Lok Sabha Elections 2024: தேர்தல் ஆதாயத்திற்காக மீனவர்கள் மீது அக்கறை இருப்பது போல பாஜக நடிக்கிறது - செல்லூர் ராஜூ காட்டம் !
தேர்தல் ஆதாயத்திற்காக மீனவர்கள் மீது அக்கறை இருப்பது போல பா.ஜ.க., நடிக்கிறது, 10 ஆண்டு ஆட்சியில் கச்சத்தீவை பிரதமர் மோடி மீட்டு எடுத்திருக்கலாமே என செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் 2024
தமிழ்நாட்டின் மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிட விரும்புபோர் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த 27ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அடுத்த நாளான 28ஆம் தேதியன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றன. பல்வேறு இடங்களில் வாக்குவாதங்கள், குழப்பங்களுக்கு மத்தியில் பல முக்கிய வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. சில நூறு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த சூழலில் பல்வேறு இடங்களில் வேட்பாளர்கள் பரபரப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரையில் செல்லூர் ராஜூ பேட்டி
மதுரை வண்டியூர் பூங்கா அருகில் உள்ள அ.தி.மு.க., தேர்தல் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
கச்சத்தீவு பற்றி பிரதமர் பேசுவது குறித்த கேள்விக்கு, "கச்சத்தீவை பற்றி பிரதமர் பேசுவது
தேர்தல் ஸ்டண்ட் தான். அண்ணாமலை புதிதாக ஏதோ கண்டு பிடித்தவர் போல பேசுகிறார். கச்சத்தீவு விவகாரம் குறித்து அண்ணாமலைக்கு எதுவும் தெரியவில்லை. கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க., பொய் சொல்கிறது. என்றால், பா.ஜ.க., பயங்கரமான பொய் சொல்கிறது. மோடி பத்து ஆண்டுகள் ஆட்சியில் கச்சத்தீவை மீட்டு எடுத்திருக்கலாமே. தேர்தலுக்காக மீனவர்கள் மீது அக்கறை இருப்பது போல நடிக்கிறார்கள்" என்றார்
அ.தி.மு.கவுக்கு பாமக உயிர் கொடுத்தது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தது குறித்த கேள்விக்கு,
"எங்கே தங்களுக்கு அதிகமான தொகை கிடைக்கும், ராஜ்யசபா சீட் கிடைக்கும் என எதிர்பார்த்து பாமக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. கலைஞர் குடும்பம் போல, ராமதாஸ் குடும்பமும் குடும்ப அரசியல் செய்கிறது. பாஜக கூட்டணியை ராமதாஸ் ஏற்கவில்லை, அன்புமணியின் அழுத்தத்தில் தான் ஏற்று கொண்டுள்ளார். அதிமுகவுக்கு பாமக உயிர் கொடுத்தது என அன்புமணி சொல்வதெல்லாம் பெரிய ஜோக் தான்" என்றார்
அதிமுகவுக்கும் அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றுவதில்லை என்ற முதலமைச்சரின் பேச்சு குறித்த கேள்விக்கு,
"தி.மு.க., கொண்டு வரும் திட்டங்களுக்கு கலைஞரின் பெயர் வைப்பதற்கு காரணம் என்ன ஏன் பெரியார் அண்ணா ஆகியோரின் பெயர்களை வைப்பதில்லை. அதிமுக திராவிட சித்தாந்தத்தில் சரியாகப் பணிக்கிறது.
திமுக பேரளவில் தான் அண்ணாவின் பெயரை பயன்படுத்துகிறது, திமுகவினர் கலைஞரையே மறந்து விட்டார்கள். தமிழகத்தில் மன்னர் பரம்பரையை ஒழித்தாலும் திமுகவின் வாரிசு அரசியலை ஒழிக்க முடியவில்லை" என்றார்
ஜெயலலிதா இருக்கும் போது இரண்டாம் கட்ட தலைவர்கள் இப்படி பேசியதில்லையே, எடப்பாடி வந்தவுடன் இது போல் பேசுகிறார்களா என்ற கேள்விக்கு,
"அதிமுகவில் ஜெயலலிதாவை திட்டாதவர் யாருங்க.. நாவலர், பண்ருட்டி ராமச்சந்திரன் எல்லோரும் ஜெ.வை திட்டினார்கள். ஜெயலலிதாவும் உதிர்ந்த ரோமம் என திட்டினார். யாரும் கூட்டணியில் வரவில்லை என்றால் கவலைப்படமாட்டார். வைகோவை 2011ல் அழைத்தார், அப்போது வந்திருந்தால் கட்சி நிலைத்திருக்கும். தமிழகத்தில்இரண்டு கட்சிகள் தான். ஒன்று அதிமுக, மற்றொன்று திமுக. இந்த தேர்தலிலும் அதைத்தான் மக்கள் பார்ப்பார்கள்" என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Pocso On BJP Shah : பைக் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை.. 15 வயது சிறுமியிடம் அத்துமீறிய பாஜக நிர்வாகி மீது போக்சோ வழக்கு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Latest Gold Silver Rate: வரலாறு காணாத உச்சம்.. ஒரே நாளில் ரூ.680 உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்..