Prakash Raj: இதற்கு பெயர் திமிர் பிரதமர் மோடி! - கடுமையாக விமர்சித்த நடிகர் பிரகாஷ்ராஜ்!
நாடு முழுவதும் எங்கு திரும்பினாலும் மக்களவை தேர்தல் பற்றிய பேச்சு தான் சென்று கொண்டிருக்கிறது. மாநில மற்றும் தேசிய கட்சிகள் கூட்டணிகளை நிர்ணயிப்பதிலும், தொகுதிகளை பிரிப்பதிலும் முனைப்பு காட்டி வருகிறது.
மக்களவை தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என எந்த அரசியல் கட்சி சொன்னாலும் அது ஆணவம் மிக்கது என நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டமாக தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல்
நாடு முழுவதும் எங்கு திரும்பினாலும் மக்களவை தேர்தல் பற்றிய பேச்சு தான் சென்று கொண்டிருக்கிறது. மாநில மற்றும் தேசிய கட்சிகள் கூட்டணிகளை நிர்ணயிப்பதிலும், தொகுதிகளை பிரிப்பதிலும் முனைப்பு காட்டி வருகிறது. தமிழ்நாட்டிலும் மார்ச் 21 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ள நிலையில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.
மார்ச் 20 ஆம் தேதிக்குள் எந்தெந்த கட்சிகள், எந்த கூட்டணியில், எந்தெந்த இடங்களில் போட்டியிடப் போகிறது என்ற இறுதி பட்டியல் வெளியாகிவிடும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் தேர்தல் களம் சென்றுக் கொண்டிருக்கிறது. இதனிடையே பாஜக 3வது முறையாக மீண்டும் ஆட்சியமைப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. காங்கிரஸ் எப்படியாவது பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க திட்டம் தீட்டி வருகிறது.
பிரதமர் மோடி பேச்சு
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி மக்களவையிலும், பிப்ரவரி 18 ஆம் தேதி தெலங்கானாவின் நாகர்கர்நூல் நகரில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும் என தெரிவித்திருந்தார். அவரின் இந்த பேச்சு மிகுந்த பேசுபொருளாக மாறியது. மேலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை 400 இடங்களை வெல்வோம் என பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரகாஷ்ராஜ் காட்டம்
இப்படியான நிலையில் கர்நாடகா மாநிலம் சிக்மங்களூரில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடிகரும், அரசியல்வாதியுமான பிரகாஷ்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “420 செய்தவர்கள் தான் 400 இடங்கள் வெற்றி பெறுவோம் என பேசுவார்கள். இப்படி பேசுபவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் அது அவர்களின் ஆணவத்தை தான் பிரதிபலிக்கிறது. இந்திய ஜனநாயகத்தில் ஒரு கட்சி 400 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் வெல்வதற்கு வாய்ப்பே இல்லை. மக்கள் நினைத்தால் மட்டுமே உங்களால் வெற்றி பெற முடியும்.
ஆனால் தாங்களாகவே முந்திகொண்டு இத்தனை இடங்களை வெல்வோம் என கூறுவதற்கு பெயர் திமிர் என காட்டமாக பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
மேலும் படிக்க:Tamilisai Soundararajan: மக்களவைத் தேர்தலில் எங்கு போட்டி?- தமிழிசை அறிவிப்பு