வாக்குப்பதிவு எந்திரங்களை ஏற்றவிடாமல் திமுக தவிர அனைத்து கட்சியினர் முற்றுகை; பதற்றத்தில் மரக்காணம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சியில் வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்துச்செல்ல விடாமல் திமுக தவிர பிற கட்சிகள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் கலவரம் ஏற்பட்டது.
விழுப்புரம் : மரக்காணத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை ஏற்ற விடாமல் திமுக தவிர அனைத்து கட்சியினர் முற்றுகை. தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவுற்று வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக பாதுகாப்பு அறையில் வைக்கும் பணி நடைபெற்று வந்தது, அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட 5,6,7,11,12,13 ஆகிய வார்டு களுக்கான வாக்குப்பதிவு மரக்காணம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதனையடுத்து வாக்குபதிவு முடிவடைந்ததை தொடர்ந்து வாக்குப் பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லும் பணி துவங்கியது, அப்போது அதிமுக, பாஜக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள், கட்சியின் நிர்வாகிகள் பலர் வாக்குப்பதிவு எந்திரங்களை ஏற்ற விடாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவகள் கூறியதாவது:- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது வாக்குசாவடி உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக தியாக ராஜன் என்பவரை நியமனம் செய்து இருந்தனர், இந்நிலையில் தியாகராஜன் என்பவர் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதனால் அவருக்கு பதிலாக கடந்த 15-ஆம் தேதி மணிவாசகம் என்பவரை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகம் சார்பில் நியமித்துள்ளனர். நேர்மையாக தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றுவதன் காரணம் என்ன இதன் பின்னணியில் வாக்கு எண்ணிக்கைகளை மாற்றம் சதி வேலை உள்ளதா என்று சந்தேகம் உள்ளது எனக் கூறினர்.
இதன் காரணமாக வாக்குச்சாவடி முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக, பாமக, பாஜக சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வாக்குச்சாவடி முன்பு ஒன்று திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் வாக்குச்சாவடி பகுதி முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து காவல் துறை சார்பில் ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் அதிவிரைவு படைகள் வரவழைக்கப்பட்டு, முற்றுகையில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைந்து சென்ற பிறகு மின்னணு எந்திரங்களை பாதுகாப்பாக பாதுகாப்பு அறைக்கு கொண்டு சென்றனர்.
இதனையடுத்து அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக வைத்து சீல் வைக்கப்படும் என துணை காவல் கண்காணிப்பாளர் அருண் தெரிவித்ததை அடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்