சேலம் மாநகராட்சியின் மேயர் ராமச்சந்திரன் மற்றும் துணை மேயர் சாரதா போட்டியின்றி தேர்வு.. முழு விவரம்..
சேலம் மாநகராட்சியின் மேயராக ராமச்சந்திரன் மற்றும் துணை மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாரதா தேவி போட்டியின்றி தேர்வு.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாநகராட்சியில் 6 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராமச்சந்திரன் திமுக மேயர் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார். இதன்படி சேலம் மாநகராட்சி மேயராக ராமச்சந்திரன் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டதால், மேயர் பதவிக்கான சான்றிதழை வழங்கினார் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்து ராஜ். சேலம் மாநகராட்சி மாமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று முன்தினம் மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் ராமச்சந்திரன் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்ததால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக மாநகராட்சி ஆணையாளர் அறிவித்தார். தொடர்ந்து அவருக்கு மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் சான்றிதழ் வழங்கி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் ராமச்சந்திரனுக்கு சார்பில் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த தேர்தலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், மாமன்ற உறுப்பினர்களும் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், பிற்பகல் நடைபெற்ற துணை மேயருக்கான தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதன்படி சேலம் மாநகராட்சியில் 7வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சாரதா தேவி துணை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். திமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகளுக்கு துணை மேயர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு வழங்கப்பட்டதால் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் துணை மேயர் பதவிக்காக போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இதையறிந்த சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு திருச்சியிலிருந்து சேலம் விரைந்தார். கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசிய அமைச்சர் பின்னர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளருக்கு வாழ்த்துக்கள் கூறினார்.
அதன்பின் துணை மேயர் காலம் மறைமுக தேர்தல் நடைபெற்றது. சாரதா தேவியை தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படாத நிலையில், துணை மேயராக சாரதா தேவி போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு வெற்றி பெற்ற சான்றிதழை சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் வழங்கினார். பின்னர், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். சேலம் மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான பதவியேற்பு விழா வரும் 9 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.