனர். பெயரளவுக்கு மட்டுமே வழக்கு பதிவு செய்கின்றனர். உடனே அவர்களே ஜாமினில் வெளியே விடுகிறார்கள். அதனால் அவர்கள் மீண்டும் பணம் அளிக்கிறார்கள். காவல்துறையினர் ஆளுங்கட்சி என்பதால் பயந்து உடனே உடனே விட்டு விடுகின்றனர். பணம் கொடுப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை. யாரையும் பிடித்து வழக்கு பதிவு செய்ய பயப்படுகிறார்கள்.
வாக்குக்கு பணம் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். இருந்தாலும் மக்கள் தாமரையை வெற்றி பெறச் செய்வார்கள் என நம்புகிறோம். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறோம். ஆனால் இதுவரை அது குறித்து எந்த நடவடிக்கை எதுவும் இல்லை என்றார். மேலும் இது பணநாயகத்திற்கும், ஜன நாயகத்திற்குமான போட்டி. தர்மத்திற்கும், அதர்மத்திற்குமான போட்டி. இந்த போட்டியில் மகாபாரத போர் எப்படி முடிந்ததோ அதே போல நன்மையிலேயே முடியும்" என்றார்.
முன்னதாக சபா நாயகர் அப்பாவு லெப்பைக் குடியிருப்பு பெரியநாயகிபுரம் ஆதித்திராவிடர் இந்து தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி எண் 99 - ல் தனது வாக்கைப்பதிவு செய்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “உலகில் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பது எல்லோருக்கும் பெருமை. மகாத்மா காந்தி அவர்களால் நாம் பெற்ற சுதந்திரத்தை பேணி காப்பாற்ற வேண்டியது மட்டுமல்ல, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கார் அரசியல் அமைப்பு சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். ஜாதி சமய இன வேறுபாடு இல்லாத சமுதாயம் தொடர அனைவரும் வாக்களிக்க வேண்டும்” எனக் கூறினார்.