Local Body Election 2022 | முன்பு எதிர்ப்பு.. தற்போது மீண்டும் எட்டு வழிச்சாலையை கேட்டு திமுக மன்றாடுகிறது - சி.பி ராதாகிருஷ்ணன்
தமிழக மக்களின் நலனை திமுக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சேலம் மாநகராட்சி பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். சேலம் கருங்கல்பட்டி பகுதியில், மத்திய அரசின் சார்பில் செயல்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு அவர் வாக்கு சேகரித்தார்.
பின்னர் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவதால் எந்த பயனும் இல்லை என்றும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் மக்களின் குரலை மாமன்றத்தில் எதிரொலிப்பார்கள் என்றும் மக்களோடு மக்களாக செயல்பட்டு பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண்பார்கள் என்றும் பேசினார். ஏழை மக்களின் நலனுக்காக மத்திய அரசு முத்ரா கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி ஏழ்மையின் பிடியிலிருந்து மக்களை மீட்டு வர்த்தகர்கள் ஆக மாற்றி வருவதாக குறிப்பிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் விவசாயிககளின் கவுரவத்தை காக்கும் வகையில் கிசான் நிதி திட்டத்தினை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் நலனுக்கான திட்டங்கள் மத்திய அரசின் சார்பில் அதிக அளவில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதால் மக்கள் தோற்றுப் போய் விட்டதாக விமர்சித்தவர் தனியார் மருத்துவ கல்லூரிகள் பயன்பெற முடியாது என்பதற்காகவே திமுக தலைவர் ஸ்டாலின் நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாக திமுகவினர் சொல்வது பொய்யான குற்றச்சாட்டை மறுப்பதற்கு ஒரே ஆண்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு 11 மருத்துவ கல்லூரிகளை தமிழகத்தில் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது ஒன்றே போதும் என்று கூறினார்.
இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ”தமிழக நலனில் திமுக அரசு அக்கறை காட்டவில்லை என்றும் எதிர்க்கட்சியாக இருந்தபோது எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு தற்போது அந்த திட்டத்தை கேட்டு மன்றாடி வருவதாகவும் குறை கூறினார். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு இதுபோன்று கேட்பது சரி இல்லை என்று குறிப்பிட்ட அவர் சென்னை பெங்களூரு போன்ற நகரங்களுக்கு இணையாக சேலத்தை மாற்றும் வகையில் சேலம் சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை மீண்டும் கொண்டுவர பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் கூறினார். சேலம் சென்னை எட்டு வழி சாலை திட்டத்திற்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு இருப்பதாக கூறிய சி.பி.ராதாகிருஷ்ணன் சென்னைக்கு இணையாக சேலம் வளர்வது ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம்” என்றும் கூறினார்.