Urban Local Body Election: சேலத்தில் மீண்டும் தனது ஆளுமையை நிரூபிக்குமா அதிமுக...! வெளியாகியது வேட்பாளர் பட்டியல்...!
’’பாஜக தனித்துப் போட்டியிடுவதை அறிவித்த சில மணி நேரங்களில் அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது’’
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சி, 138 நகராட்சி மற்றும் 490 பேரூராட்சி என அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையாளர் பழனி குமார் அறிவித்தார். இதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு மாநகராட்சி, 6 நகராட்சி மற்றும் 31 பேரூராட்சிகள் உள்ளன. சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் 50% பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் நடைபெற்ற அதிமுக, பாஜக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சென்னையில் இருந்து சேலம் திரும்பினர். அதன்பின் அதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார். பாஜக தனித்துப் போட்டியிடுவதை அறிவித்த சில மணி நேரங்களில் அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 10 சட்டமன்றத் தொகுதிகள் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. சேலம் மாவட்டத்தில் அதிமுகவிடம் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதுமட்டுமன்றி ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலிலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுக வெற்றி பெற்றாலும் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவை பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொந்த மாவட்டம் என்பதால் சேலம் மாவட்டத்தில் அதிமுக தனது ஆளுமையை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இன்று வெளியாகியுள்ள அதிமுக வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலானோர் அந்தந்த பகுதிகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள், முன்னாள் வார்டு செயலாளர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் மனைவி ஆவார்.
சேலம் மாநகராட்சி சேலம் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி திமுகவிடமும், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாமகவிடமும், சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுகவிடம் உள்ளது. அதிமுக கூட்டணியிலிருந்து பாமக ஏற்கனவே வெளியேறியுள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாநகராட்சி பகுதியில் மூன்று கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.