PM Morarji Desai: இந்திராவுடன் முரண்! 30 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் மொரார்ஜி! சம்பவம் என்ன?
சுமார் 30 ஆண்டுகாலம் தொடர் ஆட்சியிலிருந்த காங்கிரசுக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரதமானார் மொரார்ஜி தேசாய்
தேர்தலில் தலைவர்கள் தொடர்பான அரிய தகவல்களை பவர் பக்கங்கள் என்ற தலைப்பில் தொடராக ஏபிபி நாடு தளத்தில் வெளியிட்டு வருகிறோம். 12வது தொடராக மறைந்த பிரதமர் மொரார்ஜி தேசாய் குறித்து காண்போம்.
குஜராத் மாநிலத்தில் உள்ள வல்சார் பகுதியில் எளிமையான குடும்பத்தில், 1896 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதி பிறந்தார். பிப்ரவரி 29-ந் தேதி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் வருடம் என்பதால், தனது 99 ஆண்டுகால வாழ்க்கையில் 25 முறைதான் பிறந்த தினத்தில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்வாகி ஆங்கிலேய அரசிடம் பணியாற்றி வந்தார். பின்னர், 1930 ஆம் ஆண்டு துணை ஆட்சியர் பதவியிலிருந்து விலகி சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற ஆரம்பித்தார். காந்தியின் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட இவர், உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட பல போராட்டங்களில் பங்கேற்று சிறைக்கும் சென்றார்.
அரசியல் பயணம் ஆரம்பம்:
காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர், 1937ல் முதல் முறை காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்ற போது மும்பை மாகாணத்தின் வருவாய் உள்ளிட்ட துறைகளின் இணை அமைச்சராக பணிபுரிந்தார். 1946ல் மும்பை சட்டப்பேரவை தேர்தலையடுத்து, உள்துறை மற்றும் வருவாய் துறை அமைச்சராக பதவியேற்றார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1952 ஆம் ஆண்டு மும்பையின் முதலமைச்சராக பதவியேற்றார். 1956, ஆம் ஆண்டு பிரதமர் நேருவின் அமைச்சரவையில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராக பதவியேற்றார். அதன்பிறகு 1958 ஆம் ஆண்டு முதல் 1963 ஆம் ஆண்டு வரை பிரதமர் நேருவின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவி வகித்தார்.
1963 ஆம் ஆண்டு காமராஜர் ஆலோசனையை ஏற்று, மூத்த தலைவர்கள் அரசு பொறுப்பிலிருந்து விலகி கட்சியை வலுப்படுத்த கட்சி பணிக்கு திரும்ப வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்று, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கட்சி பணிக்கு திரும்பினார்.
Power Pages-1: இந்தி எதிர்ப்பு முதல் இறுதிபயணம் வரை! தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்த அண்ணா!
பிரதமராக தேசாய்க்கு மறுப்பு:
1964 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த நேரு காலமானார். இதையடுத்து பிரதமராக தேசாய் விருப்பம் காட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 1966 ஆம் ஆண்டு சாஸ்திரி மறைந்தபோதும் பிரதமராக விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்திரா காந்தி பிரதமராக தேர்வானார். 1967 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை துணை பிரதமராக பதவி வகிக்கும் போது, இந்திரா காந்தி பிரதமராக பொறுப்பு வகித்திருந்தார்.
Power Pages 7: வரி கட்ட முடியாத நிலை! தோற்கடித்த தி.மு.க.வினரே வருந்தியது – காமராஜரின் அரசியல் களம்
காங்கிரஸ் பிளவு:
1969ல் இந்திரா காந்தியின் கருத்துக்களுக்கு முரண்பட்டு கட்சியின் மூத்த தலைவர்களான காமராஜர், மொரார்ஜி தேசாய் காங்கிரசைவிட்டு விலகி ஸ்தாபன காங்கிரசை உருவாக்கினர். இதனால் காங்கிரஸ் கட்சியின் பூட்டிய இரட்டை மாட்டு வண்டி சின்னம் முடங்கியது. 1971 தேர்தலில் இந்திரா காங்கிரசுக்கு பசு- கன்று சின்னமும், ஸ்தாபன காங்கிரசுக்கு ராட்டை சுற்றும் பெண் சின்னமும் வழங்கப்பட்டது. அத்தேர்தலில் இந்திரா காந்தி வெற்றி பெற்று பிரதமரானார். ஸ்தாபன காங்கிரஸ் 51 இடங்களை வென்று இரண்டாம் இடத்தில் வந்து, முக்கிய எதிர்கட்சியாக விளங்கியது.
ஜூன் 26, 1975 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவசர சட்டத்தை கொண்டு வந்தார். அதற்கு தேசாய் கடும் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, தேசாய் உள்ளிட்ட நாட்டில் உள்ள பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பல எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, 1977 ஆம் ஆண்டு அவசர சட்டம் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது.
தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி:
அப்போது, இந்திரா காந்தியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைத்த தேசாய் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி வைத்தார். ஸ்தாபன காங்கிரஸ், பாரதிய ஜனசங்கம், சோசலிசக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து ஜனதா கட்சியை உருவாக்கின. 1977 ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. குஜராத் மாநிலத்தின் சூரத் தொகுதியில் போட்டியிட்டு தேசாய் வெற்றியும் வெற்றார்.
அத்தேர்தலில் ஜனதா கூட்டணி வெற்றியும் பெற்றது. அதை தொடர்ந்து, இந்தியாவில் முதன் முறையாக காங்கிரஸ் அல்லாத கட்சி ஆட்சி பொறுப்பை பிடித்தது. இதையடுத்து, சுதந்திரம் அடைந்து சுமார் 30 ஆண்டுகள் தொடர்ச்சியாக இந்தியாவை ஆண்ட காங்கிரசின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து, யார் பிரதமர் என்ற கடும் போட்டியின் நடுவே, ஒருமனதாக மொரார்ஜி தேசாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, முன்னாள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரே காரணமாக அமைந்தார்.
பிரதமராக பதவியேற்றபின் உரையாற்றியதாவது, எவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டி உள்ளதோ, அவற்றை சரி செய்வோம். அச்சமின்றி நல்லதின் பக்கம் நில்லுங்கள். எங்கள் தவறுகளைச் சுட்டிக் காட்ட உங்களுக்கு உரிமை இருக்கிறது. நீங்கள் சொல்வதை நாங்கள் கூர்ந்து கேட்போம். தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டியது எங்களது கடமை. இதில் மக்களின் ஒத்துழைப்பை எதிர்பாக்கிறேன். நமக்கு பிறர் உதவி செய்வார்கள் என்று நினைப்பதை விட, நாம் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.உலகத்துக்கு சேவை செய்ய வேண்டும். அப்போதுதான் காந்தியின் கனவு நிறைவேறும் என பேசினார்.
ஒருமுறை ராமேசுவரம் கோயிலுக்கு வந்தபோது, தரிசனத்துக்காக ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தி வரிசையில் நின்று வழிபட்டார் என பலர் நினைவு கூறுகின்றனர். எளிமைக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மறைந்தார்.
Power Pages-11: இரட்டை இலைக்கு எதிராக வாக்கு சேகரித்த எம்.ஜி.ஆர். - காரணம் என்ன?