பயங்கர பிளான்! 92 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த பாஜக - மத்திய பிரதேசத்தில் வெற்றி யாருக்கு?
Madhya Pradesh Election 2023: மத்திய பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் இன்னும் 2 மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில், அதற்கான தேர்தல் நவம்பர் 17ம் தேதி நடத்தப்பட உள்ளது.
![பயங்கர பிளான்! 92 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த பாஜக - மத்திய பிரதேசத்தில் வெற்றி யாருக்கு? MP Election 2023 BJP declares 92 more candidates in Madhya Pradesh election two more seats to be finalised பயங்கர பிளான்! 92 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த பாஜக - மத்திய பிரதேசத்தில் வெற்றி யாருக்கு?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/21/aa959f048dd1853d1e95b217104054ab1697903754720729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Madhya Pradesh Election 2023: மத்திய பிரதேசத்தில் கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகள் பாஜக ஆட்சிதான். பாஜகவின் கோட்டையாக கருதப்பட்டு வந்த மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 114 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் 109 இடங்களில் பாஜகவும் வெற்றிபெற்றது.
ஆனால், முதலமைச்சர் பதவியை பெறுவதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத், இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கிடையே தொடர் போட்டி நிலவியது. இறுதியில், கமல் நாத்துக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டதால் சிந்தியா அதிருப்தியில் இருந்து வந்தார்.
மத்திய பிரதேச தேர்தல்:
இறுதியில், சொந்த கட்சிக்கு எதிராக போர்க்கோடி தூக்கிய சிந்தியா, தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்தார். இதனால், ஆட்சி அமைத்த 13 மாதங்களில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்று, ஆட்சி நடத்தி வருகிறார்.
மத்திய பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் இன்னும் 2 மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில், அதற்கான தேர்தல் நவம்பர் 17ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது.
இந்த நிலையில், ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டுள்ளது. அதில், 92 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மொத்தமுள்ள 230 தொகுதிகளில் குணா மற்றும் விதிஷாவை தவிர்த்து 228 தொகுதிகளுக்கு இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளர்களை அறிவித்த பாஜக:
வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை செய்ய பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சியின் தேசியத் தலைவர் நட்டா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மாநில பாஜக தலைவர் வி.டி. சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 227 இடங்களில் பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் நேரடியாக மோதுகிறது. வேட்பாளர் அறிவிக்கப்படாத விதிஷா தொகுதி விதிஷா மக்களவை தொகுதியின் கீழ் வருகிறது. கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை, விதிஷா மக்களவை தொகுதி உறுப்பினராக இருந்தவர் சிவராஜ் சிங் சவுகான். எனவே, இந்த தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மத்திய பிரதேச தேர்தலில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்பட மூன்று மத்திய அமைச்சர்களையும் 4 எம்பிக்களையும் பாஜக களமிறக்கியிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)