'கோவை மாநகராட்சியில் திமுக கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும்’ - அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை
”கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளை வென்று கோவை மாநகராட்சியின் மேயர் என்ற பொறுப்பை ஏற்று சாதனை திட்டங்களை செயல்படுத்துவார்கள்”
கோவை மாநகராட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திமுக வேட்பாளர்களை ஆதரித்து, கோவையில் தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பரப்புரை மேற்கொண்டு வருகின்றார். இன்று ராஜவீதி, செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் செந்தில்பாலாஜி பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். கோவை ராஜ வீதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர் அரசின் நலத் திட்டங்களை எடுத்து கூறி, திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது பேசிய அவர், “பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், நகை கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி என எண்ணற்ற சலுகைகளை அறிவித்த நமது முதல்வர், கோவையில் உள்ள மோசமான சாலைகளை புதுப்பிக்க 200 கோடியும், தெருவிளக்குகள் பராமரிக்க 20 கோடி ரூபாயும் முதற்கட்டமாக ஒதுக்கியவர் நம் முதல்வர் இன்னும் ஏராளமான திட்டங்களை நம் முதல்வர் செய்ய உள்ளார். எனவே, திமுக மற்றும் கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ”நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் முதல்வரின் ஆசியுடன் எங்கு தேர்தல் பிரச்சாரப் பணிகளை துவக்கி உள்ளோம். செல்லும் இடமெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து எங்கள் வாக்கு உதயசூரியனுக்கு என்பதை உறுதி செய்துள்ளனர். திமுக அரசின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள், கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளை வென்று கோவை மாநகராட்சியின் மேயர் என்ற பொறுப்பை ஏற்று சாதனை திட்டங்களை செயல்படுத்துவார்கள். மாநகராட்சியை பொருத்தவரை 8 மாத காலத்தில் புதுப்பிக்காத சாலைகள் புதுப்பிப்பதற்கு 200 கோடி ரூபாய் நிதி தெரு விளக்குகள் பராமரிப்பதற்கு 20 கோடி ரூபாய் நிதியும் முதல்வர் வழங்கியுள்ளார். இது ஒரு முதல் கட்ட நிதி இன்னமும் விடுபட்ட சாலைகள் எவையெல்லாம் உள்ளது என்பதை கணக்கில் எடுக்கப்பட உள்ளது. அதற்கான திட்ட மதிப்பீடுகள் அனுப்பப்பட்டு அந்த நிதிகளையும் பெற்று கோவை மாநகராட்சியை பொருத்தவரை மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். தெரு விளக்குகள் முழுவதுமாக மக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியின் குடிநீர் தேவை என்பதை 10 நாட்கள் என விநியோகம் செய்யக்கூடிய நிலை கடந்த காலங்களில் இருந்திருக்கின்றன. முதல்வர் கோவை அரசு நிகழ்ச்சிகளுக்கு வந்தபொழுது 25 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது இரண்டு முறை ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யும் திட்டம் நடைமுறைக்கு வரும் என கூறியிருந்தார். அதற்கான பணிகள் செயல்பட தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள முதல் கோவை மாநகராட்சி மாறுவதற்கு அனைத்து பணிகளையும் முன்னெடுத்து எல்லாம் மக்கள் வாக்களிப்பதற்கு தயாராக உள்ளனர். பிரச்சாரப் பணிகளை மேற்கொள்கின்ற போது உற்சாக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். இதே நிலைதான் மாவட்டம் முழுவதும் செல்லக்கூடிய அனைத்து இடங்களிலும் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். எங்களுடைய வாக்கு முதல்வருக்கு என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். வெற்றி என்பது நிச்சயிக்கப்பட்ட வெற்றி உறுதி. கடந்த காலங்களை போல் இல்லாமல் தூய்மையான கோவை மாநகராட்சியாக மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த கூடிய மாநகராட்சி நிர்வாகம் ஆக இருக்கும் இன்னொரு முக்கிய பிரச்சனை என்னவென்றால், கடந்த காலங்களின் போது சிறு சிறு வீடு கட்டக்கூடிய நபர்களுக்கு வரைபடத்தின் அனுமதி ஒப்புதல் என்பது கடுமையாக இருந்தது. நிறைய தவறுகள் இருந்தது அந்த தவறுகள் களையப்பட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடியாக அந்த அனுமதி கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் எந்தவிதமான சிறு சங்கடங்களும் இல்லாத அளவிற்கு தூய்மையான நிர்வாகத்தை கோவை மாநகராட்சி மேற்கொள்வதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு உள்ளது” என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது, அவருக்கு திமுக மகளிர் அணியினர் சால்வை அணிவிக்க வந்த போது, பெண் குழந்தை ஒன்றை கையில் வாங்கி வைத்துக் கொண்டு, அவர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார்.