(Source: ECI/ABP News/ABP Majha)
டீ குடிக்க செல்வதையும் உடற்பயிற்சி கூடத்திற்கும் போவதையும் பார்க்கவா திமுகவுக்கு வாக்களித்தீர்கள்- ஈபிஎஸ் கேள்வி
தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியினால் எந்த நன்மையும் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்கவில்லை. புதிதாக எந்த திட்டத்தையும் திமுக அரசு மக்களுக்காக கொண்டுவரவில்லை - எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தூத்துக்குடியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர்கள் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ, எஸ்.பி சண்முகநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ”தமிழகமெங்கும் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். மாநகராட்சிகளில் அதிமுகவை சேர்ந்தவர்கள் தான் மேயராக அமர வேண்டும். இதுபோல் நகராட்சி, பேரூராட்சிகளில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களே வெற்றிபெற வேண்டும். அதற்கு இரவு பகல் பாராது கழக தொண்டர்கள் உழைக்க வேண்டும். தமிழகத்தில் நடைபெற்ற கிராமப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றிபெற்றதை அறிவோம். அதே வெற்றியை இந்த தேர்தலிலும் அஇஅதிமுகவுக்கு மக்கள் தர வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். இந்த உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலமாக திமுகவுக்கு சரியான பாடத்தை மக்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.
தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியினால் எந்த நன்மையும் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்கவில்லை. புதிதாக எந்த திட்டத்தையும் திமுக அரசு மக்களுக்காக கொண்டுவரவில்லை. அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கி கொண்டுவந்த திட்டங்களைத்தான் திமுக முதல்வர் ஸ்டாலின் இப்போது தொடங்கி வைத்து வருகிறார். அவர்,ஆய்வு பணி என்னும் பெயரில் நடைபயணம் போவதையும், 'டீ' குடிக்க செல்வதும், உடற்பயிற்சி கூடத்திற்கு போவதை பார்க்கவா மக்கள் வாக்களித்தனர். இதன்மூலமாக அவர் வீண் விளம்பரம் மட்டுமே அவர் தேடிக்கொள்கிறார்.
இதை எல்லாம் காட்டி மக்களை ஏமாற்ற முடியாது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவே மக்கள் திமுகவுக்கு வாக்களித்தனர். தேர்தல் சமயத்தில் திமுகவினர் 525 வாக்குறுதிகளை கொடுத்தனர். அதில் 200-ஐ நிறைவேற்றியதாக சொல்வது அணைத்தும் பச்சை பொய். குடும்ப தலைவிகளுக்கு ஊக்கத்தொகையாக மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என உறுதி கூறியதிலிருந்து, கல்வி கடன் தள்ளுபடி, முதியோர் உதவித் தொகை உயர்த்தி வழங்குதல் போன்றவற்றை நிறைவேற்றவில்லை. நகைக்கடன் தள்ளுபடி என்று சொல்லி 35 லட்சம் பேரை ஏமாற்றியுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு, வந்த பின்பு ஒரு பேச்சு. இதுதான் திமுக நிலைபாடு. மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்தும், தமிழ்நாட்டில் விலையை குறைக்கு திமுக அரசு மறுத்துவிட்டது. மக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு பொருள்கள் யாருக்கும் முறையாக வழங்கப்படவில்லை. தரமற்ற பொருள்களை வழங்கி மக்களின் வயிற்றில் அடித்த அரசாங்கம் திமுக. திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே கிடையாது.
கொள்ளையடிப்பதற்காகவே திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளோம் எனவே மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலர மக்கள் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கழக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.