(Source: ECI/ABP News/ABP Majha)
Urban local body election | பரோட்டோ, குட்டி குட்டி பீஸாக வெட்டப்பட்ட காய்கறி.. பிரச்சாரத்தில் கலக்கும் சேலம் வேட்பாளர்கள்..
திமுக வேட்பாளர் சாக்கடையை தூர்வாரி, சாலையில் குப்பைகளை அப்புறப்படுத்தி வாக்குகளை சேகரித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சேலம் மாநகராட்சியில் உள்ள 60 கூட்டங்களில் திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் என 618 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பல்வேறு அணுகுமுறைகள் கையாண்டு அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாநகராட்சியில் 18 ஆவது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சர்க்கரை ஆ.சரவணன் பனங்காடு பகுதியில் சாக்கடையை தூர்வாரி, சாலையில் குப்பைகளை அப்புறப்படுத்தி வாக்குகளை சேகரித்தார். மேலும், வெற்றி பெற்று கவுன்சிலர் ஆன பிறகு தொகுதியிலுள்ள அனைத்துப் பகுதிகளையும் சுத்தமாக வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் எனவே திமுகவுக்கு வாக்களியுங்கள் என மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதேபோன்று, சேலம் மாநகராட்சி 54 ஆவது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தங்கத்தாமரை இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த ஒரு உணவகத்தில் புரோட்டா போட்டுக்கொடுத்த வாக்குகளை சேகரித்தார்.
இதேபோல், 30 ஆவது வார்டில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கோகிலா செவ்வாய்பேட்டை பகுதிக்கு உட்பட்ட வார்டில் பாமகவினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். சௌராஷ்டிரா சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் பாமக சாதனைகளை சௌராஷ்ட்ரா மொழியில் எடுத்துரைத்து பாமகவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
இன்று வெள்ளிக்கிழமை என்பதால் சேலம் மாநகராட்சி 15 ஆவது வார்டு திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வின்சென்ட் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வரும் இஸ்லாமியர்களிடம் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
சேலம் மாநகராட்சி தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் 3 ஆவது வார்டு வேட்பாளர் சத்ரிய சேகர், 3 ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு என்னென்ன தேவை என்பது குறித்தும் தான் வெற்றிபெற்றால் இப்பகுதிக்கு என்னென்ன செய்வேன் என்பது குறித்து "நம்ம ஊர் செழிக்கட்டும்" "நல்வாழ்வு பெருகட்டும்" என தலைப்பிட்டு சேவை செய்யவே வாய்ப்பு கேட்கிறேன் என்ற வாசகங்களை உள்ளடக்கிய சிறிய புத்தகமாக வடிவமைத்துள்ளார். இதில் 3 ஆவது வார்டில் உள்ள பொதுமக்களுக்கு மக்கள் தன்னாட்சி நிதியம், பசுமை வெளி பகுதிகள், முதியோர் நல்வாழ்வு மையம், பூஜ்ஜிய குப்பை திட்டம் நவீன வடிகால் வசதி, நீத்தார் நினைவு பூங்கா உள்ளிட்ட 24 செயல்திட்ட அறிக்கை வெளியிட்டு வாக்கு சேகரித்து வருகிறார். மாநகராட்சி தேர்தலுக்கு செயல் திட்ட அறிக்கை வெளியிட்டு பாமக வேட்பாளர் வாக்கு சேகரித்து வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
சேலம் மாநகராட்சி 13 ஆவது வார்டில் தேமுதிக சார்பில் போட்டியிடும் நாராயணன் என்பவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்தின் போது அங்கிருந்த ஹோட்டலில் வாக்கு சேகரிக்க சென்ற அவர், அனைவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஹோட்டலில் காய்கறிகளை வெட்டிக் கொடுத்த ஆதரவு சேகரித்தார்.